Thursday, June 12, 2008

இராப் பேய்கள்


இராப் பேய்கள் !!


தொலை தூரக் காற்றின்
துயரடுக்கு மாடிகளில்,
வாழ்வதெனச் சாவதிலும்.....
சாவதுமேல் என்கின்ற
எல்லோர்க்கும் என் வணக்கம் !!!


துருவப் பனிச் சேற்றில்
நட்டு வைத்த மரத்தைவிட
நகரும் மரமென நான் !


நெஞ்சில் பயம் அழுத்த
நிலைகழன்ற கதவினைப்போல்
ஆடிக்கிடக்கும் அகதி மரம் !


தெரியாத் தெருவெங்கும்
திரிந்தலைந்து......
புரியா உணவெல்லாம்
புசித்து....உயிர் தரித்து .....
பொட்டழித்துப்.. பூவழித்துப்...
புனிதமெனப் போற்றிவந்த
சொத்தழித்துப் போன
சோடை மரம் !!!


என் இனிய பனந் தோப்பில்
என்றோ மரித்த என்
பாட்டனுக்கும், பூட்டனுக்கும்....
"மார்க்கம் பீச்" சில்
மோட்சம் கொடுப்பதாகச் சொல்கிறார்கள்
பூணூல் அதிகாரிகள் !


வெள்ளைக்கார
இரைச்சலுக்கு மத்தியிலும்.......
சமஸ்கிருதம் அமளி துமளிப் படுகிறது !


சீ.என். கோபுரத்திற்கடுத்தபடி
பத்து நூறெனப் பணம் பறிக்கும்
தரகுக் குமாரர்கள் தான்
உயர்ந்து நிற்கிற தேசம் இது !


சோதிடக்காரன் தொலைத்த உயிருக்கு...
கோயில் குரு பரிகாரம் நடாத்துகின்றான் !!
காண்டம் வாசிப்பவன் நசித்த வாழ்வை...
கைநாடி பார்ப்பவன் பணப்பையுள்
கண்டு பிடிக்கின்றான்.!!!


ஆற்றாமை,துயரம்,அவலப்.......
பட்ட மானிடரை - இந்த
"இராப்பேய்கள்" இருந்தபடி
இரத்தமுறிஞ்சுகின்றன.


மனிதர் பயங்களை
முதலாக்கி - அப்பாவி
முதுகுகளில் சவாரி !!!

எந்தச் சோழியன் குடுமி
இங்கே சும்மா ஆடும் ???


வினா எழுப்புவனும் இல்லை - தக்க
விடை பகருபவனும் இல்லை !!!


எல்லா முகவரும்(ஏஜென்சி)
கடித்துத் துப்பிய...
விற்பனைக் குப்பையாய்
என் வாழ்வு !!!


இதில்....
வரி..வட்டி..வாடகை...எனும்
வெள்ளைக் கடதாசிகளுக்காய்
பம்பரமாகி போனது மீதி உயிர்.


"என் துயர் ஒளித்து நான்
உன் துயர் ஒளித்து நீ"


எம்மை நாமே ஏமாற்றி...
எரித்து...பகட்டுத் தெருக்களில்...
வெதும்பிச் சாகிற வெதும்பல் மரங்கள் !!


காலடி மிதிப்பில்
ஓசையில்லாமல் - நசுங்கிச்
செத்த எறும்புகளைப் போல
ஓசையில்லாமல்.......
என்னரும் இனத்தை......
இன்னும் எத்தனை காலம்
இந்த இராப் பேய்களுக்குக்
காவு கொடுப்பது ???????

1 comment:

Anonymous said...

அந்தப் பேய்,இந்தப்பேய்,இதில் எந்தப்
பேய் இது அண்ணோய்,

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter