Friday, November 21, 2008

அழுகையே ஈழவன் மொழியானது

ராஜபக்ஷே பிரதர்ஸ்! இலங்கையை இயக்கும் டீம்!
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008, ]
நவம்பர் மாதத்தை மகிந்தா ராஜபக்ஷேவால் மறக்க முடியாது. அவர் பிறந்த மாதம், அவர் இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மாதம். உறக்கத்திலும் விழிப்பிலும் அவர் நெஞ்சில் நிழலாடும் பிரபாகரன் பிறந்த மாதமும் இதுவே!
64-வது பிறந்த நாளை இந்த 18-ம் தேதி கொண்டாடுகிறார் இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியான மகிந்தா ராஜபக்ஷே! லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டும் அங்குள்ள முக்கிய கட்சிகள். இப்போதைய ஜனாதிபதி மகிந்தாவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும், லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள். சந்திரிகாவின் அப்பா பண்டாரநாயகாவும் மகிந்தாவின் அப்பா ராஜபக்ஷேவும்தான் அந்தக் கட்சியை ஆரம்பித்தவர்கள். நம்மூர் நெடுஞ்செழியன், அன்பழகன் போல ராஜபக்ஷே 'இரண்டாம் கட்டத் தலைவராகவே பின் தங்கிவிட, பண்டாரநாயகா குடும்பம் கட்சியை மொத்தமாக ஆக்கிரமித்தது. அவருக்குப் பின் மனைவி, மருமகன், மகள் சந்திரிகா என வாரிசுகள் வரிசையாக வந்ததை அமைதியாக வேடிக்கை பார்த்தது ராஜபக்ஷேவின் குடும்பம். இத்தனை அமைதியான குடும்பத்தில் இருந்து ஒருவரைத் தன் பின்னால் வைத்துக்கொண்டால் அடக்கமாக இருப்பாரே என்று மகிந்தாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் சந்திரிகா. அடுத்தடுத்த மாதங்களில் சந்திரிகாவுக்கு இறங்கு முகம். கட்சி, ஆட்சி இரண்டையும் ராஜபக்ஷே குடும்பம் கபளீகரம் செய்துவிட்டது. கொழும்புவில் தனி ஆளாக இப்போது இருக்கிறார் சந்திரிகா. அவரது குடியுரிமையைப் பறிக்கப்போவதாகச் சில மாதங்களுக்கு முன் வதந்தி பரவியது. இதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் பேசி, அவரை அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றியவர்கள் தமிழ் எம்.பி-க்கள்தான். இவ்வளவு பெரிய இந்தியாவுக்கே 80 மந்திரிகள்தான். ஆனால், 225 எம்.பி-க்கள் கொண்ட இலங்கையில் இப்போது 118 பேர் அமைச்சர்கள். 3 ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதும், அங்கிருக்கும் அனைத்துக் கட்சிகளையும் இரண்டாக உடைத்தார் ராஜபக்ஷே. கட்சி மாறிகள் அனைவருக்கும் மந்திரிப் பதவிகள் அளித்தார். இப்போது அவரது ஆட்சியை ஆதரிக்கும் எம்.பி-க்களில் 6 பேர் தவிர, அனைவரும் அமைச்சர்கள். இலாகா இல்லாத அமைச்சர்களே அதிகம். 'அட, அந்த 6 பேர் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கும் விறகுத் துறை, சுடுகாட்டுத் துறை என்று எதையாவது கொடுக்கக் கூடாதா?'' என்று எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நாடாளுமன்றம் கூடும்போதெல்லாம் தொடர்ந்து கிண்டல் செய்வார்கள். வருஷத் துக்கு இரண்டு முறை நாடாளுமன்றத்துக்கு ராஜபக்ஷே வருவார். ஆண்டு தொடக்கத்தில் அவையைத் தொடங்கிவைக்க வருவார். இப்போது அந்தச் சம்பிரதாயமும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. நிதி அமைச்சராகவும் ராஜபக்ஷே இருக்கிறார். எனவே, பட்ஜெட் சமர்ப்பிக்க சபைக்கு வருவார். மற்றபடி அவரது அனைத்து அலுவல்களும் அவரது அலரி மாளிகையில்தான். கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் இருக்கிறது இந்த மாளிகை. பொதுவாக ஜனாதிபதிக்கென, கோட்டைப் பகுதியில்தான் வீடு. ஆனால், அது பாதுகாப்பானது இல்லை என்று இங்கு வந்துவிட்டார் ராஜபக்ஷே. இந்தப் பகுதி, சிறப்பு உயர் பாதுகாப்பு வளையம் உள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு முறைப்படி இதற்காகத் தனிச் சட்டமே போட்டுள்ளார்கள். இதைச் சுற்றியுள்ள தெருக்கள், பள்ளிகள், விளையாட்டுத் திடல்கள், கடற்கரையோரம் அனைத்தும் இதில் அடங்கும். இங்கு இரண்டு பேருக்கு அதிகமாகக் கூடி நிற்கக் கூடாது. வாகனங்கள் போகலாம். நிற்க அனுமதி இல்லை. லாரி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ராணுவம், போலீஸ் வசம் இந்த இடங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தான் கலந்துகொள்ளும் அனைத்துக் கூட்டங்களையும் இங்குள்ள அரங்கத்திலேயே நடத்தி முடித்துவிடுவார் ராஜபக்ஷே. பெரும்பாலும் வெளி நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்வதில்லை. அலரி மாளிகையில் மட்டும் குண்டு துளைக்காத 31 வாகனங்கள் இருப்பதாகத் தகவல். ராஜபக்ஷேவின் மனைவி பெயர், ஷிராந்தி. இவர் வனிதா என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள். மூத்த மகன் நாமல், லண்டனில் சட்டம் படித்தவர். அரசு செலவில் இவர் அனுப்பப்பட்டதாகப் புகார்கள் சொல்லப்பட்டன. டென்னிஸ், அத்லெட்டிக் வீரரான இவர், இளைஞர்களுக்கான அமைப்பு ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். யாழ்குடா நாட்டில் நீச்சல் குளம் வைத்து நடத்தி வருகிறார். அடுத்த மகன் யோஹித்த, இலங்கை கடற்படையில் இப்போது பயிற்சி பெற்று வருகிறார். மூன்றாவது மகன் ரோஹித்த, கல்லூரி மாணவர். ராஜபக்ஷேவுக்கு 6 சகோதரர்கள், 3 சகோதரிகள். இவர்கள் அரசாங்கத்தின் பல்வேறு முனைகளை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவரது மூத்த அண்ணன் சாமல் ராஜபக்ஷே, போக்குவரத்து மற்றும் விவசாயத் துறை அமைச்சராக இருக்கிறார். இன்னொரு சகோதரர் கோத்தபயா ராஜபக்ஷே, பாதுகாப்புத் துறை செயலாளராக இருக்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன் புலிகள் இவருக்குக் குறி வைத்தார்கள். கோத்தபயா கலந்து கொண்ட கூட்டத்துக்குள் வெடிகுண்டு நிரப்பப்பட்ட ஆட்டோ திடீரென்று நுழைந்து வெடித்தது. இவருக்குப் பாதுகாப்பாக நின்றிருந்த இரண்டு கமாண்டோ படையினர் சம்பவ இடத்திலேயே இறந்தார்கள். அவர்களிடமிருந்து தெறித்த ரத்தம் கோத்தபயாவின் சட்டையை நனைத்தது. இன்னொரு சகோதரர் பசில் ராஜபக்ஷே. ஜனாதிபதியின் தூதராகச் சமீபத்தில் டெல்லி வந்து போனவர். அமெரிக்காவில் இருந்தவரைத் திடீரென்று அழைத்து நியமன எம்.பி-யாக ஆக்கினார் அண்ணன். அப்போது கட்சியில் எதிர்ப்பு கிளம்ப, ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். சாமல், கோத்தபயா, பசில் ஆகிய சகோதரர்கள் வைத்ததுதான் சட்டம். 'இலங்கை ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது!' என்று ரணில் விக்கிரமசிங்கேவும், 'ராஜபக்ஷே பிரதர்ஸ் கம்பெனியாக மாறிவிட்டது' என்று தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி-க்களும் கண்டனம் கிளப்புகிறார்கள். ஆட்சியை நடத்துவது முதல் வெளிநாடுகள் போய் ஆயுதங்கள் வாங்கி வருவது வரை இவர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது. ராணுவத் தளபதி லெஃப்டினென்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதியின் உத்தரவுகளை இவர்கள்தான் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இலங்கை ராணுவத்தின் முப்படைகளில் இருக்கிறார்கள். இதில் 10 ஆயிரம் பேர் விமானப் படையிலும், 20 ஆயிரம் பேர் கடற்படையிலும் உள்ளனர். 50 சதவிகிதப் படைகள் வடகிழக்கு மாகாணமான தமிழர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகள் ஏற்படுவது ராணுவத்தில் வழக்கமானதுதான். ஆனால், ராணுவத்தில் சேர்பவர்கள் சில மாதங்களிலேயே ஓடிப் போவது இங்கே அதிகமாக நடக்கிறது. சுமார் 14 ஆயிரம் பேர் இதுவரை ஓடிப் போயிருப்பதாகவும், அவர்களை மீண்டும் அழைத்து வர தேடுதல் தொடர்வதாகவும் இலங்கைப் பத்திரிகைகள் எழுதுகின்றன. 'ஒரு வீரனைத் தயாரிக்க அடிப்படையாக ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறது. ஒரு ராணுவ வீரன் ஓடும்போது ராணுவத்தின் கட்டமைப்பு சிதைகிறது!' என்று அவை எழுதுகின்றன. ராணுவத்துக்கு ஆட்களைத் திரட்டுவதைவிட, ஆயுதங்களைச் சேகரிப்பதில்தான் ராஜபக்ஷே அரசாங்கம் மும்முரமாக இருக் கிறது. சீனா, ஆயுதங்களைக் கொண்டு போய்க் குவிக்கிறது. 37.6 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதத் தளவாடங்களை கடந்த ஆண்டில் மட்டும் சீனா கொடுத்துள்ளது. போர் விமானங்கள், ரேடார்கள், கவச வாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகள், விமான எதிர்ப்புப் பீரங்கிகள், ஏவுகணைகள் இதில் அடங்கும். இவை தவிர, புத்தளம் மாவட்டத்தில் அனல் மின்நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. அம்பாந்தோட்டை துறைமுகம் ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் சீனாவால் அமைக்கப்படுகிறது. இதன் கட்டுமானப் பணி முடியவே இன்னும் 15 வருடங்கள் ஆகுமாம். சும்மா உதவுமா சீனா? பாகிஸ்தான் சென்ற கோத்தபயா ராஜபக்ஷே, சில உத்தரவாதங்களை அங்கிருந்தும் பெற்று வந்துள்ளார். இப்படிப் பல காரியங் களை சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் செய்து வருகின்றன. ராணுவம் இப்போது மூன்று முனைகளில் தீவிரமாக நிற்கிறது. கிளிநொச்சியைக் கைப்பற்ற 57-வது படையணியும், பூநகரியை நோக்கிய நகர்வில் 58-வது படையணியும் உள்ளன. மணலாறு பகுதியில் ஏராளமான படைவீரர்கள் நிற்கிறார்கள். இவை அனைத்தும் தளபதி சரத் பொன்சேகாவின் கண் அசைவில் இயங்குகின்றன. அவர் அடுத்த மாதம் ஓய்வு பெறப் போகிறார். கால நீட்டிப்பு கொடுக்கப்படலாம். 'இன்னும் நான் ஓய்வு பெறுவதற்கு ஒரு வருஷம் இருக்கிறது. புலிகள் அமைப்பில் 3 ஆயிரம் புலிகள் இருக்கிறார்கள். நாளன்றுக்கு 10 புலிகள் வீதம் அனைவரையும் முடித்துவிடுவோம்!' என்று கடந்த ஜனவரி மாதம் அறிவித்தவர் இவர். இந்த வாக்குறுதியைத் தொடர்ந்து 'வெற்றி வருடமாக' 2008 அறிவிக்கப்பட்டது. பிரதமர் பதவி வகிக்கும் ரத்தின விக்கிரமநாயகா, 'இந்த ஆண்டில் புலிகள் முழுமையாக ஒடுக்கப்பட்டு அதற்கான கொண்டாட்டங்கள் நடத்தப்படும்' என்று அறிவித்தார். ஆனால், இதில் 10 சதவிகிதம்கூட இன்னும் நிறைவேறவில்லை என்று சிங்களக் கட்சிகள் கொந்தளிக்கின்றன. அங்கு முக்கிய எதிர்க்கட்சி ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி. மூன்றாவது பெரியது ஜனதா விமுக்தி பெரமுனா. இவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ராஜபக்ஷே சமீபத்தில் நடத்தினார். நம்மூரைப் போலத்தான் முக்கிய எதிர்க்கட்சிகள் வராமல் கூட்டம் நடந்து முடிந்தது. நாடாளுமன்றத்தில் 24 இடங்களைக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இருந்தாலும், ராஜபக்ஷேவுக்கு இருந்த ஒரே ஆறுதல், கருணா அணி. புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்த கருணா, அந்தக் கூட்டத்தில் முக்கியமானவராக இருந்தார். அவருடன் இருந்த பிள்ளையான், இப்போது கிழக்கு மாவட்டத்தின் முதலமைச்சர். ஆனால், அவர்கள் இரண்டு பேருக்கும் ஆகவில்லை. 'கருணா, படையை மட்டும்தான் கவனிக்க வேண்டும், அரசியல் விவகாரங்களில் தலையிடக் கூடாது!' என்று நந்தகோபன் என்பவரைத் தலைவராக்கிய கூத்தும் அதற்குள் நடந்துவிட்டது. ராஜபக்ஷே அமைச்சரவையில் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் அமைச்சர்கள் இருந்தாலும், வட கிழக்கைச் சேர்ந்தவர் டக்ளஸ் தேவானந்தா மட்டும்தான். அடிக்கடி தமிழகம் வந்து போகக்கூடியவர். பல ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நிரந்தரமாகத் தங்கியிருந்தவர். ஆட்டோக்காரரிடம் கோபப்பட்டு துப்பாக்கி எடுத்துச் சுட்டதில் பிரபலமானவர். அதாவது டக்ளஸ், கருணா, பிள்ளையான் ஆகிய மூவரும் ராஜபக்ஷேவை ஆதரித்தாலும் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அதை வைத்தே இவர்களைத் தன் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார் பக்ஷே. விரைவில் கருணாவும் அமைச்சராக்கப்படலாம் என்று தகவல். தினந்தோறும் உறுமும் புத்த பிட்சுக்களைச் சமாளிப்பதிலும் அலறும் சிங்கள கட்சிகளுக்குப் பதில் சொல்வதிலும் ராஜபக்ஷேவின் காலம் ஓடிக்கொண்டு இருக்கிறது. வெற்றியோ, தோல்வியோ சண்டைச் சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தால்தான் இவர்கள் அமைதியாக இருப்பார்கள் என்று நினைக்கிறார் ராஜபக்ஷே. இன்னொரு பக்கம், தமிழர்களைச் சமாதானப்படுத்த அலரி மாளிகையில் வேட்டி கட்டி பொங்கல் வைக்கிறார். ஐ.நா. சபைக்குப் போய் தமிழில் பேசுகிறார். இதனால் எல்லாம் தமிழர்களைச் சமாதானப்படுத்திவிட முடியுமா என்ன? அழுகையே ஈழவன் மொழியானது. அவன் மனமே கோபம் பொங்கும் குகையானது!

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter