Saturday, December 20, 2008

தமிழ்தேசியவாதியும் கவிஞருமான தேவதாசன் காலமானார்

தமிழ்தேசியவாதியும், பிரபல எழுத்தாளரும், பரிசுத்த தந்தையும், கவிஞருமான தேவதாசன் காலமானார் !
மா.சித்திவினாயகம்




தமிழ்தேசியவாதியும், கவிஞரும், மாம்பழம் சுவாமி என அழைக்கப்படும் தேவதாசன் அந்தனி அவர்கள் கடந்த 14 ஆம் திகதி அமரிக்க நியூஜேசியில் காலமானார் என்ற செய்தி என் மனதைக் குடைந்தது. இவரை ரொறன்ரோவில் இவரது தம்பியார் ஞானம் அன்ரனி அவர்களின் மூலம் தான் முதன் முதலாக நான் சந்தித்தது. தன் இறுதி மூச்சுள்ளவரை இலங்கையின் தமிழர்கள் மீதான வன்முறைகளை வெளிக்கொணர்ந்த இவர் இறக்கும் போது வயது 63 ஆகும். இலங்கையின் வடபகுதியி;ல் கத்தோலிக்க பாதிரியாராக தமது பொதுவாழ்க்கையை தொடங்கிய இவர், தமிழ் கத்தோலிக்கர்கள் மத்தியில் மட்டுமல்லாது சகல மக்களுக்கும் உதவு கரங்களை நீட்டுகின்ற உன்னதமான மனிதராகத் திகழந்தவர்.1977 ஆம் ஆண்டு மாம்பழம் சாமி, "வளன்நகர்" என்ற நிலையத்தை மன்னாரில் ஆரம்பித்து அதில் இடம்பெயர்ந்த தமிழ் தோட்டதொழிலாளர்களுக்கு புகலிடம் அளித்தார் இலங்கை அதிகாரிகளின் பிரச்சினைக்காரணமாக தமது குருநிலையை விட்டு அமரிக்காவில் குடியேறினார். இந்தநிலையில், இவர் எழுதிய "ஆலம் விழுதுகள்". "மாம்பூக்கள்" போன்ற தமிழர் விடுதலை வரலாறுகளை எழுதினார். அத்துடன் சுனாமிளை நினைவூட்டி "வெட்ட வெட்ட தழைக்கும்" என்ற பாடலையும் எழுதினார். "விடுதலையின் வாசலில்" என்ற இறுவெட்டை அண்மையில் வெளியிட்ட இவர், மற்றும் ஒரு நூலை எழுதிக்கொண்டிருக்கும் நிலையிலேயே மாரடைப்பால் காலமானார் தேசதாசனின் இறுதிக்கிரியைகள், சனிக்கிழமையன்று டொரன்டோவில் நடைபெறவுள்ளன. இவர் மனைவியான மதி மகள்களான தேவிகா, ராதிகா ஆகியோருடன் வசித்து வந்தார். இவரது தம்பியார் ஞானம் அன்ரனி அவர்களும் ஒரு எழுத்தாளர் ஆவார்.






தந்தை மாம்பழம் தரணியில் மறைந்தார்!
காலத்தில் உதவும் தந்தை
கனிந்திடும் மகவின் சிந்தை
ஞாலத்தில் மனிதர்க் காக
நலிந்தவர் உளத்திற் காகப்
பாலமாய் நின்ற செம்மல்
பாருளோர் தம்மை விட்டுச்
சோலையாம் யேசு மன்றில்
சேர்ந்திடப் பிரிவு கண்டோம்!
மாம்பழம் என்றால் நல்ல
மனிதமே என்றே யாகும்
பூம்பொழில் தமிழீ ழத்தின்
புத்திரன் என்றே யாகும்
காம்பொடு பூக்கள் ஆகிக்
கனிநிலச் சாலை விட்டுப்
போம்பொழு தாற்றா தெண்ணிப்
பூமியில் வாடு கின்றோம்!
மாம்பழப் பூக்கள் நூலும்
விடியலின் வாயில் என்ற
தீம்தமிழ் நூற்கள் யாத்துத்
திவ்வியத் தமிழீ ழத்தின்
தேம்பிய பக்கம் எல்லாம்
தேடலாய் நின்ற சோதி
சாம்கொடை எய்தி விண்ணின்
சரித்திரம் கொண்டான் அம்மா!
மற்றவர் உதவிக் காக
வாழ்ந்தவர் மரித்துப் போனார்
பெற்றமண் நிலத்திற் காகப்
பேணிய உள்ளம் போனார்
உற்றதோர் நண்பன் என்று
உயர்ந்தவர் விட்டுப் போனார்
பற்றுளான் மாம்ப ழத்தார்
பாசமாய் என்றும் நிற்பார்!


தீவகம் வே.இராசலிங்கம்.

இன்றைய நாளில் பாதர் மாம்பழம் அவர்களுக்காகத்துதிப்போம். நன்றி.

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter