Sunday, March 01, 2009

மக்களின் மக்களே!!

எந்த நாட்குறிப்புமற்று அகதியின் நாட்குறிப்பு அழிந்து போய்விட்டதா?
என்று எண்ணி அங்கலாய்த்துக் கலாய்த்த மக்களின் மக்களே!!
சாலைமறியலுள் சரிந்து விழுந்தும்,கட்சிக்காரக் கெடுபிடிக்குள்ளே பதுங்கிக் கிடந்து உயிரைப்பிடித்தும்,
இலஞ்சக்காரப் பாதுகாவல்களுக்குள் இதயம் துடிக்க ஏங்கித் தவித்தும், சென்னை மாநகர நெரிசலிருந்து
நான் மீண்டு வரக் கொஞ்ச நாளாயிற்று. வந்தும் என்ன?? இன்று எல்லார் கதவையும் தட்டும் மரணம்.
இத்தனை கோர மரணத்தின் உள்ளும் இந்திய அரசியல் வேடதாரிகள் போடும் நாடகம். உலக வரலாற்றில்இதுதான் மிகப் பெரிய ஏமாற்று வித்தை..உண்மைக்கும் பொய்க்குமிடையே நிகழ்த்தப்பட்டுக்கொண்டு இருக்கின்ற கண்கட்டு வித்தை.
வசன கர்த்தாக்கள் தங்கள் வசனங்களைப் புணர்கின்றார்கள். கவிஞர்கள் கவிதை மூட்டைகளுடன் புறப்பட்டாயிற்று. சினிமாக்காரர்கள் தங்கள் புதிய படங்களுக்குப் புத்தம் புதிய சோகக்கதைகளை விலை கொடுக்காமலேயே பெற்றுக்கொண்டார்கள்.
பேருந்துகள் முன்பும் ரயில்கள் முன்புமாய் படுத்துப் பத்திரிகைகளில் பெரிய படங்கள் வந்தாயிற்று.
சிறைக்குப் போனவர்கள் தியாகிகளாகித் திரும்பினர்.
உண்ணாவிரதங்களும் சங்கிலி வரிசையும் புதிய பத்திரிகைகளையும் தொலைக்காட்சிகளையும் உருவாக்கிப் போயிற்று.
சட்டசபை ரஜினாமா நடுவண் அரசு ராஜினாமா என்ற கோசங்களெல்லாம் தொண்டையோடு தொணதொணத்துப் போயின.
மதுரவாயில் பெருந்தெருத்திறப்பிற்காக மன்மோகன் சிங்கிற்கு மாலைபோடுகின்றார்கள் அத்தனை மாந்திரீகர்களும்..
எது சரி எது பிழை என்றறியாது சடமாகிப் போனது ஜனம். பொலிசாரும் வக்கீல்களும் சிண்டைப் பிய்த்துக் கொள்கின்றார்கள்.
பள்ளிச்சிறுவனின் கற்களைபோல் ஆளுக்காள் கல்லெறிந்து கொண்டாடுகின்றார்கள். உலகமே சேர்ந்து நடத்துகின்ற தமிழின அழிப்பைச்
சரிபிழை பார்த்துக் கொள்கின்றது ஐ நா அமைப்பு. இத்தோடு பத்தாவது ஆளும் பற்றியெரிந்தாயிற்று.
பற்றியெரிந்தவர்களைப் பற்றிக்கொண்டு தன் கட்சி என்கட்சியென வியாபாரம் பேசுகின்றார்கள் கட்சி வியாபாரிகள்.
தமிழ்மானிடம் கதறக்கதறக் கொத்துக்கொத்தாக குடும்பம் குடும்பமாக அழிக்கப்படுகின்றார்கள் புலியழிகிறது என்கிறது பூமி.
தமிழகமெங்கும் இனஉணர்வுத்தீ என்றுமில்லாவகையில் பற்றியெரிகின்ற நேரம் இது.
இதனை அரசியல் வாதிகள் தங்கள் கையகப் படுத்திக் கொண்டு தம் வயிறு வளர்கப் படாத பாடுபடுகின்றனர். இந்த
முரண்பாட்டு அரசியல் வாதிகளால் நிறைந்துள்ள எந்தக்கட்சியும் தம் பதவியைத் துறந்து தமிழருக்கான
தியாகத்தை நிகழ்த்த தயாராகவில்லைஎன்பது வேதனயான ஆனால் வெளிப்படையான செய்தி..

.

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter