Wednesday, March 18, 2009

மாதா புரள்கிற மண் !

மாதா புரள்கிற மண் !
தமிழ்சித்தன்





புதர் புதராயும்....
மரத்தடி மரத்தடியாயும்...
குழிகள் குழிகளாயும்.....
ஒளித்துயிர் பிடித்தேன்.


கனவுகளைக் கூட மிச்சம்
வைக்காமல்
கண்கள் பஞ்சாகின.

கால்கள் நடைதளர்ந்தன.
கைகள் முறிந்து கிடந்தன.
நா உலர்கிறது.
வயிறு உள்ளிளுத்தது.


என் வன்னி வெளியெங்கும்
தசை கருகும்
நிண வாடை

அங்குல,அங்குலமாக
என்னை நோக்கி வருகிறது
தேசம் விதைக்கும் தீயின் கங்குகள்.

மேய்ப்பர்கள் ஏவிவிட்ட
எறிகணைகளில்
தணல் இல்லாமல்
உடல் எரிகிறது.


உயிர் ஊசலாடும் இந்தத்
தருணத்திலும் மேய்ப்பர்கள்
கேட்கிறார்கள் தங்களுக்குத் தீனி!!!


இரத்தமாய்ச் சிவந்து
முள்ளும், கல்லும்
கீறிக்கிளித்தும்,
மூடிக்காத்த
என் தேகத்தை
பதைக்கப் பதைக்க
நிர்மூலமாக்கிப் போகிறார்கள்
இந்த தேச பக்தர்கள்.


மக்களில் இரக்கவாளி,
மாதா என்பதால்
உங்களுள் என்னைச்
செரித்துவிடத் துடிக்கிறீர்கள்.


மதங்களைக்கடந்தும்,
மொழிகளைக்கடந்தும்
தாய்மை என்கிற
தூய்மையிலெல்லாம்
நம்பிக்கையற்ற
பேய்களின் தலைகளே!


இன்னும் ஏன் தாமதம்!!

வயிற்றில் இருக்கும் - என்
சேயினைக் கீறு


மேலும்......
உன் தாகமடக்க
என்தோலை உரி!


உலகம் பாராமுகமாய்விட்ட
என்னைச்
செருப்புகளாக்கி உன்
காலில் போட்டு மிதி !!


இன்னமும்..
நான் நம்புவது எதை...
நம்பாதது எதை.....
போ எல்லாம் முடிந்தபின்
யோனி விரியலில்
வெடிவைத்து மகிழ் !!!

tamilsiththan@gmail.com

2 comments:

தமிழ்நதி said...

"இன்னமும்..
நான் நம்புவது எதை...
நம்பாதது எதை....."

என்ன சொல்வது? மனம் எரிகிறது என்பதைத் தவிர.

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

நன்றி உங்கள் வருகைக்கு.
தமிழ்சித்தன்

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter