Sunday, May 24, 2009

ஈழ தேசியப் போராட்ட நாயகனின் மரணம்!


பல்வேறுபட்ட புனைகதைகளினூடாக மறுதலிக்கப்பட்டிருந்த புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் அவர்களின் மரணம் தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வெளியுறவுத்துறை செயலர் செல்வராசா பத்மநாதன் அவர்களினால் இன்று மறுபடி உறுதி செய்யப்பட்டுள்ளது.கனடாவில் இன்று வல்வெட்டித்துறை மக்கள் சங்கீத் மண்டபத்தில் தங்கள் தலைவனின் நினவஞ்சலிக்காக கூடி நிற்கின்றார்கள்என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.
புலிகளின் ஈழதேசியப்போராட்டத்தில் பல்வேறுப்பட்ட குறைபாடுகள் நேர்ந்திருந்தபோதும், மனம் தளராது மிகநுட்பமான யுக்திகளோடு போராட்டத்தைக்கட்டி
மக்களைப் போர்குணப்படுத்திய அவரின் மறைவு கவலையளிக்கிறது.
அன்னாரின் ஈகத்திற்கு அகதியின் நாட்குறிப்பு தன் தலைசாய்த்து அஞ்சலிக்கிறது.


ஈழ தேசியப் போராட்ட நாயகனின் மரணம்!
தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்: செல்வராசா பத்மநாதன்
[ ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2009, ]

தமிழீழ தேசியத் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும், தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச வெளியுறவுத்துறை செயலர் செல்வராசா பத்மநாதன் இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார்.



அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் வருமாறு,
தமிழீழ விடுதலைப்புலிகள்தமிழீழம்.
24 வைகாசி, 2009
தமிழீழத் தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்
தமிழ் மக்க்களின் அணையா விடுதலைச் சுடர்
தமிழீழ மக்களின் விடுதலைக்காகவும், செழுமையான எதிர்காலத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்து போராடிய தமிழீழ தேசியத் தலைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரும் தலைமைத் தளபதியுமாகிய மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சிங்கள ஆதிக்கப்படைகளுடனான போரில் வீரச்சாவினை தழுவியுள்ளார் என்பதை அனைத்துதமிழீழ மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் தாங்கொண்ணா துயருடன் அறியத்தருகின்றோம்.
கடந்த 37 வருடங்களாக தமிழீழ மண்ணில் பொங்கிப் பிரவாகித்த விடுதலை வரலாற்றின் ஆன்மாகவும் குறியீடாகவும் விளங்கியவர் எமது தேசியத்தலைவர். ஒரு கால்நூற்றாண்டுக்கு மேலாக அடக்குமுறைக்கு முகம்கொடுத்து நின்ற ஒரு தேசிய இனத்தின் வரலாற்றையே மாற்றுகின்ற விருப்போடும் துணிவோடும் நம்பிக்கையோடும் எதிரிக்கெதிரான விட்டுக்கொடுப்பற்ற ஒரு பெரும் விடுதலைப் போரை தலைமையேற்று நடத்தியவர் அவர். கற்பனைககு எட்டாத தற்தியாகமும், கட்டுப்பாடும், வீரமும், ஒழுக்கமும் நிறைந்த, உன்னதமான ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்பி, பெரும் படையணிகளோடும் ஒரு தனித்த தேசத்திற்குரிய நிர்வாகக் கட்டமைப்புகளோடும் கனரக ஆயுத வல்லமைகளோடும் போராட்டத்தை வழிநடத்தினார்.
அரசியற் போராட்டத்திற்கு இணையாக சமூக மாற்றத்திற்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். போராட்டக் களங்களில் எமது மகளிர் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்ததன் மூலம் எமது சமூகத்தில் பெண்களுக்கிருந்த தனித்துவமான பங்களிப்பை வெளிக்காட்டியவர் அவர்.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீதும், தமிழக மக்கள மீதும், உலகம் முழுவதும் பரந்து வாழும் உறவுகள் மீதும் அவர் கொண்டிருந்த பற்று மிகவும் ஆழமானது. தமிழர் போராட்ட வரலாறு நெருக்கடிகளை எதிர்நோக்கி, மீளமுடியாத கட்டத்தை எதிர்கொண்ட காலங்களில் அவற்றையெல்லாம் துணிச்சலோடு எதிர்கொண்டு விடுதலையை அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகர்த்தியவர் எமது தேசியத் தலைவர்.
தலைவரின் போராட்ட அனுபவமும், தற்துணிவும், வீரமுமே எவ்வித நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் உந்து சக்தியாக, எமது போராட்ட சக்கரத்தின் அச்சாணியாக இருந்திருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்து, சர்வதேச சக்திகளின் துணையுடன் ஒரு பெரும் யுத்தம் மீண்டும் எம்மீது திணிக்கப்பட்ட போது, தலைவர் அவர்கள் அதனைத்துணிவுடனேயே எதிர்கொண்டார்.
போர் நெருக்கடியான கட்டங்களை எட்டி எமது நிலப்பரப்புகள் எதிரியால் சுற்றி வளைக்கப்பட்டு ஒரு பெரும் யுத்தம் எம்மக்கள் மீது ஏவிவிடப்பட்டபோதும் தலைவர், தான் வாழ்ந்த மக்களுடனேயே நின்றார். மக்களதும் தளபதிகளினதும் தொடர்ச்சியான வேண்டுகோள்களையும் மீறி அவலப்படும் மக்களை விட்டு வெறியேற மறுத்தார். எமது மக்கள் எதிர்கொண்ட அத்தனை வலிகளையும் தானும் சுமந்தார். இறுதியில், விடுதலைக்கான இந்த நீண்டபாதையில், எந்த மக்களுக்காக ஆயுதமேந்தினாரோ அம்மக்களுடனேயே கடைசி மணித்துளிவரை நின்று போராடி வீரச்சாவடைந்தார். ’எம் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுங்கள்’ என்பதே அவரது இறுதிக் வேண்டுகோளாக இருந்திருக்கிறது.
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர்என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர் எங்கும் நிறைந்திருக்கின்றார். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. எம் மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலைப் பத்திரம். இதனையே எங்கள் மனங்களில் ஏந்துவோம். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.
எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.
தலைவரது இலட்சிய நெருப்பை எம் மனங்களில் ஏந்தி அவர் கடைசிவரை போராடிய எமது மக்களின் விடுதலையை வென்றெடுக்க உழைப்பதே அவருக்கான உண்மையான மரியாதையாகும். எமது தலைவரின் வீரச்சாவையிட்டு தம்மையோ ஏனையோரையோ வருத்திக் கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென அனைத்து தமிழ் மக்களையும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
எமது தேசியத் தலைவரோடு வீரச்சாவைத் தழுவிய அனைத்து தளபதிகளுக்கும் மாவீரர்களுக்கும் மக்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இம் மாவீரர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்பதை அறியத் தருகிறோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
செல்வராசா பத்மநாதன்அனைத்துலக வெளியுறவுச் செயலகம்தமிழீழ விடுதலைப்புலிகள்

முன்னுக்குப்பின் முரணாக பழ நெடுமாறன்.
விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19-05-2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார்.
இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19-05-2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார். இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன்.தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள அரசும், இந்தியாவில் உள்ள சில ஊடகங்களும் பரப்பிய செய்திகளைப் போல இச்செய்தியும் நம்பகத் தன்மையற்றது. ஆழமான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இச்செய்தி பரப்பப்படுகின்றது என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.
பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை. வேறு யார் என்ன அறிவித்தாலும் அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.இலங்கையில் சிங்கள இராணுவத்தின் கொடூரமானத் தாக்குதலின் விளைவாக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களும்,போராளிகளும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல், உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் மருத்துவ வசதியின்றி உயிருக்காக போராடி வருகின்றனர். மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்து, குடிநீர்வசதி இல்லாமல் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர். பாதுகாக்கப்பட்ட வலயங்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்ரவதைச் செய்யப்படுகின்றனர்.போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டு மறுபறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலைவெறித் தாக்குதலைச் சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.இக்கொடுமைகளையெல்லாம் மறைப்பதற்காகவும், திசைதிருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யானச் செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன.பிரபாகரன் எந்த இலட்சியத்திற்காகப் போராடி வருகிறாரோ அது இன்னமும் எட்டப்படவில்லை. தமிழீழ மக்களின் துயரம் தொடர்கிறது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும் தளபதிகளும் பிரபாகரனின் வழிகாட்டலுடன் அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் உறுதியுடன் களத்தில் போராடி வருகிறார்கள்.சொல்லொணாத் துன்பங்களுக்கு நடுவிலும் சிறிதளவும் மனந்தளராமல் தமிழீழ மக்களுடன் உறுதியோடு போராளிகளுடன் ஒன்றிணைந்து நிற்கின்றனர். எனவே இந்தப் பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும். இதுதான் அவரை நாம் மதிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் உரிய அடையாளம் ஆகும்.

6 comments:

Anonymous said...

இது நல்ல கூத்தடா.யாரை நம்புறது நாமடா?
சுந்தா

வெத்து வேட்டு said...

nedumaran may be sad that his payments will be cut..

Anonymous said...

உண்மையில் எங்கள் போராட்டம் எங்கே போகிறது.அவனவன் தன்ர பாட்டில அறிக்கைவிடவும்,கண்ணீர் அஞ்சலி பிரகடனப்படுத்தவும்,தமிழரைப் போடுதடியாக்கிப் அவர்களை நடுத்தெருவில் பிச்சை யெடுக்கப்பண்ணி
கற்பளித்து,காடுமேடெல்லாம் போட்டெரித்து சுட்டுப்பொசுக்கிப், பாழ்குழிகளில் பதுங்யிருந்தோரின் கதையை மேலே அமுக்கி முடித்து 50000 பேருக்கதிகமானோரை அடையாளம் தெரியாமல் கொன்று குவித்துவிட்டு இப்போ ஆர் ஆட்கள் சண்டை பிடித்தார்கள், ஏன்பிடித்தார்கள் எங்கே பிடித்தார்கள், என்று அறிக்கைவிடுகிறார்கள்.ஆளுக்காள் சிண்டைப் பிய்த்து மோதிக்கொள்வது போல் நடிக்கிறார்கள்.தமிழரைச் சாட்டி லண்டனுக்கு இலவசமாய் பிரயாணம் பண்ணும் வைகோ பாதி,நெடுமாறன் பாதி, சர்வதேச புலி மீதியெனப் பூச்சாண்டிகாட்டுகிறார்கள். அப்போ இவர்களை நம்பிச் செத்த அந்த இலட்சக்கணக்கான தமிழர்களைத் திட்டமிட்டுக்கழுத்தறுத்த துரோகிகளா இவர்கள்.இவர்களுக்கு வேண்டியதெல்லாம் பணம். அதைவிட வேறில்லை.புலியைச்சாட்டி வானொலி நடாத்தியும், தொலைக்காட்சி நடாத்தியும், பத்திரிக்கை நடாத்தியும்,கோவில் கடை பள்ளிக்கூடம்என வியாபாரம் பண்ணித் தமிழரை சுரண்டியவர்கள் இன்னமும் தமிழரைச்சுரண்ட வேறு வழிக்குத் திட்டமில்லாமால் ஆளுக்காள் மோதுகிறார்கள். ஏமாந்த தமிழனே இனியாவது விழித்துக்கொள். சுரணையிருந்தால்.
விஸ்ணு

Anonymous said...

நம்ப இனி என்ன இருக்கு! ஆளுக்காள்
இனி இருக்கிற தமிழனையும் வெட்டி கூறுபோடுங்கோ.தமிழ்மணத்தை குறைகூறியவடிகட்டின முட்டாள்களுக்கு இப்போ எல்லாம் புரியும் என நினைக்கின்றேன்.
ராஜி

Anonymous said...

வைகோ அறிக்கை



தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும், உலகத் தமிழர்களின் இதயநாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார். அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை. உரிய காலத்தில் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார்.

யுத்தகளத்தில் இருந்து வேனில் அவர் தப்பி ஓடும்போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று, ஒரு பொய்ச்செய்தியை சிங்கள அரசு முதலில் வெளியிட்டது. இரண்டு நாள்கள் கழித்து, நந்திக்கடல் பகுதியில் அவர் உடல் கண்டு எடுக்கப்பட்டதாக, இன்னொரு பொய்யைச் சொன்னது.

மே 19 ஆம் நாள் அன்று, ‘இதுதான் பிரபாகரனின் உயிர் அற்ற சடலம்’ என்று, முதலில் காட்டப்பட்ட அந்த உடலில், முகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்கள் பளிச்சிட்டன. முகம், நன்கு மழிக்கப்பட்டு இருந்தது. அவருடைய உடல் பருமனுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத உடல் அமைப்பு என்பதால், இது அக்கிரமமான பொய் என்பதை அறிந்து கொண்டோம்.

அவரது சடலம் கிடைத்தது என்றால், அவரது குடும்பத்தினர், மெய்க்காப்பாளர்கள் சடலங்கள் எங்கே? என்ற கேள்விக்கு, சிங்கள இராணுவத்தின் பதில் ஏற்கத்தக்கதாக இல்லை. பிரபாகரனின் சடலம்தான் என்பதை, மரபு அணு சோதவீனையால் மெய்ப்பிக்க வேண்டியது சிங்கள அரசின் கடமை ஆகும். பிரபாகரனின் தந்தையார், உயிருடன்தான் இருக்கிறார். எனவே, அவருடைய உடம்பில் இருந்து, சோதனைக்குத் தேவையானவற்றை எடுத்து, டி.என்.ஏ. சோதனையை நடத்தி, சந்தேகத்துக்கு இடம் இன்றி, இறந்தது பிரபாகரன்தான் என்று உலக நாடுகளுக்கு, சிங்கள அரசு ஏன் அறிவிக்கவில்லை?

அவர்களிடம் இருப்பதாகச் சொல்லப்பட்ட பிரபாகரனின் சடலத்தை, அவசர அவசரமாக எரித்துச் சாம்பலாக ஆக்கி விட்டோம்; இந்துமாக் கடலில் கரைத்து விட்டோம் என்று சிங்கள இராணுவத் தளபதி, கொலை வெறியன் சரத் பொன்சேகா அறிவித்ததன் மர்மம் என்ன?

இந்நிலையில், மே 18 ஆம் நாள் அன்று, பிரபாபரகன் உயிருடன் இருக்கிறார் என்று, ‘சேனல் 4′ என்ற இலண்டன் தொலைக்காட்சியில் அறிவித்த விடுதலைப் புலிகளின் அனைத்து உலகத் தொடர்புப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், திடீரென்று அந்தர் பல்டி அடித்து, ‘பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று அறிவித்தது, கடைந்து எடுத்த அயோக்கியத்தனமான துரோகச் செயல் ஆகும்.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு ஏகப் பிரதிநிதியாக அறிக்கை விடும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. மிக அண்மையில்தான், அவர் இந்தப் பொறுப்புக்கே நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களோடும், துரோகம் செய்து வெளியேறியவர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, விடுதலைப்புலிகள் அமைப்பில் குளறுபடிகளை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டு உள்ளதாகத்

தெரிகிறது. வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பிடிக்குள் பத்மநாதன் சிக்கி இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்து இருக்கின்றன.

தமிழ் ஈழத்தில் துன்பமும், துயரமும் சூழ்ந்து, ஈழத்தமிழ் மக்கள், மனித குலம் சந்தித்து இராத அவலத்துக்கும் அழிவுக்கும் ஆளாகி இருக்கின்றனர். ஈழத்தமிழ் இளம்பெண்கள், சிங்கள இராணுவ முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படு கின்றனர். தமிழ் இனத்தையே வருங்காலத்தில் சிங்களக் கலப்பு இனமாக்க, கொடியவன் இராஜபக்சே திட்டமிட்டு விட்டான். இரத்த வெறி பிடித்த புத்த பிக்குகள், புராதனமான தமிழர்களின் ஊர்களுக்கு, சிங்களப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று அறிவித்து உள்ளதை எண்ணும்போது, நம் இரத்தம் கொதிக்கிறது. ஏற்கனவே போராளிகளும், தமிழ் மக்களும் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டு விட்டனர். இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள், உணவு இன்றி, மருந்து இன்றி, உயிர் துறக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இப்படிப்பட்ட கொடுந்துயரில் ஈழத் தமிழ் இனம் சிக்கி வதைபடும் நேரத்தில், செல்வராசா பத்மநாதனின் அறிவிப்பு மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். ஈழத்தமிழ் மக்களும், தாய்த்தமிழகத்திலும், தரணி எங்கும் உள்ள தன்மான உணர்வு கொண்ட தமிழர்களும், இதை நம்ப வேண்டாம்; தலைவர் பிரபாகரன் அவர்கள், உயிருடன் இருக்கிறார். தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அனைத்து உலகப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர், அறிவழகன்,

தனது அறிக்கையில், பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்து உள்ளதையும் சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.

தலைவர் பிரபாகரன் அவர்கள் வென்றெடுக்கக் களம் அமைத்த இலட்சியங்களை வெல்லவும், ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கவும் உறுதிகொண்டு நம் கடமைகளைத் தொடர்வோம்.

Anonymous said...

வைகோ அவர்களே இருக்கு என்கிற பிரபாகரன் எங்கே இருக்கிறார் என்றால் உலகத்துக் கோடி தமிழர்களின் உள்ளங்களில் இருக்கிறார் என்று பதிலை நீவிர் அடுக்கு மொழியாக வைத்திருக்கிறீர்.உண்மையில் தமிழரைச் சாகவும் வாழவும் விடாத ஆள் நீங்கள். இல்லையெண்டால் ஜெயாவோடபோய்ப் பணத்திற்காகப் பந்தம் பிடிப்பியா?

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter