Monday, August 03, 2009

வாழ்வழிந்துபோன வன்னியும்…..

வாழ்வழிந்துபோன வன்னியும்…..
விசமத்தனக்காரரின் வேட்டையும்………
தமிழ்சித்தன்

எப்போது நெய்க்குடம் உடைந்து போகும். நாம் நாக்கால் நக்கிக் குடிக்க நல்லவழி பிறக்கும்?? என்று காத்திருந்த நாலுகால் பிராணிகளுக்கு வன்னியில் நடந்துமுடிந்த வன்கொடுமை வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. வால் சுருட்டிப் படுத்திருந்த அத்தனையும் இன்று வால் நிமிர்த்திக் கம்பீரமாக வலம் வரத்தொடங்கியிருக்கின்றன. புலித்தலமையின் சிதைவினால் ஏற்ப்பட்ட இடைவெளி மற்றும் தொடர்பின்மை ஆகியன முன்னுக்குப்பின் முரணான பல அறிக்கைகளுக்கு வழிவகுத்து விட்டிருக்கிறது.
“எப்போதும் கோழிகளும் அதன் குஞ்சுகளும் நாய்களுக்கு முன்னால்
ஓடிக்கொண்டேயிருக்கவேண்டும். நாய்களை என்றைக்காவது கோழிகள் துரத்த முற்படுகிற போது கோழிகள், நாயின் வாயில் இருக்கவேண்டும்”
எனும் இயங்கியலை மறுமுறையும் நிருபித்துப் போயிருக்கிறது வன்னிக்களமுனை.
புலிகள் வன்னியின் அதிகாரத்தைக் தம் கையகப்படுத்தி, வடகிழக்குப் பகுதியில் புலிகளைவிட்டால் தமிழர்களுக்கு வேறுவழியில்லை என்கிற நிலமையிருந்த வேளையில்தான், அந்த 30 வருடத் தமிழர்கனவுகளைச் சிதைத்தழித்துவிட்டு வன்னிப் பேரவலம் நடந்து முடிந்திருக்கிறது.
புலித்தலைவர் இருக்கிறார் என்றும், புலித்தலைவர் இல்லை என்றும் இருபக்க விவாதங்கள் அந்த இயக்கப் பிரமுகர்களிடையே முடிந்தபாடில்லாமல் இடம்பெறும் இன்றைய நாளில் புலித்தலைவர் உயிருடன் இருந்தால் அவர் தங்கள் இயக்கத்தவரை இப்படி இருவேறு கட்சியாக்கி மோதவிட்டிருப்பாரா என்கின்ற கேள்வி எழத்தொடங்கியிருக்கிறது.
இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்துள் சுதந்திரமாக வாழ முற்படுகிற மனிதர்களைப் போலவே தமிழ்மக்களும் வாழ்வதற்க்கான பலவழிகளையும் அழித்துப் போட்டதில் அன்னியச்சக்திகள், இராணுவம், விடுதலைப்புலிகள், தோன்றிமறைந்த மற்றைய இயக்கங்கள் அல்லது மறைக்கப்பட்ட மற்றைய இயக்கங்கள் தமிழ்சுயநல அரசியல் கட்சிகள் மற்றும் யாழ்ப்பாணச்சமூகத்துச் சீரழிவுச் சிந்தைகள் என நீண்டு கொண்டு செல்லும் பட்டியல்களில் கணிசமான பங்குகளை நாம் சொல்லலாம்.
இப்பேற்ப்பட்ட "தன்மூக்குப்போனாலும் எதிரிக்குச் சகுனம் பிழைத்தால் சரி" என்றெண்ணிய தன்புணர்வுக்காரர்களால்தான் இன்று இனம் அழிந்து இடர்ப்பட்டு, கையிழந்து, காலிழந்து, வாழ்விழந்து வழியிழந்து நிற்கிறது.
மந்திரிகளாக, நலன் புரித்தொண்டர்களாக ,பாராளுமன்ற உறுப்பினர்களாகப், போராளிகளாக என்று நாம் மக்களுக்காகவே பிறந்தோம் என்று மார்தட்டுகின்ற அனைத்துக் களவாணிகளும் மக்கள் முதுகில் சவாரிசெய்து அவர்களின் மூச்சில், தயவில் வாழப்பிரியபடுகிற பிணந்தின்னிகள்தான்.
அடைக்கப்பட்ட முகாம்களில் அந்தரித்து நிற்கின்ற இம்மக்களை உலகக் கண்களுக்கு விளம்பர விலங்காக்கி உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கிறது போக்கிரிகளின் அரசியல்.
அந்தப்பரிதாப்பட்ட மனிதரிடமே காசு கறந்து அடைக்கப்பட்ட முகாம்களிலிருந்து வெளியேவிடவும், பிறகு கடத்திச் சென்று பணம் பறிக்கவும், பிறகு இராணுவத்திற்கு அவர்கள் பற்றித் தகவல் கொடுக்கவும், மறுபடி அங்கிருந்து அவர்களை மீட்கும் மீட்பர்கள் போல பணம் பறித்து வெளியே கொண்டுவரவும்……. அடடா, தமிழனை வைத்து என்ன விளையாட்டப்பா விளையாடுகின்றார்கள் இந்தப் பிழைக்கத்தெரிந்த சதிகாரக் கும்பல்கள்.
இவர்களைவிட இதுதான் சாட்டென்று
புலிப்பிரமுகர்கள் திட்டமில்லா அரசியல்பேசி மறுபடி மக்களைச் சேர்க்க முனைகின்ற அதேவேளை எப்போதும் நாம் புலி எதிர்ப்பாளர் என்று வாய்ச்சவடால் விட்டுத் திரும்புகிற பக்கமெல்லாம் படுத்துப், பல்லிழித்து மாலைக்கும், விருதுக்கும் அலைகின்ற விபசாரக்கார அரசியல்காரர்களின் மாயவலைகள் மறுபுறம் தமிழர்களைத் திணற அடிக்கிறது. இவர்கள் புதிய புதிய புலி எதிர்ப்பு உச்சாடனங்களை, கனத்த மட்டைகள் பொருந்திய பெரிய பெரிய புத்தகங்களாக்கி உலகத்து மூலையெங்கும் விற்பதற்கு அலைந்து கொண்டிருப்பவர்கள். இவர்களது எழுத்துகள் மக்களுக்கு எதுவும் விளங்கிவிடாத வண்ணம் புரியாத சொல்லாடல்களில், அறியாத கவிதைவரிகளில் பூசி வர்ணம் அடிக்கப்பட்டு திட்டமிடப்பட்டு மக்களை ஏமாற்ற வலிந்து முயற்சித்து வருபவை. இதைவிட பிரபாகரன் என்ற பெயரை வலிந்து பயன் படுத்தி தங்களை ஒளியாக்கிக் கொண்ட, அல்லது கொள்ள முயற்சித்த பல பலவீனமான எழுத்தாள ஐயாக்களும், அம்மணிகளும் இப்போ அதைவிட்டுவிட்டு ஆன்மீகம், மானிடமேன்மை, கொல்லாமை, உலகஐக்கியம் என்று மக்களை ஏமாற்ற மாற்றுவழி தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
எது எப்படியோ வரலாறு காணமுடியாத பேழிவை தன்னினத்திற்குப் பெற்றுகொடுத்த, அல்லது பெற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கின்ற,இந்தச் சந்தர்ப்பவாதக் கும்பல்களை மக்கள் இனம் காணவியலாது. ஏனெனில் அவர்கள் எந்தநேரமும் எதற்காகவும் நிறம் மாறத்தக்கவர்கள் என்பது துரதிஸ்டவசமான உண்மை.

1 comment:

பாரதி said...

உண்மையில் ஏமாந்து ஏமாந்து எல்லோரிடமும் ஏமாளியாகிப்போன இனம் தான் எம் இனம். எம்மைவைத்து ஏமாற்றிபிழைத்தவர்கள்தான் இன்று ஏற்றத்தோடு இருக்கின்றார்கள். வெளிநாட்டிலும் உள்நாட்டிலும்.பேச்சுவன்மையைக்காட்டி உள்ளூர் வெளிய்யூர்களுக்குக் காசின்றிப் பயணித்து ஊர்பார்த்துப் பயணித்துக் கொண்டிருப்பவர்களும் அவர்கள்தான்.
பாரதி

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter