Wednesday, August 26, 2009

is this evidence of Sri Lankan 'war crimes'?

is this evidence of Sri Lankan 'war crimes'?





Thursday, 27 August 2009

சிறிலங்கா சிங்களக் கொலைபாதக அரசு, தமிழ் இனத்தைக் கரு அறுக்கும் திட்டத்தோடு, கோரப்படுகொலைகளை நடத்தி வருகிறது என்று தொடர்ந்து நாம் கூறிவந்த குற்றச்சாட்டுகள், நுற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்து உள்ளது. உலகில் இருட்டடிப்புச் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும், அவலங்களையும் லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து உள்ளது. அதே தொலைக்காட்சி, நேற்றைய தினம் வெளியிட்டு உள்ள தமிழர் படுகொலைக் காட்சிகள், இருதயத்தைப் பிளக்கின்றன. இரத்தத்தை உறைய வைக்கின்ற அந்தக் காட்சிகளில் தமிழ் இளைஞர்கள், சிங்கள இராணுவத்தினரால் மிகக் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். அந்த இளைஞர்கள், முழு நிர்வாணமாக்கப்பட்டு, அவர்களின் கைகள் பின்புறமாக விலங்கிடப்பட்ட நிலையில், தரையில் உட்கார வைக்கப்பட்டு, அவர்களின் பிடரியிலும், முதுகிலும், தலையிலும் துப்பாக்கியால் சிங்கள இராணுவத்தினர் சுட்டுக் கொல்கின்றனர். துடிதுடிக்க அந்த இளைஞர்கள், இரத்த வெள்ளத்தில் செத்து மடிகின்றனர். ஏராளமான இளைஞர்கள் இப்படிக் குரூரமாகச் சிங்கள இராணுவத்தினரால் வரிசையாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்தப் படுகொலைகள் நடந்தபோது, சிங்களச் சிப்பாய் ஒருவனின் கைத்தொலைபேசியில் படம் பிடித்த காட்சிகள் தங்களுக்குக் கிடைத்ததாகத் தொலைக்காட்சி நிறுவனம் கூறுகிறது. கொல்லப்பட்ட இளைஞர்களின் கைகளில் கயிறு கட்டப்பட்டு உள்ளது தெரிகிறது. எனவே, ஏராளமான இளைஞர்களை இப்படிக் கைகளைப் பின்புறமாகக் கட்டி விலங்கிட்டு, பின்னர் கயிற்றால் கட்டி, விலங்குகளைக் கட்டி இழுத்து அடைத்து வைப்பதுபோல் அடைத்து வைத்து இருந்ததும், சித்திரவதை செய்ததும் தெரிய வந்து உள்ளது.

தமிழ் இனத்தைக் கொன்று குவிக்கும் கொலைபாதகம் நடத்தி வருகிற கொடியவன் ராஜபக்சேயின் அரசும், இராணுவமும், தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்வதும், கொல்வதும், தமிழ்ப் பெண்களைக் கற்பழித்துக் கொல்வதும், அன்றாட நிகழ்வுகளாக, சர்வசாதாரணச் சம்பவங்களாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்து உள்ளது.

தற்போது தொலைக்காட்சியில் வெளியாகி உள்ள கோரப் படுகொலைகள், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்து இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதையும், லண்டனில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்களும், செய்தித்தாள்களும், உலகத்துக்குத் தெரிவித்தன. மனிதகுல வரலாற்றில் யூதர்களைக் கொடூரமாகக் கொலை செய்த ஹிட்லரின் நாஜிப் படையினர்கூடச் செய்யத் துணியாத முறையில், சிங்கள இராணுவத்தினர், தமிழ் இளைஞர்களையும், இளம் பெண்களையும் வதைத்துத் துன்புறுத்திக் கொன்று அழித்தனர்.

யுத்தகளங்களில் தோற்கடிக்கப்பட்ட படைவீரர்களைக் கைது செய்தாலும், அவர்களை மனிதாபிமானத்தோடு போர்க்கைதிகளாக நடத்த வேண்டும் என்று, ஐ.நா. மன்றமும், மனித உரிமைகள் ஆணையமும், ஜெனீவாவில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களும் வலியுறுத்துகின்றன. சிங்களச் சிப்பாய்களை விடுதலைப் புலிகள் கைது செய்து வைத்து இருந்த காலத்தில், அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்து, அவர்களை மிகுந்த பண்பாட்டோடு புலிகள் நடத்தி வந்தார்கள் என்பதை பின்னர் விடுவிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்களே பல கட்டங்களில் தெரிவித்து உள்ளனர். ஆனால், சிங்கள இராணுவம், மிருகங்களைவிடக் கேவலமான முறையில், கொடூரமாகத் தமிழர்களைத் துன்புறுத்தினர். குறிப்பாகத் தமிழ்ப் பெண்களை, ஆடைகளை அகற்றிப் படுநாசம் செய்தனர். அதிலும் யுத்தகளத்தில் போரில் உயிர்நீத்த தமிழ்ப் பெண்களின் சீருடைகளை அகற்றி, கோரச் சிரிப்புடன் சிங்களச் சிப்பாய்கள் வன்புணர்ச்சி நடத்தியது, உலகத்தில் இதுவரை எங்கும் நடக்காத கொடுமை ஆகும்.

நம் நெஞ்சைப் பதற வைக்கின்ற படுகொலைக் காட்சிகளைக் காண்கிறபோது, இதயம் வெடித்து விடுவதுபோல இருக்கிறது.

ஈராக்கில், அபு கிரைப் சிறையில் 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கச் சிப்பாய்களால் சித்திரவதைக்கும் துன்புறுத்தலுக்கும் ஈராக்கியர்கள் ஆளாக்கப்பட்ட உண்மை, முதலில் கைத் தொலைபேசிக் காட்சிகளாக வெளியில் வந்தவுடன், ஈராக்கில் ஆக்கிரமிப்புச் செய்த அமெரிக்க நாட்டிலேயே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டு பேருக்கு பத்து ஆண்டுக்கால சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது.

அதைப்போல, கியூபாவில் குவாண்டனமோ வளைகுடாவில் அமைந்து உள்ள அமெரிக்கக் கடற்படைத் தளத்தில், கைதிகள் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டதற்கு உலகமே கண்டனம் தெரிவித்தது. அந்த முகாமை மூடிவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார்.

ஆனால், அங்கெல்லாம் நடந்ததைவிட மிகக் கொடூரமான முறையில் தமிழர்களை சிங்கள இராணுவம் செய்து இருக்கின்ற படுகொலைகளுக்கு அனைத்து நாடுகளின் அரசுகளும் கண்டனம் தெரிவிப்பதோடு, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள இராஜபக்சே அரசையும், இராணுவத் தளபதிகளையும், கொடுஞ்செயலில் ஈடுபட்ட இராணுவத்தினரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க முன்வர வேண்டும்.

முதுகுக்குப் பின்னால் கைகளைக் கட்டி விலங்கிட்டு, சிங்களவன் துப்பாக்கியால் சுடும்போது, அந்தத் தமிழ் இளைஞர்கள் உயிர் பிழைக்க முயன்று, குண்டுகள் சீறி வரும்போது தலையை அங்குமிங்கும் அசைப்பதும், அதையும் மீறி அவர்கள் உடலில் குண்டுகள் பாய்ந்து, துடிதுடிக்க அவர்கள் மடிவதையும் காண்கையில், நம் உள்ளத்தில் வேதனை நெருப்புப் பற்றி எரிகிறது.

ஐயோ, நாதியற்றுப் போனோமா நாம் இந்த நானிலத்தில்? என்று மனம் பதறித் துடிக்கிறது. இக்கோரப் படுகொலைகளைச் செய்துவிட்டு, வழக்கம்போலச் சிங்கள அரசு, அப்படி நடக்கவே இல்லை என்றுகூறி விடுதலைப்புலிகள் மீது பழி சுமத்துகிறது.

சிறிலங்காயில் சிங்கள அரசால் மனித உரிமைகள் மண்ணோடு மண்ணாக்கப்பட்டு, தமிழ் இனம் உலகில் எங்கும் நடந்து இராத இனக்கொலைக்கு ஆளாகிய நிலையில், நடைபெற்ற கொடுமைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள, ஆய்வு நடத்த ஐக்கிய நாடுகள் மன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து, சிங்கள அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, வாக்கு அளித்த நாடுகள் தங்கள் மனச்சாட்சியைக் குழிதோண்டிப் புதைத்து விட்ட பாவத்தைச் செய்தன.

தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அள்ளித்தந்த இந்திய அரசு, ஐ.நா. மன்றத்திலும், சிறிலங்காயை ஆதரித்தது வெட்கக்கேடான இழிசெயல் ஆகும். ஈழத்தில் முள்வேலி முகாம்களுக்குள் வதைபட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாக தவித்துக் கொண்டு இருக்கின்ற மூன்று இலட்சம் தமிழர்களின் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மழை வெள்ளத்தோடு அவர்களின் கண்ணீரும் சேர்ந்து கொண்டது.

முல்லைத் தீவு மாவட்டத்தில், வன்னிப் பிரதேசத்தில், இப்படி நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இக்கொடுஞ்செயலுக்கும், தமிழர்கள் சிந்திய இரத்தத்துக்கும், சிங்கள அரசு மட்டும் அல்ல, இந்திய அரசும் பொறுப்பாளி ஆகும். தமிழர்களின் அழிவுக்குக் காரணமான ஆயுதங்களையும், அனைத்து இராணுவ உதவிகளையும் அளித்த இந்திய அரசுக்குத் தமிழர் வரலாற்றில் எந்நாளும் மன்னிப்புக் கிடையாது.

ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசின் ரத்த வெறியாட்டம் குறித்த உண்மைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வந்தே தீரும். இந்தத் துன்பமான நேரத்தில், உலகெங்கும் உள்ள தமிழர்கள், மனம் தளர்ந்துவிடாமல், நம் இனத்தைக் காக்க, கொடுமை செய்தோரைக் கூண்டில் நிறுத்த, உறுதிகொண்டு போராடுவோம். அனைத்து உலக நாடுகளின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டுவோம்.இந்தக் கோர நிகழ்ச்சிகளை அறியும் வேளையில், உலகெங்கும் உள்ள மனித மனங்கள் பதறவே செய்யும். ஈழத்தமிழர்களின் துயரத்தையும், சிங்கள அரசின் கொடுமைகளையும் உலக மக்கள் அறியும்போது, இன்றைய நிலைமை நிச்சயமாக மாறும். தமிழர்களின் பக்கம் நியாயம் இருக்கிறது. தமிழ் ஈழத்தின் விடுதலைக்குரல், நியாயத்தின் குரல் என்பதை உலகம் ஒருநாள் உணர்ந்து ஏற்றுக்கொள்ளவே செய்யும் என்ற நம்பிக்கையோடு, நம் தர்மயுத்தத்தைத் தொடர்வோம்.

26.08 2009

வைகோ
தாயகம்
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க


No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter