Saturday, September 12, 2009

இருள் வெளி!



இருள் வெளி!

சிங்களப்படைகளின் பின்னால் உள்ளது பௌத்த வெறி அல்ல என்றும்; ஈழத்தில் உருவான பிரச்சினை வெள்ளாளர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே உருவானது என்றும், இலங்கையில் இனக்கொலையே நடக்கவில்லை என்றும் சிலர் கூறிவருகின்றனர். இதனால் பல ஊடகங்களில் தொடர்ச்சியான வாதங்கள் இவர்களை நோக்கி திசை திரும்பியுள்ளன. இவர்கள் தலித்தியத்தின் பெயரிலும், முஸ்லீம் மக்களின் பெயரிலும் தாங்கள் அக்கறையுள்ள தருமவான்கள் என ஒரு காலத்தில் கொடி உயர்த்தித் பிடித்தவர்கள். இன்று இலங்கை அரசு இனக்கொலையே செய்யவில்லை என்கிறார்கள். இலங்கைப் பௌத்தம் பவித்திரமானது என்கிறார்கள். குழந்தைகளையும், பெண்களையும் கோயிலாக்கி கும்பிடுகிறது அரசு என்று கோசம் பாடுகிறார்கள். இலங்கையின் தேசியகீதத்தை புதுமையாக மொழிபெயர்க்கிறார்கள். திருவனந்தபுரத்தில் இலங்கையரசின் பெரும் தொகை பண அனுசரணையோடு உலகத்திலிருக்கின்ற அரச ஊதுகுழல்களை கூட்டமாக கூட்டி வயிறு வளர்க்கிறார்கள். என்றெல்லாம் பல செய்திகள் பக்கம் பக்கமாக இந்த நாட்களில் விரிகின்றன. இவர்களின் இந்துத்துவத்தையும், வெள்ளாளச்சாதியையும் ஒழிப்பதெனும் கருத்தியலை இவர்கள் ஒட்டுமொத்த தமிழரின் அழிப்பில் சரிக்கட்டலாம் என்று சாதிப்பவர்களாக கருத முடிகிறது. ஈழத்தின் இனப்படுகொலைகளைப் பற்றிப் பேசுகிறபோது இவர்கள் சாதியைப் பற்றியும்; அடையாள அரசியலைப் பற்றியும் வித்தியாசப்படுத்திப் பேசிக் கொண்டிருகின்றார்கள். முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்குமான நெருக்குவாரத்தை இன்று அரச ஊதுகுழல்கள் ஊதிப்பெரிதாக்குகின்றன. தமிழினமே ஒன்றோடொன்று மோதிகொள்வதை வேடிக்கை பார்க்கப் பெரும்பான்மையரசு தயாராகிவருகிறது. பெருமளவில் புலப்பெயர்வினால் இன்றைக்கு இரண்டாவது பெரும்பான்மையாகக் கொள்ளப்படுகின்ற முஸ்லிம்களை இற்றைக்குப் பல வருடங்களுக்கு முன்னதாகவே அரச கட்டுப்பாட்டில் இருந்த யாழ்பாணத்தில் அரசு குடியேற்ற வாய்ப்பிருந்தும் அதை ஏன் செய்ய வில்லை என்று கேட்க நாதியற்றவர்கள், இன்று அரசியல்துறை வல்லுனர்களாக வணிக நோக்கில் வலம் வருகின்ற சிறுமை கேவலமானது.இது இப்படியிருக்க,அரசு தமிழ்மக்களின் அடிப்படை நியாயக்கோரிக்கை எதனையும் எப்போதும் தீர்க்க முனையவில்லை. அப்படி அதற்கு விருப்பும் இருந்ததில்லை என்பதற்குகிழக்கு மாகாண அவையில் நடைபெறுகிற தொடர் சங்கதிகள் சான்றாக இருக்கின்றது. நியாயபூர்வமான பணிகளில் ஆளுநரின் தலையீடு எம்மை அதிருப்திக்குள்ளாக்குகின்றது. கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைகள் காரணமாக அமைச்சர்களும் மாகாண சபை உறுப்பினர்கள் பெரும்பாலானோரும் ஏமாற்றமடைந்துள்ளனர். நாம் புதிதாக எந்த அதிகாரத்தையும் கேட்கவில்லை. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தவும் எமது மக்களின் ஒரு சில எதிர்பார்ப்புகளை மாத்திரமாவது பூர்த்தி செய்யவும் எமக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டுமென்றே கேட்கிறோம். என்று கிழக்கு மாகாண சபை முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான முழு அமைச்சரவையும் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். இது தமிழர் பிரச்சனையை எவர் வழியிலும் அரசு தீர்த்து விடத் தயாரில்லை என்பதனையே காட்டி நிற்கிறது. இவர்களை நொந்து பயனில்லை எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என வாழ்வோர் இதுவே முதல் தடவையுமல்ல. நாய் குதிரையின் குட்டியென்றோ,பேய்களின் பற்களைப் பிடுங்கிவிடலாம் என்றோ வாதாட இது நேரமுமல்ல. புலம்பெயர் புண்ணியவான்களை விடவும் வருந்திக்கொண்டிருப்பவர்கள் வன்னி அகதிமுகாம்களில் உள்ளோர். இவர்களை வெளிநாட்டிலிருந்து பார்வையிடப்போன தமிழ் சீமான்களும் சீமாட்டிகளும், பரலோகத்திருக்கின்ற சொர்க்கமாக அந்த மண்ணில் இந்த வன்னிமுகாம்கள் இருப்பதாக கையெழுத்திட்ட அறிக்கை சமர்ப்பித்திருந்தார்கள். கர்நாடகசங்கீதம் மட்டுமே இம் முகாம்களுக்குள் கேட்காதிருப்பதாகவும் அதனால் வாத்தியக்கருவிகளை வழங்கி உதவி, இலங்கையை இசை நாடாக்கலாம் என்றும் இவர்கள் சிபார்சு செய்துள்ளார்கள். வன்னியில் வாழ்கிற இந்த இயலாமைப்பட்ட ஏழை மானிடத்தை எல்லா அரசியல் வாதிகளும் உறிஞ்சித் தீர்த்து விட்டார்கள். இவர்களை ஒன்றில் இருட்டு வழி நடாத்தியது அல்லது இன்று அதே இருட்டு வழித்துணையாகிப் பின்தொடர்கின்றது. குருட்டு வழியினில் இடறுப்பட்டு வீழ்வதே அவர்களின் வாழ்வும் வரலாறுமாயுள்ளது. வன்னிப்பரப்பெங்கும் புன்னகையும் வாழ்வுமிழந்து புழுதியில் வீழ்ந்துகிடக்கும் ஆயிரமாயிரம் மனிதர்களுள் ஒருத்தியின் குரல் இது. இவர்களின் வாழ்வும் விடிவும் எப்போ???


எச்சில்:






பெண்ணே! நீ இந்தக் பெருமழையுள் விழுந்தெழும்பி.........
போவோர் வருவோரைக் கைநீட்டிக் கும்பிட்டுக் காசுக்கிரக்கின்றாய் !
ஒரு கவளம் சோற்றுக்கு !!


மடியினிலே என்ன சுமை மாராப்பால் மறைக்கின்றாய் ?

ஓ! சின்ன மகன் அவனா? சிணுங்குகின்றான் போலிருக்கு
காலை உதறுகின்றான் கையை அடிக்கின்றான் - உன்

மார்பை உறிஞ்சியுமேன் மாரடைக்கக் கத்துகின்றான்

வெள்ளத்துள் நீ இன்னும் விறைத்துப்போய் நிற்கின்றாய்
-
முகாம் என்று உந்தன் முகம் அழித்த
சுடலை மறைவொன்றின் சுண்ணாம்புக்கட்டிடம் தான் - உன்
சுற்றம், உறவினர்கள், சுகபோகம்,எல்லாமும்...


துப்பாக்கிச் சூடு, துரோகிகளின் கூப்பாடு...

வர்க்கம் இரண்டென்று வாய்கிழியக் கத்துமொலி

புள்ளடிகள் போட்டாய் நீ ! போர்க்களத்தில் நின்றாய் நீ

துண்டு எழுதிபோட்டுத் துயர் நிலைகள் மாறும் என்றாய் !!
எல்லாமிழந்தின்று ஏதிலியாய்ப் போனாய் நீ

தவித்த விடாய்க்கும் தண்ணியில்லை இன்றுனக்கு

குந்த ஒருவீடு... குடியிருப்புக்காணிநிலம்...

ஐந்தாறு மாடு... ஆனதொரு வாய் சோறு....

கட்டத்துணியென்று கலங்குகின்றாய் - எதுவுமில்லை


தேசியத்து நீரைத் தெருவோரச் சாக்கடையில்

ஊற்றிவிட்டு எல்லோரும் உனைப்பார்த்துச் சிரிக்கின்றார்
.....

காகிதத்து ஓடம் போல்க் கரைகிறது உன்வாழ்வு
!
உன்நாட்டுக் கொள்கைகளில் ஏதோ குளறுபடி
இருந்திருந்து
உந்தன் குரல்வளையை....
குறிபார்த்து நரிப்பது ஏன் ???
தெருநீளப் பிணத்தூடே தேடிப் பார்
!
எச்சில், இலையொன்று விழுகிறதா ?
எழுந்தோடு !
நக்கிப் புசி நீ.......
உன்
நாடு நன்றாய்ச் சிரிக்கட்டும் !!


***********நிறைவு**********

1 comment:

நுணாவிலான் said...

உண்மையில் யாழ் வங்கிகளில் இருக்கும் பணத்தையும் தமிழ் அமைச்சர் எடுக்கப்போவதாக செய்தி.
எல்லாப்பக்கமும் திருடர்கள் தான்.
நுணாவிலான்

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter