Sunday, September 27, 2009

எதனை நான் சொல்வேன்?


எதனை நான் சொல்வேன்?

மா.சித்திவினாயகம்



எதனை நான் சொல்வேன்?
வெளிச்சக்கூட்டினுள்
விளக்கேந்தி வழிகாட்டி....
வந்தார்க்கு எல்லாம்
வரம் கொடுத்த என் தாயே !

நஞ்சு கலக்கா நெஞ்சுடன் - என்
பிஞ்சு விரல்கள் உன் மண்ணைப்பிசைந்தது.
சஞ்சலமற்ற மனதுடன் அன்று
கொஞ்சு தமிழுடன் குதூகலித்திருந்தேன் !!


மழலை பேசித் தத்திநடக்கவும்.....
மாவிலி வெளியில் சுற்றித்திரியவும்....
அரசரும் தங்கிடும், ஆல்மரக் கிளைகளில்,
ஏறிக்குதிக்கவும்... எக்காளமிடவும்...
குருவியாய் என்னைச் சிருஸ்டித்துப் போட்டாய்!!
கடல் பெரு வெளியில் நீந்திக் கிடந்து,
கல்வி கூடக் கதவு திறந்து,
கோவிற் கிணற்று நீரைக்குடித்து,
உந்தன் நாடியின் துடிப்பாய்..
என்னை, உன்னுள் உயிர்த்து வளர்த்தாய்!

தூங்கிக் கிடக்கும் தொட்டிலாய் என்னைத்
தாங்கிப் பிடித்த தாய்த் திருநாடே!!
சிறுகச் சேர்த்த குருவிகள் கூட்டின்
அடிக்கல் தொலைத்து,
அகதியாய் நான் இங்கு
அன்னியமாகினேன்!
சின்ன ஈக்கள் எங்கும் தெறிக்கவும்...
தேசம் எங்கும் பிணச்சதை நெளியவும்....
கொடிய இருளில் அசைகிற பாம்பென,
கொடூரமும் கொலையும் போராய் அசையவும்..
பொறுமை புனைந்து அமைதியாய் கிடந்து
இன்னமும் நிமிர்கிற
ஈழதேச வரலாற்றுத்
தாயே !

பாளும் உயிருக்கஞ்சி, அஞ்சியே
நாளும் இறக்கும் நரபலியாகினேன் - இன்று
அன்னியக் கொடியின்
குடிகளில் ஒன்றாய்
என்னை நானே உறுதி செய்த பின்

இனி எதனை நான் சொல்வேன்???


காகிதச் சகதியில் கவிதை எழுதவும்......
பொய்மைப்பூக்களால் பூசி மெழுகவும்......
கம்யூனிஸ்ட் என்றும் பூர்சுவா என்றும்......
முற்போக்கு என்றும் பிற்போக்கு என்றும்......
புலம்புதல் தவிர பிறந்த மண் பற்றி
இனியும் எதனை நான் இயம்புதல் கூடும்??

***********


1 comment:

சுகன் said...

மாவிலி அண்ணாவிற்கு வாழ்த்து.
சுகன்

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter