Tuesday, 29 December 2009 17:35 ஈழநேசன் ரொறன்ரோ நிருபர் .

நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவில் நடத்திய "உயிர்காப்போம்" நத்தார் நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டார்கள். வவுனியாவில் இருந்து நெடுந்தீவுக்கு இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவியளிக்கும் பொருட்டும் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. மக்கள் அன்பளிப்பின் மூலம் நெடுந்தீவு மக்கள் நலன்கருதி பல செயல்திட்டங்களை நிறைவேற்றும் ஒன்றியத்தின் இந்தக் கலையிரவு, பல நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாக அமைந்தது.

மங்கள விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்ட இவ்விழாவில், தமிழ்த்தாய்வாழ்த்து, கனடியத் தேசிய கீதம், அகவணக்கம் எனும் நிகழ்வுகள் முதலில் நடைபெற்றன. அதன்பின்னர், வரவேற்பு நடனம், பரதமும் தற்கால நடன அமைப்புகளும் சேர்ந்த நிகழ்வுகள், வன்னி மண்ணில் புதுக்கலையாக பரிணமித்த சிலம்பாட்டம், இங்கும் பல சிறுவர், சிறுமி, இளைஞர் யுவதிகளால் பயிலப்பட்டு வியக்க வைக்கும் விதத்தில் அரங்கேறிய போது பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தது.
கவிஞர் மா.சித்திவிநாயகம் தலைமையில் "நெஞ்சம் மறக்குமா" என்ற கவியரங்குமாக களைகட்டிய நிகழ்வில், கவிஞர்கள், சித்திவிநாயகம், ஆனந்தன், துரை, மோகன், பரா, தீ.வே.இராசலிங்கம் அனைவரும் தமது கவிதைகளில் வாழ்ந்த பூமியின் நினைவுகளை எடுத்து வந்தார்கள்.
சிறந்த தம்பதியருக்கான போட்டியும் பார்வையாளர்களைக் கவர்ந்தது. ஒன்றியத்தை வளர்த்த வணிகப் பெருந்தகைகள் கௌரவிக்கப்பட்டார்கள். ஒன்றியச் செயலாளரின் நன்றி உரையோடு விழா நிறைவடைந்தது.
படங்கள்: ஈழநேசன் ரொரான்ரோ செய்தியாளர்
No comments:
Post a Comment