Thursday, October 28, 2010

கைவிடப்பட்ட மந்தைகளும், கரணம் போடும் மேய்ப்பர்களும்….

கைவிடப்பட்ட மந்தைகளும், கரணம் போடும் மேய்ப்பர்களும்….

கோடைஇடியிடித்து

வானம் மின்னியது.

பூமி நடுங்கியது.

கரு நாகங்கள் மேலெழுந்து ஊரத்தொடங்கின!!

நரிகள் பிலாக்கணமிட்டழுதன!

மந்தைக் கூட்டம் சிதறியது…….

எது திசை??? எது போகுமிடம்???

தெரியாது திகைத்தன மந்தைகள்.

மேய்ப்பர்களின் கையசைவிற்காய்

ஏங்கித் தவித்தன அவை.

மேய்ப்பர்களைக் காணவில்லை

கைவிட மாட்டார்கள்.

நம்பிக்கையோடு,

மேய்ப்பர்களைத்தேடத்

தொடங்கின

மந்தைகள்!!!

வனாந்தரங்களில்…..

கட்டாந்தரைகளில்….

முகாம்களில்….

காடுகளில்…..

சுடலை வெளிகளில்…..

தெருவோரங்களில்……

எங்கு மேய்ப்பர்கள்???,எங்கு மேய்ப்பர்கள்???

தேடித் தேடியே

மந்தைகள்

வாழ்விழந்தன.

எல்லை புகுந்தவை

வக்கிர புத்திக்காரரின்

வக்கிரத்துக்குப் பலியாகிப் போயின.

பாளும் உயிரைக் கையில் பிடித்து

பசிவயிற்றோடு

நாலு கடலிலும் அலைந்து திரிந்தவற்றை

சிறுகச் சிறுக

கடல் தின்று தீர்த்தது.

தப்பித்து நீந்தியவைகள்

மாற்று நாட்டு அகதிகள் ஆகின.

இறுதியாய் வானைப் பிளந்து

மந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்

புதிய புதிய

மேய்ப்பர்கள் நாலாபுறமும் ……

நானே மீட்பர், நானே மீட்பர்,என

காதுசெவிடுபடக் கூவிச் செபித்தனர்.

வானத்திலிருந்து உங்கள் மேல் இறங்கிவரும்

புதிய மேய்ப்பர்களாகிய நாங்கள் புதிய உபாகமத்தை

உங்களுக்காய் உபதேசிக்கின்றோம்.

“உம்மைத் துரத்திய தேசத்தை நாமோ ,

புழுதியும் மண்ணுமாக்குவோம்.

அதை விட்டு உங்களை விலக்கிய படியால்

அவர்கள் அழியவென நாங்கள் சபிக்கின்றோம்.

பூமியிலுள்ள

எல்லா ராஜ்யங்களிலும்

சிதறுண்டு போன எம் மந்தைகளே!!!

எங்களை ஆதரித்து ஆலிங்கனம் செய்வதால்

உங்களை வெல்வீர் – இன்றேல்

உங்கள் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும்

பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.

அவைகளை விரட்டு வாரில்லாதோராய் நீங்கள்

துயரப்படுவீர்கள்.

உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும்

அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.

அவர்கள் உங்களோடு கூட இராமல்

டிஸ்கோக்களிலும், மதுபானச்சாலைகளிலும் படுத்துறங்குவார்கள்..

மொழியை அழித்து முகத்தை இழக்கப்போகிற

அவர்களைச் சிறைப்படச் செய்வோம்.

உங்கள் நிலத்தின் கனியையும்,

உங்கள் பிரயாசத்தின் பலனையும்

நீங்கள் அறியாத ஜனங்கள் புசிக்கும் படிக்கு

நாங்கள் சபிப்போம்.

தப்பிய மந்தைகள் தடுமாறி நடுங்கின!!!

எங்கள் மேய்ப்பர்கள்…….

நல்லவர்களா??

கெட்டவர்களா ??

விடையறியாது தவித்தன

தப்பிய மந்தைகள்.


No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter