Monday, June 21, 2010

சமயம் கிடைத்தால் எல்லோரும் வல்லவரே!!





சமயம் கிடைத்தால் சங்கதியில் வல்லவரே!!

தமிழ் நாட்டில் நடைபெறும் செம்மொழி மாநாட்டை தாம் ஆதரிப்பதாக விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் திடீரென அறிவித்துள்ளது. இந்தத் திடீர் அறிவிப்பைச் செய்தது எந்தச்செயலகம் என மக்கள் சிண்டைப் பிய்த்துக்கொண்டு துடியாய்த் துடிக்க,இத்தனை மக்களின் பேரழிவிற்குப்பின்னால், இந்தியப் பேரசிற்குத் துணயாகிப்போன கருணாநிதியவர்களிடம் கை குலுக்குகிறார்களா?? புலிகள் என்று மூக்கில் விரலை வைக்கின்றார்கள் பல புலி அனுதாபிகள்.செம்மொழி மாநாடு நடைபெறுவது பல வழிகளிலும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் பெருமையும் வளமும் அளிக்கும் என மனதார நம்புகிறோம் என்று குறிப்பிடும் இவர்கள் எழுத்துச் சீர்திருத்தமெனும் எழுத்துக்குறைப்பால் இருக்கும் தமிழும் இழந்து விடுவோமா??? என்று எச்சரிக்கை செய்கின்ற, அங்கலாய்க்கின்ற தமிழ்மணம் உட்பட பலரது கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளவில்லை. ஒரு மொழியின் வளர்ச்சி அம்மொழியின் தொன்மை தொடர்பானது மட்டுமே அன்று. எதிர்கால பயன்பாட்டுக்கு அது எந்த அளவு உதவப்போகிறது என்பதுதான் ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது என்று புத்தூக்கக் கருத்தை இப்போ சொல்லவருகிற இவர்கள் கிளிநொச்சிப் பெயர்ப்பலகைகளில் மட்டுமேன் பழம் தமிழ்ப் பெயர்களை எழுதி மக்களை குழப்பியடித்தார்கள். பேக்கரி என்பதை வெதுப்பகம் என்றும், சயிக்கிள் என்பதை உந்துருளி என்றும் ஒட்டுமிடத்தை ஒட்டகம் என்றும் எழுதியவர்களுக்கு உண்மையான ஒட்டகத்திற்கு என்ன பெயர் வைப்பது என்பதை அறியாதவர்களாயினர்.
வேளைக்கொரு பேச்சு, நாளுக்கொரு கொள்கை,ஆளுக்கொரு வேடம் என்று யாரும் இருந்துவிட்டுப் போங்கள். ஆனாலும் அதற்காக இத்தனை உயிர்பலி தேவைதானா?? என்கின்றார்கள் புலியோடு இருந்து எல்லாம் இழந்த ஏதிலிகள்.



தாய்நாடு அதுதான் என்றால் ஏன்அது இப்படி??

அவர்களின் குண்டுகளால்
சுடலையாகிப்போனது நிலம்!!
மொழியறுத்து முண்டங்களாகிச்
சிதைந்தழிந்தன சவங்கள்,

சாம்பல் மேட்டிற்குள்
கனன்று கொண்டிருக்கிறது
இன்னமும் அணையா நெருப்பு !

எல்லாத் திசையிலும் முட்டி மோதுகிறது
கேட்பாரற்றுக் கூக்குரலிட்டு
இறந்த அபலைகளின் குரல்,

இன்னமும் மீந்திருப்பவை
தாய்நாடு அதுதான் என
நாக்கூசாமல் சொல்கிறார்கள்!!

தாய்நாடு அதுதான் என்றால் ஏன் அது இப்படி??
எதிரியை வரவேற்கிறவன் அவர்களால்,
எல்லாமிழந்த ஏதிலிகளுக்கும்
பரிமளத்தைலம் பூசுகின்றான்.
தேசத்தை எரித்தவனுக்கும் பொன்னாடை !!
எரிந்து வந்தவனுக்கும் பொன்னாடை !!

உயிரோடு புதைந்தவர்களுக்காய் இரங்கற் கூட்டம்
முடிந்த கையோடு போர்வெற்றி புகழப்படுகிறது.

தாய் நாடு அதுதான் என்றால் ஏன் அது இப்படி??

ஒப்பனைக் காரர்கள் சாயம்
பூசத் தொடங்கி விட்டார்கள்!
மனித உடலங்கள் சூடடிக்கப்பட்ட
பூமியில் கொண்டாட்டத்தோடு உலா வருகிறது உலகம்.
புதிய புதிய கடவுள்கள்
இடம் மாறுகின்றார்கள்.
மண்மேட்டில் வன்னி
எரிந்தழிந்து போனபோது
பார்த்துக் கொண்டிருந்த தாய்நாட்டு வீரர்கள்
ஆளப் புதைந்த தமிழிச்சியை
புதுவையில் மீண்டும்
இழுத்து வந்து மலர்மாலை
போடுவதாகச் சொல்கிறார்கள்.
அதற்காகக்குழல் ஊதுகின்றார்கள்,
எதற்கும் எப்போதும் ஊத வல்ல மகுடிகள்.



அதுவும்சரி, இதுவும் சரி என்கிறது அவர்களது அரசியல்.

தாய்நாடு அதுதான் என்றால் ஏன்அது இப்படி??

தமிழெனும் பெயரால்
துடிக்கத் துடிக்க அழிக்கப்பட்டவர்க்காய்....
ஒரு அங்குல ஊதுபத்திகூடக்
கொழுத்திடமுடியா மொழிவல்லோர்கள்
மலர்மண்டமும், மணிமண்டபமும்
தமிழுக்காகப் புதுவையில் கட்டுவோம்
எனப் பூச்சாண்டி காட்டுகின்றனர்.
முகாமிட்ட பிச்சைக்குள் இன்னமும்
கதிகலங்கும் தமிழிச்சிகளின் மூச்சுக்காற்றால்
சுக்கிர திசையாம் அரசிற்கு......

அகதிகளைக்காட்டி வியாபாரம்
பெருக்கிடும் காலம் இது என்கிறது இந்தியச் சோதிடம்.

தாய்நாடு அதுதான் என்றால் ஏன்அது இப்படி??

எல்லோரும் புள்ளிவைக்கின்றார்கள்.
தமிழர்களின் சாம்பலில் கோலம் போட......

பனிப்பாலையில் வாழத்துடிக்கிற ஒட்டகங்களைப்போல்
தமிழரைக் காக்காமல்,
தமிழைக் காக்கத்துடிக்கிற தேவர்களே...
தேவ கன்னிகைகளே...

மாநாடு முடிகிற போது
தமிழன் இருந்த மண்மேடும் தொலைந்து போயிற்றா???
என்றும் ஆராயுங்கள்

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter