Sunday, December 23, 2007

பனிப்புலத்தைக் கவிப்புலமாக்கிய கலைப்பிரமன்களின்
கவிதாநிகழ்வு !!

ஈழத்திலிருந்து பனி நிலங்களை நோக்கி
80 களில் ஆரம்பித்த உக்கிரமான புலப்பெயர்விற்கு அடிப்படைக்காரணம் பாதுகாப்பின்மை என்பதே. இதற்குப் பல காரணிகளைக் கூறலாம்.எழுந்தமானக்கைதுகள் அரசபடை அட்டூழியங்கள் இயக்க முரண்கள் எனத் தனிமனித பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் அடக்குமுறைக்குமுள்ளாகிய வேளை. நாட்டிற்கு உள்ளும் புறமும் இடம்பெயர்ந்து மக்கள் அவதிக்குள்ளாகினர்.இந்த அவதி அவர்களுக்கு அகதிப் பட்டத்தை இலகுவாகப் பெற்றுக்கொடுத்தது.
சுய விருப்புடன் புலம் பெயர்ந்தவர்கள் சுயவிருப்பின்றி புலம்பெயர்ந்தவர்கள் என்ற இரு பெரு வேறுபாடானவர்களை மறுகேள்வியின்றி அகதிஎனும் சொல் ஒரே அர்த்தத்தில் அடைத்துப் போட்டுவிடுகிறது இப்படிஅடைக்கப்பட்ட அல்லது வரைவு படுத்தப்பட்டமக்களின் ஒரே ஊன்று கோலாகி நிற்பது மொழி.
அவர்களின் மொழிகளில் அவர்களில்பெரும்பாலோர் பிறந்த மண்ணைப் பிரிவதன் ஏக்கத்தையும் அதன் இனிய நினைவுகளையும் பாடுகிற பிரிவுத்துயர்ப் பாடல்களைப் பெருமளவில் யாத்திருக்கிறார்கள்.
மற்றும் சிலர் புதிய அனுபவங்களை புகலிட அரசியல் வெளிப்பாடுகளை பெண்ணிய சிந்தனைகளை வெளிப்படுத்தி நிற்கின்றார்கள்.மற்றும் சிலர் பிற மொழிப்படைப்புகளை மொழிபெயர்க்கின்றார்கள் மெளனிக்கப்பட்ட பல உணர்வுகள் மீட்கப்படுகின்றன.ஓரங்கட்டப்பட்டு
பாவம் என்று முத்திரையிடப்பட்ட பாலியல் உணர்வுகள் பத்திரிகைகளாகிப் பவனிவருகின்றன.
சாதிய அக முரண்பாடுகளில் சதா உழன்ற எம் சமூகம் ஒட்டுமொத்தமாகச் சூத்திரர் அல்லது தலித்துகளாக பரிணமித்திருகின்றார்கள். பிழைப்பிற்க்காக எல்லாவகை வேலைகளையும்
செய்கின்ற கூலிகளாகிப்போன இவர்களிடம் தொழில் அடிப்படையில் அமைந்த சாதியமைப்பு
இன்று கேலியாகிப் போனது. இவர்கள் அகப்பட்டுக்கொண்ட நாடுகளின் முரண்பாட்டு அரசியல்களுக்குள் பலர் முகம் புதைத்துள்ளார்கள். ஜனநாயகவாதிகளாக கம்யூனிசவாதிகளாக
முதலாளித்துவவாதிகளாக மதவாதிகளாக பகுத்தறிவுவாதிகளாக மந்திரவாதிகளாக தந்திரவாதிகளாக
என்று தம் வாழிடத்தைப் பொறுத்து தம் தம் முகங்களை மாற்றுகின்ற வேலையில் நம்மவர்கள்
தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.யுத்தத்தை எதிர்க்கின்ற குரல்களும் தமிழரிடையே நிலவும் மேலாண்மையைக் கேள்விகுள்ளாக்கும் குரல்களும் யுத்தத்தைப் பாடும் குரல்களும் மற்றும்
தமிழ்த்தேசியத்தின் குரல்களுமென புலம் பெயர்வீதிகள் புயல் அடிக்கின்றன.
இன்னிலையில் புலம் பெயர்நிலத்துப் பனி நிலங்களில் ஒன்றான கனடாவில்
வாழும் தமிழர்களும் தம்தம் அளவில் சமூகநியமங்களுக்குட்பட்டுப் பல்வேறு தம்மின வளர்ச்சித்திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வானொலிகள் தொலைக்காட்சிகள் பத்திரிகைகள்
சஞ்சிகைகள் என அடுக்கிக்கொண்டே போகும் இவர்களின் தமிழ் சார் பற்றுணர்வின் உச்சகட்டமாக
எழுத்தாளர்களுக்கான சங்கங்கள் அமைத்துத் தமிழ் ஆய்வு செய்கின்றனர். இந்தவகையில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் தமிழ்க்கவிதா நிகழ்வொன்று அறிமுகமாக்கப்பட்டுள்ளது.
மார்கழி 23 ஞாயிறன்று மாலை ரொறன்ரோ நகரமண்டபத்தில் இடம்பெற்ற இக்கவிதாநிகழ்வில் பல இலக்கியஆர்வலர்கள் கொடும்புயற்காற்றினுள்ளும் மழையினுள்ளும்கலந்து கொண்டிருந்தார்கள். மூன்று மாதத்திற்கொருதரம் வருடத்தில் நான்கு தடவையாக இக்கவிதாநிகழ்வை தொடர்ந்து நடாத்தப் போவதாக அந்த இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
அதன் முதன்மை நிகழ்வாக ஞாயிறன்று நடந்த இந்நிகழ்வில் விதியே தமிழை என் செய நினத்தாய்? என்கிற தலைப்பில் வெவ்வெறு இலக்குகளை முன் வைத்து கவிஞர் கந்தவனம் அவர்கள் தலைமையில் கவிஞர்கள் மீரா திவ்யராஜ் புதியபாரதி சண்முகராசா மற்றும் புகாரி ஆகியோர் கவிதை பாடினார்கள். பாடிய கவிதைகள் சில புலிக்கழுத்து மாலைகள் ஆகின சில புலிக்கெதிரானவையாகவுமிருந்தன.

கவிஞர்கள் பேராசிரியர்கள் பேச்சாளர்கள் தத்துவவாதிகள்
எழுத்தாளர்கள் பத்திரிகை மற்றும் வானொலியாளர்கள் என ஆளுக்கொருதிக்கில் மூலைகொரு மனிதர்கள் உட்கார்ந்திருந்த அந்த அவையினில் கவிதை உயிரோடு உன்னதம் பெற்றிருந்ததா? அல்லது உயிரோடு அவஸ்தைப்பட்டதா? என்பதை என்னால் கூறமுடியாதுள்ளது. கவித்துவஆளுமை புலவித்தியாசம் விசயத்தீவிரம் சமூகஅக்கறை இலக்கியத்தெளிவு
மரபுநேர்த்தி மற்றும் வாசகன் அல்லது கேட்பவனின் உள்ளாற்றலை மேம்படுத்தி அவன் சிந்தனைத்தளத்தை விசாலப்படுத்துகிற கவனம் என்று கவிதைகள் உண்மையானவையாகவும் உணர்வானவையாகவும் இருக்கவேண்டும்.கவிதைகள் வெறும் சொற்கட்டுகளாக மட்டுமே இருப்பது வெற்றுமணலை வாரியிறைப்பது போன்றதாகும்.கவிதை பற்றிய மேலதிக தகவல்களை
பேராசிரியர் இ.பாலசுந்தரம் அதிபர் பொ.கனகசபாபதி உதயன் லோகேந்திரலிங்கம் அதிபர் த.சிவபாலு ஆகியோர் வழங்கினார்கள்.
மொத்தத்தில் கவிபற்றிய அக்கறையினிருத்தலுடன் உருவாக்கப்பட்ட்டுள்ள இந் நிகழ்வில் மக்கள் மண்டைமயிரை பிடுங்கிக்கொள்கிற அளவிற்கு அவதிக்குள்ளாக்கப்படவில்லை.
ஏனெனில் மண்டையில் மயிர் இல்லாதோர் கூடிய கூட்டமென நீங்கள் அர்த்தப் படுத்த வேண்டாம்.
மாசி பதினாறாம் நாள் அடுத்த நிகழ்வென அறிவித்திருக்கிறார்கள். மயிர்களோடு பத்திரமாக வாருங்கள். தொடரட்டும் அவர்கள் தமிழ்ப் பணி.

------------------------------------1 comment:

Anonymous said...

அண்ணா, ஏதோ அதையாவது
செய்வோம் என்று எண்ணமுள்ளவர்களை குழப்பிப்
போடாதீர்கள்.
பிரதீப்

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter