Friday, December 28, 2007


கவிதைகள்.

சவங்கள் உலா வரும் சாலை !!
நித்திரை விழித்தெழும் ஒவ்வொரு காலையும்-தான்
உன் நிஜம்உனக்குத் தெரிகிறது !
கலைந்த தலையும்......
"பியர்" வழிந்து,நாறுகின்ற வாயும் ...
வியர்வை மேனியுமாய்.....
செத்துக் கிடந்து,
உயிர்த்தெழுந்த மன்னன் !
இனிப் பூசி மினுக்கிப்பொய்யுரைக்கும் நேரம் !!
போட்டது போட்டபடியே,
மாற்றமின்றிப் புலருகிற
ஒவ்வொரு
தினத்திற்கும்.......
பொதுச்சேவை,பொதுச்சேவையென
பொய்புனைந்து -நீ கல்லறை தோண்டு !!
இழந்து போன உன் கோட்டையை......
"நெற்றிப் பட்டம் சூட்டிய யானை"யில்
நீ வலம் வந்த காட்சியை......
மண்ணுள்ளே ஆளப்புதைந்த -உன்
பொற்குவை, சிலம்பு மற்றும்
துருப்பிடித்த வாள்களை......
ஒடிந்த அம்புகளை....
இடை மெலிந்திருந்த -உன்இராணியை.......
எதை வேண்டுமானாலும்,
கதையாய் அளக்கலாம் !!
வாழத்துடிக்கிறோம் என்று,பைத்தியமாய்
அலைந்தலைந்து களைத்துப்போய் அழுகிறவனை,
துயருள் துடிப்பவனை,ஏமாற்றிச் சாகடித்துக்கொள் !!
அந்தச் செத்த சவங்களுக்கு -விழுகிற
மொத்த மாலையையும் -நீயேஅணிந்து கொள் !!!
நியாயங்கள்
பற்றியஎண்ணமேயற்றுவாழ்த்தியவர்களே
வசைபாடுகிறார்கள் என்றும்,
பொதுச்சேவையில் தான் -
உன்இடுப்புக்கோவணத்தையும்அவிழ்த்தெடுத்தார்கள்
என்றும்கதை விடு !!
கூட்டம் சேரும் இடங்களில் -நீ
கடை விரிக்கிறாயோ .....அல்லது --நீ
கடை விரிக்கும் இடங்களில்
கூட்டம் வருகிறதோ ...எப்படியோ...?
எப்போதும்,உன்னைச் சுற்றுகிறது
அப்பாவிகளின் கூட்டம் !!
இப்போதெல்லாம் பணத்தைக் கண்டு
பல்லிளிக்கத்தான் கூட்டம் என்றல்ல,
பைத்தியங்களைச் சுற்றியும்கூட்டம் இருக்கிறது !!!!
பாவம் இந்த ஜனங்கள் !!
-------------------------


பயணமுகவர்கள்

கொடுமையணிந்து தினம்…தினம்…
வருகிறது பெரியவெள்ளி !!!!!
சிலுவையின்றிச் சாகடிக்கப்
படுகிறார்கள் புதுப் புது யேசுக்கள் !!!!
ஓளிபாய்ச்சி உயிர்த்தெழுந்தது
பேர்லின் பெருந்தெரு।
புரியாத மொழி…… புரியாத ஊர்………। புரியாத மனிதர்கள்……
ஈஸ்டர் தினத்திற்கு முன்னிரவொன்றில்--நான்
அவனுடன் அந்த அறையினுள் நுழைந்தேன்।
‘பொலிஸ் வந்தால் புருஸன் என்று ஏன்னையே சொல்”
மீசை மயிர்கள் முகத்தில் உரச
நெருங்கி அமர்ந்தான் அவன்
முடிவெடுத்து விட்டான் மூடிய கதவுக்குள்-எது
நடந்தாலும் வெளியே வராதென…।
இனிச் சட்டையைக் கிழிக்கலாம்…।
வாரினால் அடிக்கலாம்………
எச்சிலால் துப்பலாம்………।
புரிகாசப்படுத்தலாம்………॥
இயேசுவைப் போலவே பாடுகள்
படுத்திக் கொன்றும் போடலாம்
இது பயணமுகவர்கள் காலம்
அதிஸ்டம் தேடி அதிஸ்டமாய் வந்து
அதிஸ்டம் தொலைக்கிற சீதைகள்!!!!!!!
முகவர்கள் வெட்டும் இடுகாட்டுக் குழிகளில்……।

முதலில் அந்நகரம்

பிரகாசமாயிருந்தது
வாரிசாக்கி தத்தெடுக்கப்பிரியப்பட்டன....
அகதிகள் என்ற பெயரில்!
பிறகுநம்பிக்கையான வார்த்தைகளுடன்
தன்புணர்ச்சிக்காரர்கள்அலைந்தார்கள்
கைகள் கட்டப்படாமலேயே
கைதிகளாக்கிக் காரியம் பார்த்தார்கள்.
இவை பற்றிப் பொதுப்படையாகவே அன்பு காருண்யம் மனச்சாட்சி இரக்ககுணம் என்பதாய் நாடுகள்
நாடுகளுக்குள்பேசிக்கொண்டன
இறுதியில்
தங்கப் பூட்டுப்போட்ட தனியறைகளுக்கு
சில தற்கொலைபுரிந்தன...
சில எரிக்கப்பட்டன...
சில புதையுண்டன...
மீண்டு இருந்தவைகள்
பைத்தியமாகிச் சிரித்தன!!




நிச்சயம் !!!!!!!!
நிச்சயிக்கப்படாத நாளில்...
நிச்சயிக்கப்படாத வேலைதேடி...
நிச்சயிக்கப்படாத முதலாளியிடம்...
நிச்சயிக்கப்படாத ஊதியம் வாங்கி
நிச்சயமின்றி அலைகின்ற எனக்குநிச்சயிக்கப்பட்ட
வாழ்வொன்றுஇருப்பதாகச் சொல்கிறார்கள்।
பூணூல் தரித்த மற்றும்தரிக்காத புனிதர்கள் !
வாழ்வை நிச்சயமெனக் கூறுகின்றஇந்தப்
புனிதர்களின் பொய் முகங்களைநாம் நம்பித்தானாக வேண்டியிருக்கிறது।
நிச்சயிக்கப்படாததை நம்பவும்॥
நிச்சயமற்றவற்றை தொழுதெழவும்பழக்கப்பட்ட
எமக்குவேறு மார்க்கம் தான் என்ன?
உறவு பற்றி உண்மை பற்றி நட்பு பற்றிஎனக்குள்
தாறுமாறான கேள்விகள் உண்டு!
தத்துவம்பற்றி அரசியல்பற்றி நேர்மைபற்றிஎழுதியுள்ளவை
யாவும் எம்மைகுழப்பிப்போடுகின்றனகுரோதமும்
குதறும் பற்களும்கொண்டே அலைகின்றன -
நான்பார்க்கும் இரண்டு கால் விலங்குகள்।
பணநோட்டைக்கூட உரசி உரசி
பார்த்துநிச்சயம் பண்ணும் உலகில்மனிதனை
உரசி மட்டிடுகின்றமாயப்பொருள் எது ?
நிச்சயிக்கப்படாத வேளையில்நிச்சயம் பேசிய
மனிதரையும்சேர்த்தள்ளிக் காற்றில்
பறக்கிறசருகானது இவ்வாழ்வு
விதி
வெள்ளைத் தெருவில்
தனித்துப்போனது
அந்தக் கறுப்புக் காகம் !!!
வெள்ளைச் சிறுநீர்க்கழிப்பறைகளில் - ஓர்கறுப்பு
ஆண்குறி!
அபாயச் சங்கிலிஇழுத்த
போதிலும்அவதானிப்பற்றுஅலைகிறது-அது
எரிந்துபோகலாம்…குத்தப்படலாம்…
தண்டவாளக்கம்பியில்நெரியலாம்॥
கோரப்பற்களால் குதறப்படலாம்…
நீச்சல் தடாக நீருள்மரிக்கலாம்॥
எல்லா நம்பிக்கைகளும்
நம்பிக்கையிழந்த இந்த வாழ்வு
நேற்றைய வாழ்வுபோல்
இன்பகரமானதல்ல.
இருந்தும் அது இங்கு இருந்து தான்
ஆகவேண்டும்.--சிலந்திகள் பின்னிய
வலையினில் விழுந்துதான் ஆகவேண்டும்.

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter