Tuesday, April 15, 2008

மாதா இருந்த மடு !!



மாதா இருந்த மடு !!
மா.சித்திவினாயகம்
மறுபடி....
மறுபடி....
இலக்கில்லாமல்
வந்து விழுந்து
வெடித்துச் சிதறிய
புகையினுள் தொலையும்
மாதா இருந்த மடு.

ஜெபக்கூடமிருந்து
"யோவான்" சுவிசேகத்தின்
16ம் அதிகாரத்து 32ம் வசனம்
வளாகச் சுவர்களில்
எதிரொலித்த வேளையில் தான்
வெளியே சிலுவையில்
தொங்கிக் கிடந்த யேசுவின்
தலயை துண்டிதெறிந்தது
எதிரியின் எறிகணை.

மடு அல்லோலகல்லோலப்பட
என் மூதாதையரும் மூதாதைகளுக்கு
மூதாதையினருமாய்
முனைந்து..முனைந்து..
கட்டி எழுப்பிய பலிபீடத்திருந்து
மாதா பிடுங்கப்பட்டாள்.

வடக்கிற்கும்,கிழக்கிற்கும்
அமைதியைத் தேடி
பவனியாய் நடந்த - என்
அடைக்கல அன்னை, இன்று
தன்னுயிர் காக்க
அடைக்கலம் தேடி
ஓடிய கொடுமை!

மண்டை சிதைந்த
பால யேசுவின்
பக்கத்தில் வர
மாதா அஞ்சினாள்.
பைபிளும்,செபமாலைகளும்
காலில் இடற
மனிதர் ஓடினர்.
குருதி கொப்பளித்தோடும்
புனித நகரைப் பார்த்தும்,
பார்க்காதிருந்தது வத்திக்கான்.

வெறுங்கையோடிருந்த
மாதாவைத் துரத்தி - எதிரி
வென்றான்.
மாதா என்னைப் போலவே ,
புலம் பெயர்ந்தோடினாள்.

துரத்தப்பட்ட மாதாவிற்கு
எதுவும் விளங்கவில்லை.
தன்னை காப்பதற்காகவே
தனியரசாயிருக்கும் வத்திக்கானின்
மௌனம் புரியவில்லை.
வெள்ளையுடுப்போடும்
பைபிளோடும் நடமாடும்
சிங்கள கிறிஸ்தவர்களின்
பாராமுகம் புரியவில்லை.

அடைக்கலம் கொடுக்கும்
மாதாவிற்கே - எங்கும்
அடைக்கலமில்லையெனில்
வெறும்
அடைக்கலமுத்து அடைக்கலம் தேடி - இனி
எங்கடா போவான் ??????

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter