Tuesday, April 15, 2008

மடு மாதாவே !!!!மடு மாதாவே!!!
எந்த துன்பங்கள் வருகின்றபோதும் மடு மாதாவே நீயே தஞ்சமென இலங்கையின் எட்டு திசைகளிலிருந்தும் இன, மத, மொழி வேறுபாடின்றி ஓடி வரும் பக்தர்களுக்கும், மக்களுக்கும் தஞ்சமும் ஆறுதலும் அருட் கொடைகளும் வழங்கிய மடு மாதாவும் இன்று யுத்தத்தின் கொடூரத்தால் இடம்பெயர்ந்திருக் கிறார். சுமார் 450 ஆண்டுகளாக வீற்றிருந்த இடத்தில் தொடர்ந்தும் இருக்க முடியாத நிலையில் மக்களோடு மக்களாக மடு மாதாவும் அகதியாக இடம்பெயர்ந்து சென்றுள்ளமை கத்தோலிக்க மக்களுக்கு மட்டுமல்லாது மடு அன்னையின் மேல் பக்தி கொண்ட ஒவ்வொரு பக்தர்களின் மனதிலும் தீராத வேதனையாக உருவெடுத்துள்ளது. எத்தகைய படை நடவடிக்கைகளானாலும் படை நடமாட்டங்களானாலும் இதுவரை மடுமாதாவை அகதியாக்கியதில்லை. ஆனால் இன்று மேற்கொள்ளப்படும் படைநடவடிக்கைகள் அடைக்கலம் கொடுக்கும் மடுமாதாவையே அகதியாக்கியிருப்பது வரலாற்று அவலங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. மடுத்திருத்தலத்தைப் பாதுகாக்க மன்னார் திருச்சபையும் வெளியுலக திருச்சபையும் விடுத்த வேண்டுகோள்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்துள்ளது. 450 வருடங்களுக்கு மேலாக ஒரு புனித ஸ்தலமாக விளங்கி வரும் மடுத்திருத்தலத் திற்கு வருவோர், இருப்போர் எல்லோரும் இந்த ஆலய வளாகத்துக்குள் எந்தவிதமான களியாட்டங்கள், குடிவெறி, சூது போன்ற சட்டவிரோத செயல்பாடுகள் போன்றவற்றில் ஈடுபடாதவாறு புனிதத்தன்மை காப்பாற்றப்பட்டு வந்தது. ஆனால், இன்று இப்பகுதியில் புனிதத்துவம் மதிக்கப்படாத தன்மை உருவாகியுள்ளதைக் கண்டித்து கடந்த 2 ஆம் திகதி புதன்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பு யோசேப் ஆண்டகை தலைமையில் தென்பகுதி அருட்பணியாளர், கன்னியர்கள் உட்பட மன்னார் முழு திருச்சபையுமே திருச் செபமாலை வழிபாட்டுடன் மாபெரும் மௌன ஊர்வலம் ஒன்றை நடத்தியது. இந்த மௌன ஊர்வலத்தில் முடிவில் ஆயரால் எழுதப்பட்ட மகஜர் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு சென்றடைவதற்காக மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது. அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய சில விடயங்கள் வருமாறு : இலங்கை வாழ் கத்தோலிக்க மக்களுக்கு மடுத் திருப்பதியானது பெரு வணக்கத்துக்கும் பக்திக்குமுரிய ஒப்பற்ற ஆன்மிக திருத்தலமாக விளங்குகின்றது. ஏனைய மதங்களைச் சார்ந்த மக்களுக்கும் மருதமடு தனித்துவமானதோர் அருட்தலமாகத் திகழ்ந்து ஆன்மிக அருளைப் பொழிந்து வருகின்றது. பாதுகாப்பைத் தேடும் மக்களுக்கு மருதமடு அடைக்கலப் பூமியாகவும் இடம்பெயர்ந்தோருக்கு இல்லிடமாகவும் உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் புகழ்பெற்று விளங்குகின்றது. திருச்சபைத் தலைமைப் பீடமானது இத் திருப்பதியையும், சுற்றாடலையும் ஆன்மிக வாழ்வுக்குரிய புனித பூமியாகவும் இடம்பெயர்ந்த மக்களுக்குப் புகலிடமாகவும் தொடர்ந்து பேணி காத்து வந்திருக்கின்றது. சகல விதமான இராணுவ அல்லது அரசியல் செயல்பாடுகளும் முற்று முழுதாக இங்கு தடை செய்யப்பட்டு வந்தன. கடந்த சில வாரங்களாக இராணுவ நடவடிக்கைகள் இப்பகுதியில் தீவிரப்படுத்தப்பட்டதனால் இந்தத் திருத்தலமும் அதனுடைய ஆன்மிக, மனிதாபிமானப் பணிகளும் ஆபத்துக்குள் தள்ளப்பட்டிருப்பதையிட்டு நாம் மிகவும் கவலை கொள்கின்றோம். எறிகணை வீச்சுக்கள் மடுத்திருப்பதி வளாகத்துக்குள் தொடர்ச்சியாக வீழ்ந்து வெடித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கைக் கத்தோலிக்க ஆலய மன்றமும் மன்னார் ஆயரும் குருக்களும் அரசாங்கத்திடமும் விடுதலைப் புலிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து, இலங்கை வர்த்தமானி மூலம் 1982 ஆம் ஆண்டு மடுத் தேவாலய "ஒதுக்கீட்டு நிலம்' எனக் குறிக்கப்பட்ட பகுதியிலே சகலவிதமான அரசியல் அல்லது இராணுவ நடமாட்டங்கள் , நடவடிக்கைகள் என்பனவற்றை முற்றாகத் தவிர்க்க வேண்டுமென்றும் இந்தத் திருப்பதியின் புனிதத்தையும், மனிதாபிமானத் தன்மையையும் மதிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மடுத் திருப்பதியைச் சமாதானப் பிராந்தியமாகப் பிரகடனப்படுத்தி போர் நடவடிக்கைகள், நடமாட்டங்கள் முற்றாகத் தடை செய்யப்பட்ட நிலையிலே இத்திருத்தலம் தனது அரிய பணியைத் தொடர ஆவன செய்து தர வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதிக்கு பல தடவைகளில் அண்மைக் காலங்களில் கோரிக்கைகளும் எம்மால் விடுக்கப்பட்டுள்ளன. இன்று மடுத்திருப்பதிக்கு மிக அண்மையில் இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதால் மடுத் திருப்பதியையும் அதன் சுற்றாடலையும் அமைதிப் பிராந்தியமாக மதித்து இப்பகுதிக்குள் வருவதை முற்றாகத் தவிர்க்குமாறும் திருச்சபையின் நிர்வாகத்தின் கீழ் இப்பகுதி இயங்குவதை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஒருமித்த அவசரமான வேண்டுகோளை விடுக்கின்றோம். இந்த நெருக்கடியான நேரத்தில் கத்தோலிக்க மக்களுக்கும் மருதமடுத்தாயாரின் பக்தர்களான மற்ற சமயங்களின் அன்பர்களுக்கும் இலங்கையின் மதத் தலைவர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வேண்டுகோள் விடுத்து இருந்த சிறப்புமிக்க ஆன்மிக மையத்தின் புனிதத் தன்மையையும் தனித்துவத்தையும் பாதுகாக்க நாம் எடுக்கும் முயற்சிகளில் எம்முடன் இணைந்து செயற்படுமாறு வேண்டி நிற்கின்றோம் என்று அந்த மகஜரில் ஆயர் வேண்டியிருந்தார். எனினும் இந்த மௌன ஊர்வலத்தையும் வேண்டுகோளையும் உதாசீனம் செய்து மடுத்திருத்தல பகுதியில் தொடர் படை நடவடிக்கை முழு மூச்சில் இடம்பெற்றுவருகிறது. மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்ட மறுநாளான கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 6 மணியளவில் கடுமையான தாக்குதல் அச்சுறுத்தலால் மடு அன்னையின் திருச்சொரூபம் பாதுகாப்பான இடமொன்றிற்கு எடுத்துச்செல்லப் பட்டது. மடுமாதா அகதியா னார். மன்னார் மறை மாவட்டத்தின் வட திசையில் கடைசி பங்கான தேவன்பிட்டி புனித சவேரியார் ஆலயத்தில் தற்போது மடுமாதா அடைக்கலம் தேடியிருக்கிறார். கடந்த காலங்களில் இவ்வாறான யுத்தம் மூண்டிருந்த போது 2001 ஆம் ஆண்டு சமாதானத்துக்காக வேண்டி வடக்கு, தெற்கு பகுதியில் மடு அன்னையை பவனியாக எடுத்துச் சென்றனர். அதன் பின் சில மாதங்களுக்குள் நாட்டில் சமாதானம் மலர்ந்தது என அன்னையின் மேல் பக்தியும் விசுவாசமும் கொண்ட பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இன்று அந்த அன்னையே அடைக்கலம் தேடுமளவுக்கு நிலைமை சென் றிருக்கிறது. மடு அன்னையே இடம்பெயர்ந்துள்ளதால் மக்கள் திசைமாறிய பறவைகளாக அகதிகளாக யாரிடம் செல்வோம் இறைவா என்ற அழுகைக் குரலுடன் அலைமோதி திரிகின்றனர். அடைக்கலம் கொடுக்கும் அன்னைக்கே இந்நிலையெனில் நாங்கள் என்ன செய்வோமென மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter