Saturday, October 18, 2008


தமிழக அரசியல் நகர்வுகள் இலங்கைப் போர் நிலைவரங்களில் மாற்றத்தைக் கொண்டு வருமா?
[ சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, ] நன்றி: தினக்குரல் பத்திரிகை


இன்று வன்னிப் பெரு நிலப்பரப்பில் போர் உச்ச நிலையை அடைந்து காணப்படுகின்றது. மகிந்த சிந்தனையின் கீழான அரச படைகள் கிளிநொச்சி நகரத்தில் சிங்கக் கொடியைப் பறக்க விடும் நாளைக் கொண்டு வரக் கடுமையான முன்நகர்வுப் போரை நடத்தி வருகின்றன. அத்தகைய இலக்கை அடைவதற்கு இன்னும் இரண்டு கிலோமீற்றர் தூரம் மட்டுமே இருப்பதாகவும் அதனை இரண்டு நாட்களில் அடைந்துவிடுவோம் என்றே கூறினர். இவ்வாறு கூறி இரண்டு வாரங்கள் கழிந்த நிலையிலும் கிளிநொச்சி நகருக்குள் புக முடியவில்லை. காரணம் புலிகள் இயக்கம் தனது முழுப் பலத்தையும் பிரயோகித்து படையினரின் முன் நகர்வைத் தடுத்து வருவதாகும்.
இச் சூழலில் வன்னியை ஊடறுத்துச் செல்லும் ஏ9 நெடுஞ்சாலைக்கு மேற்குப் புறக் கிராமங்களில் இருந்து பெரும்பாலான மக்கள் கிழக்குப் புறம் நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். அவ்வாறு சென்றவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டரை இலட்சம் பேராகும். இந்தத் தொகைக்குள் முல்லைத்தீவு நெடுங்கேணி மற்றும் கிழக்குக் கரைக் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் உள்ளடங்குவர். இதனால் உணவு, உறைவிட மற்றும் அடிப்படை வசதியற்ற மக்கள் படும் அவலங்கள் சொற்களில் வடிக்க முடியாதவைகளாகும்.
காடுகளும் விவசாய நிலங்களும் நிரம்பிய வன்னிப் பிரதேசத்தில் மர நிழல்களும் விவசாய மேட்டு நிலப் பகுதிகளுமே தஞ்சமடையக் கூடிய பகுதிகளாக உள்ளன. இரண்டு வாரங்களுக்குள் 123 பேர் விஷப் பாம்புக்கடிகளுக்கு உள்ளாகி அதில் பச்சிளம் குழந்தை உட்பட சிலர் இறந்தும் உள்ளனர் என்றால் இடப்பெயர்வின் கொடுமையைப் புரிந்து கொள்ள முடியும். உணவு அனுப்புவதில் அரசாங்கம் அசமந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது. அதன் நோக்கம் இடம்பெறும் போரில் உணவையும் ஒருவகை ஆயுதமாகப் பயன்படுத்துவதேயாகும்.
அவ்வாறு செய்வதன் மூலம் அரசாங்கம் விடுத்த அழைப்பை ஏற்று வவுனியாவின் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வன்னி மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்கள் அவ்வாறு வரவில்லை. அதற்கான இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, புலிகள் இயக்கம் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கவில்லை. இரண்டு, மக்கள் அதனையும் மீறி வவுனியாப் பகுதிகளுக்கு வந்தால் அகதி முகாம்களில் வைத்து பல்வேறு இம்சைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதை இன்று கிழக்கிலும் வடக்கிலும் கொழும்பிலும் இடம்பெற்று வரும் நாளாந்தச் சம்பவங்கள் முன்னெச்சரிக்கை செய்து கொண்டமையாகும்.
எனவே செத்துத் தொலைந்தாலும் சொந்தப் பிரதேசத்தில் மடிந்து கொள்வோம் என்ற விரக்தியின் உச்சத்திலேயே மக்கள் இருந்து வருகின்றனர். அத்தகைய மக்கள் மீது தான் புலிகளின் இலக்குகள் எனக் கூறி விமானக் குண்டு வீச்சுகளும் எறிகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன. வன்னிப் பிரதேசத்தின் முக்கிய சிகிச்சை வழங்கும் கிளிநொச்சி மருத்துவமனையின் பெரும் பகுதி இடப்பெயர்வுக்கு உள்ளாகி உள்ளது. இன்று விசுவமடு, தருமபுரம், புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்கள் குவிந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி உள்ளனர்.
இவ்வாறு மகிந்த சிந்தனை அரசாங்கம் முன்னெடுக்கும் போரும் அதனை எதிர்கொண்டு நிற்கும் புலிகளின் எதிர்த் தாக்குதல்களும் வன்னிப் பெருநிலப்பரப்பை அதிர வைத்து வருகின்றன. அதன் எதிரொலிகள் வடக்கு, கிழக்கிலும் கொழும்பிலும் பலநிலைகளிலும் பல்வேறு நெருக்கடிகளாகவும் கொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களாக விரிவடைந்து கொண்டே போகின்றன. இவற்றுக்கெல்லாம் அரசாங்கத்தின் பதில் பயங்கரவாத ஒழிப்பு என்ற ஒற்றைப் பதில் நிலையாகவே இருந்து வருகின்றது. அத்தகைய பயங்கரவாதத்தை ஒழித்த பின்பே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தரப்படும் என்றும் அது தற்போதைய கிழக்கு மாகாண முன் மாதிரியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
அதாவது இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்றவாறு முழுப் பூசணிக்காய் இலைச் சோற்றில் மறைக்கப்படுகிறது. இந்தப் போர்ச் சங்கு ஊதலில் பேரினவாதிகள் எல்லோரும் ஒரு தரப்பாக நிற்கின்றனர். ஏற்கனவே யுத்த எதிர்ப்பிலும் அரசியல் தீர்வையும் சமாதானத்தையும் வேண்டி முன்னின்ற சிங்கள மக்கள் இன்று மௌனமாகி இருக்கின்றனர் அல்லது மௌனமாக்கப்பட்டுள்ளனர். அந்தளவிற்கு அரசாங்கத்தின் போர் முனைப்பும் அதற்கான பிரசார உத்தி முறைகளும் சிங்கள மக்களை திசை திருப்பி வைத்துள்ளன.
கிளிநொச்சியைப் பிடித்தால் சகலதும் தீர்ந்துவிடும் என்ற ஒருவித மயக்க மருந்து ஏற்றப்பட்ட மக்களாகவே சிங்கள மக்கள் காணப்படுகின்றனர். இந்த மயக்கத்தில் விலைவாசிகளின் உயர்வும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பும் மயங்கிய கண்களுக்குத் தெரியாத புகார் நிலையே தென்னிலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்றைய போரில் பின்பற்றப்படும் தமிழர் தரப்பின் அரசியல் இராணுவத் தந்திரோபாயங்களும் சிங்கள மக்களை தமிழர் பிரச்சினையின் பக்கம் நெருங்கிவரவிடாது அந்நியப்படுத்தி உள்ள சூழ்நிலைகளையும் நிராகரித்து விடமுடியாது. பக்கத்து வீட்டுக்காரருக்குப் பிரச்சினையை நட்பு ரீதியில் நியாயமான வழிமுனைகளினால் எடுத்துக் கூறாது அவர்களையே பகையாளிகளாக்கி வைத்து வந்த தவறு நீண்ட காலமாகவே இலங்கை இனப்பிரச்சினையில் இடம்பெற்று வந்துள்ளது. அதனால் இரு வீட்டுப் பகையைப் பயன்படுத்தி பக்கத்து வீட்டுச் சுயநல உறவினர்கள் ஏமாற்றி இலாபம் அடைந்து வந்த போக்குத்தான் முறைப்படைந்து கொண்டது. சிங்கள உழைக்கும் மக்களை அந்நியப்படுத்தி அவர்களைச் சிங்கள ஆளும் வர்க்க சக்திகளின் பக்கம் தள்ளிவிட்டு மேற்கு நாட்டு எசமானர்களிடமும் இந்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளிடமும் முறையிட்டுக் கெஞ்சி நிற்பதில் எதுவுமே நடக்கப் போவதில்லை என்பது பட்டும் பட்டும் புரிந்து கொள்ளப்படவில்லை என்பது தான் தமிழர் தரப்பு அரசியல் போராட்டச் சோகமாக உள்ளது.
இலங்கையின் விசேட சூழலுக்கும் தர்க்க நியாயங்களுக்கும் யதார்த்த நிலைமைகளுக்கும் ஏற்றவாறான கொள்கைகளும் கோரிக்கைகளும் வைத்துப் போராடும் எந்தப் போராட்டமும் தோல்வியடைவதில்லை என்பது தான் வரலாறு கற்றுத் தரும் பாடமாகும். இதனைத் தமிழர் தலைமைத்துவங்கள் எந்தளவிற்கு உணர்ந்து கொண்டன என்பது முக்கியமான கேள்வியாகிறது. இதன் அர்த்தம் பேரினவாதத்தையோ அன்றி அதன் போர் மூலமான இராணுவத் தீர்வையோ அதன்பாற்பட்ட ஜனநாயக மனித உரிமை மீறல்களையோ நியாயப்படுத்துவதாக இருக்க முடியாது என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
இவ்வாறான ஒரு நெருக்கடி மிக்க சூழலில் மேற்கு நாடுகளின் தலைநகரங்களில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது உறவுகளுக்கான உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த கால் நூற்றாண்டு காலப் போர்ச் சூழலில் புலம் பெயர்ந்த மக்கள் அளித்த உதவிகளால், ஒத்துழைப்பால் தான் வடக்கு, கிழக்கில் முழுமையான பட்டினி நிலை ஏற்படவில்லை என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகும்.
ஆனால், அவர்களது உதவிகள் தத்தம் உறவினர்களுக்குரியவைகளே அன்றி எவ்வித ஆதாரமும் அற்ற உழைத்து வாழும் தமிழ் மக்களுக்குரியவையாக இல்லை. நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் பொசிவது போன்று உழைக்கும் மக்கள் தமது உழைப்பின் ஊடாகவே அதிலிருந்து அற்ப சொற்பம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததே அன்றி சமூகப் பொது உணர்வுடன் அடிநிலை மக்கள் கவனத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் நியாயம் இருக்கவே செய்கிறது.
இவை ஒருபுறமிருக்க தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்கான ஆதரவு அலையானது மேலெழும்பி நிற்பதைக் காணமுடிகிறது. இயல்பானதும் எல்லைக்குட்பட்டதுமான இன உணர்வு ஒரே இன மக்களிடம் ஏற்படுவது புதுமை அல்ல. அந்த வகையில் தமிழக மக்களிடையே இலங்கைத் தமிழர்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிரான உணர்வுகள் இருந்தே வந்துள்ளன. அவற்றைத் தணிப்பது அல்லது அலட்சியப்படுத்துவது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்கனவே போராடும் இலங்கைத் தமிழர் தரப்புகளிடம் இருந்து நிகழ்த்தப்பட்டன. அவற்றின் பாதிப்பில் இருந்து தமிழக மக்கள் முற்று முழுதாக விடுபட்டுவிடவில்லை என்பது மறுக்கப்பட முடியாதவை. இதனை முதலமைச்சர் முதல் காங்கிரஸ் காரர்கள் வரை ஏற்கனவே சுட்டிக்காட்டியும் வந்துள்ளனர். அதனாலேயே மத்திய அரசின் முடிவுதான் மாநில அரசின் முடிவு என முன்பு முதலமைச்சர் மு.கருணாநிதி கூறிவந்தார்.
தமிழ் நாட்டின் பிரதான கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றி வெறும் அறிக்கைகள் ஆவேசப் பேச்சுக்களுடனேயே இருந்து வந்தன. தத்தமது அரசியல் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ற அளவிலேயே அவை நடந்து வந்துள்ளன. ஆனால் அண்மையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் நடத்தியது. அதற்கு தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் தவிர்ந்த கட்சிகளுக்கு அழைப்பும் விடுத்தது. ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க. இறுதி நேரத்தில் பங்கு கொள்வதில் இருந்து விலகிக் கொண்டது. ராமதாஸ் தலைமையிலான பா.ம.கட்சியும் கலந்து கொள்ளவில்லை. வைகோ. உட்பட மாக்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி, விஜயகாந்தின் கட்சி போன்ற கட்சிகள் கலந்து கொண்டன. கட்சிகள் கலந்து கொண்டமைக்கு அப்பால் தமிழக மக்களின் உணர்வலைகளை வெளிப்படுத்தும் வகையில் மக்கள் கலந்து கொண்டனர். இத்தொகையையும் உணர்வையும் அவதானித்த முதலமைச்சர் கருணாநிதி இனியும் தாமதித்தால் தமக்கு செல்வாக்கு மங்கிவிடும் என்பதால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கடந்த 14.10.2008 அன்று நடத்தி தாமே முன்னிலை வகிப்பதாகத் தோற்றம் காட்டிக் கொண்டார். ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
மேற்படி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எச்சரிக்கைத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதாவது இன்னும் இரண்டு வார காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காத நிலையில் தமிழகத்தின் நாற்பது பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை விலக்கிக் கொள்வார்கள் என்றுமே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அறிவிக்கப்பட்டது. இத்தீர்மானம் எந்தளவிற்கு நேர்மையானதாகவும் உண்மையானதாகவும் இருக்கப் போகின்றது என்பது பலகேள்விகளைக் கொண்டதாகவே காணப்படுகிறது. தமிழகத்தில் 39 பேரும் பாண்டிச்சேரியில் ஒருவருமாக நாற்பது பா.உ. உள்ளனர். இவர்களில் இருந்து பன்னிரண்டு பேர் மத்திய அரசில் அமைச்சர்களாக இருக்கின்றனர்.
அத்துடன் இந்நாற்பது பா.உறுப்பினரும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். தி.மு.க. 16, காங்கிரஸ் 10, பா.ம.க. 6, ம.தி.மு.க. 4, கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 என்ற நிலையிலேயே அவை இருந்து வருகின்றன. ஜெயலலிதாவிற்கு ஒரு பாராளுமன்ற ஆசனங் கூட இல்லை. இவ்வாறான பல கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரே முகமாக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக இன உணர்வின் உச்சமாகத் தமது ராஜிநாமாவை இரு வாரத்தின் பின் செய்வார்களாயின் அது வரலாற்றில் உயர்ந்த பட்ச அதிசயமாகவே அமைந்து கொள்ளும். தமது பதவிகள், பணவருவாய்கள், அந்தஸ்து, எதிர்காலக் கனவுகள் யாவற்றையும் துறக்க இந்த நாற்பது பேரும் முன்வருவார்களா என்பதே கேள்வியாகிறது.
அதேவேளை, இப்பதவி விலகும் தீர்மானத்திற்குக் காரணமான இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இவ் அனைத்துக் கட்சிக் கூட்டம் முன்வைக்கும் தீர்வு யோசனைகள் என்ன? ஒத்த கருத்துடன் குறிப்பான முன்மொழிவுகளோ ஆலோசனைகளோ எதுவும் முன்வைக்கப்படவில்லை.
பா.ம.க.வும், வைகோவும் தமிழீழம் வேண்டும் என்கிறார்கள். தி.மு.க. மத்திய அரசின் முடிவுதான் தனது தீர்வு முடிவு என்கிறது. யுத்தத்தை நிறுத்த வேண்டும் என ஒரு கட்சி கூறுகிறது. மாநில சுயாட்சி என்கிறது மற்றொரு கட்சி. இவ்வாறு தீர்வுக்கான முன்மொழிவுகளில் தெளிவுடன் இலங்கை நிலைமைகளுக்கு ஏற்ப கொள்கை வைக்க முடியாது உள்ளன. ஜெயலலிதா தமிழருக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படுவதை ஆதரிப்பதாகவும் புலிகள் இயக்கத்தை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன் இறைமையுள்ள இலங்கையின் உள்விவகாரங்களில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்றும் கூறியிருக்கிறார்.
இவ்வாறு தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றிப் பலவாறான நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. முதலமைச்சர் நாடகமாடுகிறார் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. அதனை வைத்துப் பார்க்கும் போது காலத்திற்குக் காலம் கருணாநிதி தமது தி.மு.க. ஆட்சி அதிகார நிலைப்பிற்கும் தனது குடும்ப அதிகார நிலைப்படுத்தலுக்கும் ஏற்றவாறு அரசியல் காய்கள் நகர்த்தி வந்த நாடகங்களை மறந்துவிடமுடியாது
.

1 comment:

Anonymous said...

Purely unbiased article.It reflects current situation.Time will tell everything.

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter