Monday, March 23, 2009

இரத்தம் வெவ்வேறு நிறம்

ஈழத்தின் இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களில்,தமிழக உறவுகள் பலர் முனைப்புடன் உள்ள போதும்,அது குறித்த எண்ணமும, செயலும் இல்லாத பலரது நிலை கண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் வடித்துள்ள கவிதையிது.



இரத்தம் வெவ்வேறு நிறம்



அங்கே பிணங்கள்
விழுந்து கொண்டிருக்கின்றன நாம்


"எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?"
என்று
விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!
அங்கே
குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன
நாம் பட்டாசு வெடித்துப்
பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
வேட்டையாடப்பட்டுக்
கதறிக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
வெள்ளித் திரைகளுக்கு முன்
விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
"கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?"
என்று
பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
இருட்டுக்காடுகளுக்கு
வேர்வை வார்த்துக் கொண்டிருக்கிறோம்!அவர்கள்
சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
அதர பானம் பருகிக் கொண்டிருக்கிறோம்!
இதில் வியப்பேதும் இல்லை
அவர்கள் கவரிமான்கள்
நாம் கவரிகள்இதோ
தேவவேடம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றன!
இதோ
இரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்
நீரைக் கலக்கிய பழியை
ஆடுகளின் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றன!இதோ
சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில்
ராகப் பிழை கண்டுபிடித்துக்
கொண்டிருக்கிறார்கள்!
இதோ
வெள்ளைக்கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக் கொண்டிருக்கிறார்கள்!அன்று
அசோகன் அனுப்பிய
போதிமரக் கன்று
ஆயுதங்கள் பூக்கின்றது!
இன்று
அசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் இரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது!தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக் கொண்டிருக்கிறது!!!-


கவிக்கோ அப்துல் ரகுமான்



இக் கவிதையை அகதியின் நாட்குறிப்பு முகவரிக்கு அனுப்பியிருந்த
கீற்று நண்பர்களுக்கு நன்றி.

1 comment:

Anonymous said...

அற்புதமான கவிதை.
ஜெயா

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter