Tuesday, March 24, 2009

பிணம் தின்கிறது கிழக்கு வளாகம்!!

கிழக்கு பல்கலைகழகத்தில் தொடரும் மரணங்கள்; பல்கலைக்கழக அதிகாரவர்க்கத்தின் பின்னணியில்; வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்!

இது தமிழ்வின் செய்தி வாரியத்திலிருந்து மீள் பதிவாக்கப்பட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி மேலும் பல்கலைக் கழக மாணவர்களின் செய்திகள் திரட்டப்படுகின்றன. தமிழர்கள் நம்பியிருந்த பல்கலைகழகங்களும் தமிழருக்குச் சதியென்றால் ??????

பிணம் தின்கிறது கிழக்கு வளாகம்!!

கடந்த மாதம் ஆரம்பமாகிய கிழக்கு பல்கலைகழத்தின் தற்கொலை இறப்புக்கள் தொடர்ச்சியாக ஒரு மாதம் முடிவதற்கு முன்னரே மூன்று இறப்புக்கள். கடந்த இரண்டு இறப்புகளின் போதும் வெளிப்படாத பல உண்மைகள் இறுதியாக 22-03-2009 அன்று நடந்த இறப்புடன் வெளிவர தொடங்கியுள்ளது.
இதுவரை நடந்த இறப்புகளுக்கு கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் எந்த ஒரு காரணத்தையும் கண்டுபிடித்ததோ, இதை தடுப்பதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தது போன்ற எந்த நடவடிக்கைகளையும் வெளிப்படையாக காண முடியவில்லை.
பின்வரும் சம்பவங்களுக்கு இதுவரை விடை கிடைக்கவே இல்லை.
முதலாவதாக தற்கொலை செய்து கொண்ட விடுதிக்காப்பளரும், கடந்த வருட மாணவியுமாகிய பிறேமாவின் மரணம் தற்கொலை இல்லை; கொலை என்று பல்கலைகழத்தில் பலராலும் அவருடைய ஊர் மக்களாலும் அடித்து சொல்லப்படுகின்றது.
மருத்துவ அறிக்கை கூட அதை உறுதிப்படுத்தியது. அதை இந்த பல்கலைகழக நிர்வாகம் வெளியிட்டதா? ஒரு மரண அறிவித்தலைக் கூட வெளியிடவில்லை என்ற ஏக்கமும் கோபமும் அம்மாணவியின் உறவினர்கள் மற்றும் ஊராரது ஏக்கமும் கூட.
முன்னை நாள் பிரதி பதிவாளர் போகேந்திரன் பல்கலைக்கழக செலவிலும் பல்கலைக்கழக வாகனத்திலும் குடும்பத்தோடு சுற்றுலா செல்வதற்கு நிதி ஒதுக்கிய இந்த பல்கலைக்கழகத்திற்கு இந்த ஊழியரின் இறப்பிற்கு ஒரு மரண அறிவித்தலைக்கூட வெளியிட முடியாதா என்ற ஏக்கம் பல மாணவர்கள் மத்தியிலுள்ளது.
ஏன் இந்த பாகுபாடு?
அந்த மாணவி- ஊழியர் 05 பெண் சகோதரியைக் கொண்ட மிக வறிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலா? மிகமிக மென்மையான குணம் உள்ள ஒரு பெண் என்று அனைத்து விடுதி மாணவர்களாலும் அறியபட்ட பெண்ணுக்கு ஏன் இந்த வஞ்சனை?
இறுதிப் பிரியாவிடைக்கு ஒரு அஞ்சலி செலுத்துவதை விட பிரதி பதிவாளர் குடும்பத்திற்கு சுற்றுலா செல்ல பணம் ஒதுக்குவது முக்கிய கடமையாக உள்ளதா இந்த பல்கலைகழகத்திற்கு?
அந்த மாணவியின் இறப்புக்கு பல வழிகளில் காரணம் தேடிய இந்த சமூகம், பல்கலைகழக ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு உண்மையை எத்தனை பேர் அறிவார்கள்?
இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சாமினி என்றழைக்கப்படும் பிரதான பெண் விடுதி காப்பாளர். இவர் பெண்கள் விடுதியில் போடும் அட்டகாசம் கொஞ்சம் நெஞ்சமல்ல. இந்த பெண்கள் விடுதியில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் இவருக்கு கட்டாயமாக மாதாந்தம் இலஞ்சம் கொடுக்க வேண்டும் என்பது அனைத்து பல்கலைக்கழக ஊழியருக்கும் மாணவருக்கும் அப்பட்டமாக தெரிந்த உண்மையே.
இவரின் பெண் அடியாளாக இவ்வாண்டு இறுதி வருட முகாமைத்துவ பட்டப்படிப்பை தொடரும் கோட்டைக்கல்லாறைச் சேர்ந்த கௌசல்யா என்ற மாணவி போடும் ஆட்டமும் கொஞ்சமல்ல. இவை அனைத்தும் பல்கலைகழகத்தில் சாதாரண கூலி வேலை செய்யும் தொழிலாளிக்கே தெரியும் போது நிர்வாகத்திற்கு தெரியாமல் போனது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
இவர்களுக்கு எதிராக இந்த நிர்வாகம் எடுத்த நடவடிக்கை தான் என்ன? பதில் சொல்லுமா இந்த நிர்வாகம்? இவர்களினால் அந்த இறந்த விடுதி மாணவி (விடுதி காப்பாளர்) அனுபவித்த கொடுமை விடுதி மாணவிகளுக்கு மட்டுமே வெளிச்சம்.
அடுத்த சோகம் வன்னி, யாழ் மாணவர்களின் உணவுக்கான போராட்டம்
கிழக்கு பல்கலைகழகத்தில் 09 மாணவர்களும் (தற்போது 08) பல்கலைக்கழகத்தின் பிரிவாகிய கல்லடி இசை நடனக்கல்லூரியில் 15 மாணவர்களுமாக மொத்தம் 24 வன்னி மாவட்டத்தை மட்டும் சேர்ந்த மாணவர்கள் உள்ளனர். இவர்களுக்கான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று திரும்பத்திரும்ப வாய் கிழிய கத்தும் நிர்வாகம் செய்தது,
வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த 07 வன்னி மாணவர்களுக்கு மட்டும் 5000 ரூபா வீதம் 2 தடவையில் 10000 ரூபா வழங்கியுள்ளது. கடந்த வருடம் மார்கழி மாதத்திலிருந்து குடும்பத்துடன் எந்த தொடர்புமற்ற மாணவர்களுக்கு இந்த நிர்வாகம் வழங்கியது இந்த தொகை மட்டுமே. மிகுதி 17 மாணவர்களின் நிலை பற்றி இன்று வரைக்கும் வாய் திறக்கவே இல்லை இந்த நிர்வாகம்.
அதிலும் பெரிய சோகம் இசை நடனக்கல்லூரி மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை என்பது தான் வேதனைக்குரியது.
ஆனாலும் ஒரே ஆறுதல் பல்கலைகழக மருத்துவ பிரிவு மாணவர்கள் அவர்களின் பீடாதிபதியுடன் இணைந்து இசை நடன கல்லூரி மாணவர்களில் 11 பேர் தெரிவு செய்து ஒருவருக்கு 5000 வீதம் வழங்கியது. இப்படியான நல்ல உள்ளம் படைத்தவர்கள் இருக்கின்ற இந்த நிருவாகத்தில் தான் இன்றுவரை அம்மாணவர்களின் நிலை பற்றி கவலைப்படாமல் தங்கள் சுகபோகங்களை மட்டுமே நோக்கமாக கொண்டவர்களும் உள்ளனர் என்பது வேதனைக்குரியது.
மருத்துவ பிரிவு பீடாதிபதிக்கு இருக்கும் உணர்வு சுகபோகங்களை மட்டுமே அனுபவிக்கும் ஏனைய பீடாதிபதிகளுக்கு இல்லாமல் போனது அடுத்த வேதனையான விடயம்.
கடன் சுமை தாங்க முடியாமலும் குடும்பப்பிரிவை அனுபவிக்க முடியாமலும் தற்கொலை செய்து கொண்ட முல்லைத்தீவு மாணவியின் இறப்புடன், பாதுகாப்பு காரணங்களுக்காக பல்கலைக்கழகம் இரு வாரம் மூடப்பட்டு பல்கலைகழக விடுதியிலிருந்த வன்னி, யாழ் மாவட்ட மாணவிகள் அனைவரும் மட்டுநகரின் மத்தியில் உள்ள பல்கலைக்கழகத்தின் விருந்தினர் விடுதியில் மொத்தமாக 31 மாணவிகள் தங்க வைக்கப்பட்டனர். அம்மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்து கொடுத்ததாக கூறிய நிர்வாகம் ஒரு துரும்பையேனும் கொடுக்கவில்லை என்பதே நிஜம்.
இருந்த போதிலும் முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவனாகிய பல்கலைகழக அனைத்து மாணவ தலைவரின் வழிநடத்தலில் மருத்துவ பிரிவு, முகாமைத்துவ பிரிவு, கலை பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து மாணவர்களும் தங்கவைக்கப்பட்ட மாணவிகளுக்கு தேவையான உணவு முதல் கொண்டு அனைத்து தேவைகளையும் தங்களால் முடிந்த வரை செய்து கொடுத்தனர். அரசாங்கக் மாதாந்தக் கொடுப்பனவாகிய "மாகாபொல" பணத்தினை முற்பணமாகப் பெற்று தருவதாக தப்பட்டம் அடித்த நிருவாகம் தனது நிருவாகப் பணத்திலிருந்து ஒரு சதமேனும் வறுமையில் வாடும் இந்த யாழ் மாணவிகளுக்காக கொடுக்க வில்லை.
கல்வி அமைச்சிலிருந்து வருடாந்தம் ஒதுக்கப்படும் பெருந்தொகைப் பணத்திற்கு என்ன நடக்கின்றது என்பது நிருவாகம் மட்டுமே அறிந்த உண்மையாகும். இது இவ்வாறு இருக்க, வெளியில் இருந்து வரும் அனைத்து உதவிகளையும் இந்த பல்கலைக்கழக நிருவாகம் தடுக்கின்றது என்ற உண்மைதான் கொடுமையிலும் கொடுமையான விடயம். ஆனாலும் இவற்றை எதையுமே வெளியிடாமல் மிகத்திறமையாக எல்லவற்றையும் மூடிமறைத்து வருகின்றது இந்த நிருவாகம்.
ஆனாலும் இந்த நிருவாகத்தின் அனைத்து ஊழியரையும் குறை கூற முடியாது. இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய பதவிகளில் உள்ளவர்களே இதற்கான அனைத்து பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏன் இந்த நிருவாகம் பரந்த மனத்துடன் உதவி செய்ய வரும் உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகளின் கைகளைத் ஏன் தடுத்து நிறுத்துகின்றது? நிருவாகத்தின் ஊழல் வெளிவந்துவிடும் என்ற பயமா? என்பது அனைவரினதும் கேள்வியாகும்.
படிப்பு சுமை ஒரு புறம் குடும்ப பிரிவு இன்னொரு புறமாக போராடிக் கொண்டிருக்கும் இந்த மாணவர்களுக்கு இப்பொழுது பணப்பிரச்சினை பெரிய பிரச்சினையாக உள்ளது. ஆனாலும் இந்த நிருவாகம் வெளியில் இருந்து வரும் அனைத்து உதவிகளையும் தடை செய்வது மட்டும் இல்லாமல் தானும் எந்த உதவிகளையும் செய்யாமல் இருப்பது ஏன்?
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனைத்து நிதிகளையும் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் சூறையாடியது தான் உண்மை என்பது இதயமுள்ள ஒவ்வொரு ஊழியருக்கும் தெரியும். பொறுப்பிலுள்ள முக்கிய தலைவர்கள் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு மாணவர்களின் உண்மையான பிரச்சினைகளை அறிந்து அவர்களுக்கான உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வீர்களானால் இனியாவது இவ்வாறான உயிர் இழப்புகளை தடுக்க முடியும்.
இப்போதைய நிருவாகம் சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டு மௌனமாக இருப்பீர்களானால் தொடரும் இந்த தற்கொலைகள் மிக விரைவில் 23 மாணவர்களையும் தொடரும் என்று கூறினாலும் நம்பத்தான் வேண்டும்.
இந்த நிருவாகத்தின் அனைத்து நாடக அரங்கேற்றங்களும் வெளிக்கொண்டு வரும் வரை எந்த உதவிகளையும் இந்த நிருவாகம் அந்த பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு சென்றடைய விடாது என்பது கசப்பான உண்மை.
இதேவேளை கிழக்கில் நடக்கும் முதலமைச்சருக்கும் மத்திய அமைச்சருக்குமிடையிலான தர்பாரை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கிழக்கு பல்கலைக்கழக அரூபகரங்களின் காட்டுத்தர்பார் தொடர்கிறது. இந்த ஊழல் பேர்வழிகளின் காட்டுத்தர்பாரை நிறுத்தி மாணவர்களின் உயிர்களை காப்பாற்றவேண்டியதே இப்போதைய உடனடி தேவை. கிழக்கின் கல்வி சமூகத்துக்கு சமர்ப்பணம்.
(கிழக்கிலிருந்து நசார் )

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter