Monday, May 04, 2009

பட்டாம் பூச்சிகளின் மரணம்!

பட்டாம் பூச்சிகளின் மரணம்.
- தமிழ்சித்தன் -

எல்லாப்
பட்டாம்பூச்சிகளும்
பட்டப் பகலில்
எல்லோர் கண்முன்பும்
எரித்தழிக்கப்பட்டபோது
உலகம் உறக்கத்திலிருந்தது!!

கல்லெறிந்தும்,
இறக்கையை ஒடித்தும்,
எரித்தும்,
உயிரோடு சிதைத்தும்,
பட்டாம்பூச்சிகள் இறந்த போது
உலகக் கவனம்
கவன ஈர்ப்புக்களிலும்...
கண்ணீர் அஞ்சலிகளிலும்..
கொடியசைத்தலிலும் ...
உண்ணாவிரதங்களிலும்...
மனிதச்சங்கிலிகளிலும்....
இலயித்துப் போயிருந்தது.

தங்கள் பெண்டுபிள்ளைகளோடும்,
பேரர்களோடும்,
உலகத்துத் தூதுவராலயங்களின்
முன்னால்
கனதியான கறுத்தக் கார்களில்
கழுத்தைச் சுற்றிய
மவ்ளரோடும், மடிநிறைந்த
உணவுப் பைகளோடும்
வந்திறங்கிக்
கதையளந்தனர் கனவான்கள்.
பட்டாம் பூச்சிகளிற்காக தாங்கள்
பாவ விமோசனம் தேடுவதாகச்
சொன்னார்கள் அவர்கள்.

இறகொடிந்த பட்டாம் பூச்சிகளை
வாருங்கள் வாருங்கள் என
கையசைத்தது ஒரு கூட்டம்.
போகாதே போகாதே
என்று வழிமறித்தது
மற்றொரு கூட்டம்.

இறக்கையளிந்து போனது சிலது...
எரிந்தேயழிந்து போனது பலது....
பட்டினி கிடந்து நலிந்தது சிலது...
பாளும் குண்டினுள் வெடித்தது சிலது...

ஏமாற்றவல்லவன்
வாக்குச் சீட்டுத் துரும்பாய்
இந்த மரணங்களை கொண்டாடினான்.
மரண அறிவிப்புகளால்
பணப் பெட்டிகளை நிரப்பிக் கொண்டிருந்தனர்
ஊடக ஊதுகுழல்கள்.
மேனிமினுக்கிகள்
புதிய நந்தவனங்களை
பட்டாம் பூச்சிகளுக்கு
உருவாக்குவதாகச் சொன்னார்கள்.
எஞ்சியோர் வழைமைப்படி
கத்தினார்கள்
கரைந்தார்கள்
எதுவும் நடக்கவில்லை.

எதுவும் நடக்காதென்றறிந்த பிறகும்
பட்டாம் பூச்சிகளின் கழுத்துக்கள்
திருகப்படும் வரை
கொடியுயர்த்திக்
கழித்திருந்தனர்
மீதியாயிருந்த உலகச்
சமாதானத் தூதுவர்.

ஒரு நல்லது நடக்கவேணுமென்றால்
இடர்கள் சகஜமாம்.
குண்டெறிந்தவனும்
குதூகலப்பட்டான்.
குண்டெறிய வைத்தவனும்
குதூகலித்தான்.

இறுதியில்
மௌனமே
மொழியாய்
பட்டினியோடு
பட்டாம் பூச்சிகள்
மரித்துப்போயின.

2 comments:

Anonymous said...

தம்ம்பியவை குழப்பி போடாதீங்கோ, நீங்க என்ன சொல்ல வாறியள் எண்டு எங்களுக்கும் விளங்கும். சும்மா கிடக்கிற சங்கை ஊதி கெடுத்துப் போடாதீங்கோ !
சிவராசா

Unknown said...

நல்ல கவிதை ! கவிதை என்பதைவிட இது உண்மை. வாழ்த்துக்கள்.
அபி

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter