Wednesday, May 06, 2009

இன்னமும் !



இன்னமும்!......
- தமிழ்சித்தன் -

இன்னமும்.....
மணற் கிடங்குகளிலும்
சுடுமணலினுள்ளும்,
காலைக்குத்தும் கற்பார்மீதும்
என் வாழ்வு சந்தோசமாயிருக்கிறது.

வந்துவிழும் செல் துண்டுகளால்
என்னைவிட்டு என் உயிர் போகுமளவிற்கு
என்மகிழ்ச்சி என்னுள் தாண்டவமாடுகிறது.

நான்நடந்த பாதை யெங்கும்
என் இரத்தத்தைச்
சந்தோசமாகப் பீச்சியடிக்கிறேன்.
வரும் சந்ததி, என்
நிறமூர்த்த அலகுகளை
இந்த இரத்தத் திவலைகளிலிருந்து
பின்னிக்கொள்ளட்டும்.

நந்தவனமுள்ள பூஞ்சோலையில்
சுதந்திர மலர் பூத்திருக்கும் என்று
பூப்பறிக்க முற்பட்டவரின்
சதைகள் பிய்த்துப் பிய்த்து
நந்திக்கடலெங்கும் வீசிக்கிடக்கிறது.
எடுத்து மாலை தொடுங்கள்
உலகக் கனவான்களே!

மணிக்கூட்டுமுள்ளைப் போல்
இந்தப் பாளும் மணல் வெளியைச்
சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறேன் -
என்ன மாறுதலுக்கு நான் காத்திருக்கிறேன் என்றோ
நான் இல்லாவிட்டால் இங்கு
என்ன மாறுதல் நடந்து விடப்போகிறதென்றோ
இன்னமும் எதுவும் புரியவில்லை.
எலும்புக்கூடுகளால் இனி எதை எழுதுதல் முடியும்.
எல்லாம் யதார்த்தம் போல்
எங்கும் மௌனித்திருக்கிறீர்கள்.

தோலை உரிக்கிறார்கள், எலும்புகளைச் சிதைக்கிறார்கள்
மண்டை மணலாய்ச் சிதறிக்கிடக்கிறது
கால்களை இழக்கிறேன் கைகள் துண்டாகின்றன
குழந்தைகள் பெரு வெளியில்
கொன்று கொட்டப்பட்டிருக்கிறார்கள்.
இன்னமும் சாட்சியமும்
சட்லைற் படங்களையும்
ஆதாரமாய்க் கேட்கிறது ஐ நா சபை.

எல்லாக் கொடுமையையும் மீறி- இன்பம்
தேடி வருமென்கிறான்
இந்தியத் தேர்தல்ச் சகுனி.
முழுப்பூசணிக்காயைத் தூக்கிச்
சோற்றில்ப் புதைக்கிறார்கள்
புரட்சியின் தலைவர்கள்.
எல்லாவற்றையும் நம்பிவிடுவதென்றே
கங்கணம் கட்டி நிற்கிறார்கள்
நமச்சல்க்காரர்கள்.

ஊரைப்பற்றிய,உறவுகளைப்பற்றிய
கவலையை விடவும்,
ஆட்சிபிடிப்பதனைப் பற்றியதான அச்சம் - அவர்கள்
மனதைப் பற்றிக் கொள்கிறது

அப்படித்தான் அவர்கள்
பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்
அப்படித்தான் அவர்கள்உணர்வுகளில்
அவ் ஓலம் உறையிடப்பட்டிருக்கிறது.
மிருகங்களைவிடவும் கேவலமாகி
மனிதம்
இரத்தமாய்க்கரைகிறது.

அவர்கள் அவற்றிற்கிடையே
பணப்பைகளைத் தேடுகின்றார்கள்.
இன்னும் இன்னும் இரத்தத்தை ஊற்றும்
மனிதச் சதைகளில் தங்கள்
வெற்றிக்கொடியை
நட்டுவிடத் துடிக்கிறார்கள் அவர்கள்.

------------------------------



பட்டினி அவலம் வன்னி மக்கள் தவிட்டை கரைத்துக் குடிக்கும் நிலை!

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக மக்கள் பாதுகாப்பு வலயத்தில் இடமபெயர்ந்து வாழும் மக்கள் பட்டினி அவலத்தை எதிர்நோக்கியுள்ளனர் என வன்னியிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.உணவுத் தட்டுப்பாட்டு நிலையிலும் உமிக்குள் நெல் பொறுக்கி மக்கள் இன்று தவிட்டை மட்டும் கரைத்துக் குடிக்கின்ற மிக மோசமான பட்டினி அலவத்தை எதிர்நோக்கியுள்ளனர்.வன்னி மீது சிறீலங்கா சிறீலங்கா அரசு உணவையும், மருந்தையும் போர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றமை நிலைமையில் அந்த மக்கள் ஒரு வேளையேனும் கஞ்சியை உணவாக எடுத்துக்கொண்டனர். அதனையும் இன்று இழந்து தவிட்டைக் கரைத்துக் குடிக்கும் நிலை வன்னி மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

1 comment:

Anonymous said...

what you want to tell .
ida

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter