Saturday, May 30, 2009

இனியொரு யுத்தம் இனியொரு அழிவு வேண்டாம்.

நம்பியே கெட்ட சனம்
தமிழ்சித்தன்

எல்லா ஆலோசகர்களும்அளந்து தள்ளுகின்றார்கள்....
யானையும் பூனையும் ஒன்றென்று ஒப்பிக்கின்றார்கள்.

கேட்டால் பெரிதாகஒன்றுமில்லையாம்..
ஒரு எழுத்து மட்டுமே மாறிக்கிடக்கிறது
என்கின்றார்கள் வக்கணையாக.....

மரண அறிவித்தலில் மட்டுமே
நிலை கொள்கிற வானொலிகள்,
தொலைகாட்சிகள்,பத்திரிகைகள்...
ஊரே மரணமானதில் அமர்க்களமாகின.

மேலும்...மேலும்...
ஆளுக்கொரு கடைதிறந்து,
இழவு வீட்டில் வியாபாரம்
பண்ணத் துடிக்கின்றன....
வாயுள்ள பசாசுகள்.

பந்தல், சவப்பெட்டி, பாக்கு, வெற்றிலை,
சுண்ணாம்பு, மலர்மாலைக் கடைகளைப் பூட்டிவிட்டு,
பத்திரிகைக்கடை வைக்கின்றான் பக்கிரி.

இன்னமும் இவர்களையே
நம்பத்துடிக்கிறது
நம்பியே கெட்ட சனம்.

இனியொரு யுத்தம் இனியொரு அழிவு வேண்டாம் !


கூட்டமைப்பினர் இன்னும் புலத்துப்புண்ணியர்கள் அனுமதித்தால் தான் தமிழினத்தைக் காப்போம் எனக் காத்திருக்காமல் உங்கள் கடமையை ஆரம்பியுங்கள். உங்களுக்கான ஆதரவுகளைத் தரக்காத்திருக்கிறோம்.
நட்டாற்றில் நமது இனம் சாக நிம்தியாய் எங்களால் இருக்க முடியவில்லை. ஊர் உறவுகள் முழுவதும் இடைத்தங்கல் முகாம்களிலும், புனர்வாழ்வு முகாம்களிலும் புழுக்கள் போல் நசிபட புலத்திலிருந்து புதுயுகம் படைப்போமென்று பூச்சாண்டி காட்ட முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
அக்காச்சி பிள்ளைகளைப் பறி கொடுத்தாளாம், மாமாவின் மனைவி சிதறிச் செத்தாளாம், மருமகள் முடமாகிப் போனாளாம், மச்சான் எறும்பு மொய்த்து இரத்தத்தில் கிடந்தானாம் என்று உறவுகளின் துயர் எங்களை அணுவணுவாய் கொல்கிறது.
போரால் தாயகம் சிதிலமானது. இங்கோ ஊரை உறவுகளை நினைத்து நாங்கள் மனநோயாளிகளாகிறோம். எம்மக்களைக் காப்பாற்றுங்கள்.
இன்னும் மந்தைகளாய் மக்களை மேய்க்கப் புலத்தில் அதிகாரம் பண்ணும் அடங்காப் பிடாரிகளை நம்பி இனியும் எமது மக்களைப் பலிகொடுக்கமாட்டோம்
எல்லாமே எங்களை விட்டுப் போனது போன்றதொரு நிலமையில் இன்று தமிழினத்தின் தலைவிதி தெருவில் வந்து நிற்கிறது. இன்னும் கனவுகளோடு அந்த மக்களைச் சாகும்படி வீராவேசப் பேச்சுகளும் விவாதங்களினதும் தொடர்ச்சியாக ஆய்வுகளும் அறிக்கைகளும் மாறிமாறி அலசப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது.
மாவிலாற்றில் பிடித்த சனியன் முள்ளிவாய்க்கால் வரையும் துரத்திப்போய் 3 இலட்சம் வரையான பொதுமக்களை அகதிகளாக்கியும் பல்லாயிரக்கணக்கில் பலியெடுத்தும் தனது கோரத்தைத் தீர்த்து முடித்திருக்கிறது.
தன்னினம் விடுதலைபெற வேண்டுமென்ற கனவோடு போராளிகளான ஆயிரமாயிரம் போராளிகளைக் களப்பலியெடுத்தும் கடைசியில் சரணடைய வைத்தும் உலக வல்லரசுகள் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டன.
வவுனியாவுக்குள்ளும் யாழ்ப்பாணத்துக்குள்ளும் ஏன் இலங்கையின் பல பகுதிகளுக்குள்ளும் அமைக்கப்பட்டுள்ள சிறைகளில் சித்திரவதைக் கூடங்களில் தமிழினம் இனியொரு ஐம்பது ஆண்டுகள் நிமிரமுடியாதபடி நிலமை வந்து நிற்கிறது.
தாய் வேறு, குழந்தைகள் வேறு, தந்தை வேறு என்ற வகை பிரித்தலில் அனாதைகளாய் போன அத்தனையாயிரம் அப்பாவிகளையும் அடைத்த முகாம்களில் எங்கே முழுமையான நிம்மதியை அவர்கள் தேடுவார்கள்.
இப்போது எம்மிடம் மிஞ்சியிருப்பது துயரமும் கண்ணீரும், இயலாமையும், இனி எஞ்சியோரது வாழ்வுக்கான வழியொன்று திறபட வேண்டும் என்பதேயாகும்.இனியென்ன செய்வது? மக்களின் பணியாளர்களைத் தேடித் தேடி எனது மக்களைக் காக்க என்ன செய்யப் போகிறீர்கள்? என அவலப்படும் மக்களுக்கான ஆதரவுகளைத் தேடுகிறோம். மக்கள் பிரதிநிதிகள், அக்கறையாளர்கள் அனைவரும் ஏதாவது செய்ய வேண்டுமென்றே முனைப்போடு உள்ளதாகச் சொல்கிறார்கள்.
ஆனால் அந்த முனைப்பை முளையில் கிள்ளிவிட இன்னும் பல மூதேவித்தலைகளும் மூத்ததுகளும் தடைக்கற்களாகவே இடையில் வந்து செருகுப்படுவதால் ஆர்வலர்கள் பின்வாங்குகிறார்கள். இன்னும் மந்தைகளாய் மக்களை மேய்க்கப் புலத்தில் அதிகாரம் பண்ணும் அடங்காப் பிடாரிகளை நம்பி இனியும் எமது மக்களைப் பலிகொடுக்கமாட்டோம் எங்கள் தோழர்கள் வஞ்சனையால் வன்கொலை புரியப்பட்டார்கள். மலைகளாய் நாம் நம்பிய இமயங்களையெல்லாம் இறுதிக்கணம் வரை உயிருக்காய் இறைஞ்ச வைத்து அழித்து விட்டார்கள். எல்லோரும் சொல்வதுபோல் நாங்கள் தோற்றுப்போனோம்.
யுகங்களுக்கும் மாறாத வடுவாய் எங்கள் மனங்கள் ரணமாய்ப் போயுள்ளது. அடுத்த தேர்தல் நெருங்குகிறது. தமிழ்க்கூட்டமைப்பு தனது முழுமையான பலத்தையும் கையில் எடுக்க வேண்டிய தருணமிது. தமிழின விதி உங்கள் கையில் தான் தொங்குகிறது.
உங்களுக்குள் உள்ள முரண்கள் மனத்தாங்கல்களை மறந்து உங்கள் போன்று தமிழினத்தைத் தாங்கும் தூண்களையெல்லாம் உங்களோடு உள்வாங்குங்கள்.
by Shanthi Vavuniyan



5 comments:

Anonymous said...

பட்டும் சுணையில்லா மனிதர்களா??
இன்னாமும் கூட்டணியையா நம்பப் போகீறீர்கள்.
ஜெயராஜ்

Anonymous said...

அடே எரியிற வீட்டில புடுங்குவமடா
நாங்க கேக்கிறதாரு பொத்திக்கிட்டுச் சும்மாகிட.
புறம்போக்கு

Anonymous said...

TNA nothing to do man. do you belive them?
suba

Anonymous said...

புலம்பெயர் நிலத்துக்காரர் எல்லாரும் கூடாதவங்க என்று எண்ண வேண்டாம் சகோதரரே. எந்தப் பெயரும் புகழும் தேடாதவர்களாய் சொந்த மக்களின் சுதந்திரம் வேண்டி இரவு பகல் பாராது அவர்களிற் பலர் தெருவில் நின்று போராடுகிறார்கள். ஆனால் அவர்களின் தியாகத்தையும் சில புலம் பெயர் பசாசுகள் தங்களிற்காக்கித் தட்டிக்கொண்டுதான் போகின்றன.என்ன செய்யலாம் தமிழர் விதியென்று ஒதுங்குவதைத்தவிர.
ராஜினி

Anonymous said...

சம்பந்தன் அண்ணா இப்போதான் கருணாநிதியோட பேசி மறுபடி செத்த ஆட்களை மீட்டுக்கொண்டு வருவார்.
பிறகு விண்ணன் ஒருவன் வந்து மாறிமாறிச் சுடுவான்.சம்பந்தனையும் சேர்த்துச் சுடுவான். சுடுறவனின்ர அண்ணன் தம்பி இங்கையிருந்து பணம் சேர்ப்பாங்க.பிறகென்ன தியாகிகள் மேடையேறிப் பேசுவாங்க,றேடியோ டிவி எல்லாம் தூள் கிளப்பும். கொடிபிடிப்பாங்க,கூட இருக்கிறவனின்ர கோவணத்துண்டையும் கழட்டி எடுத்துக் கொண்டு தங்கள் குடும்பங்களை வெளிநாட்டுக்குச் சுளுவாய்க் கொண்டுவந்து சேர்த்துப்போட்டுப் போராட்டம் ஆரம்பிப்பாங்க, இருக்கிற கொஞ்சநஞ்சமும் மறுபடிசாகும்.
ஐயோ இது தானே நடக்குது. இனியும் நடக்கும்.
துரை

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter