Thursday, June 04, 2009

தமிழர் நிலை கண்டு பதைபதைத்தேன்: இலங்கை தலைமை நீதிபதி

தமிழர் நிலை கண்டு பதைபதைத்தேன்: இலங்கை தலைமை நீதிபதி



வன்னியில் அரசு முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் வார்த்தைகளில் விவரிக்க முடியாத மிகக்கொடுமையான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களை நேரில் பார்த்து நெஞ்சம் பதைபதைத்தேன் என்று இலங்கையின் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். இலங்கையின் சட்டத்தின் மூலம் அவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இலங்கை நாட்டின் தலைமை நீதிபதி சரத் என்.சில்வா, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நீகோம்பு மாவட்டத்தில் மரவிலா என்ற இடத்தில் ஒரு நீதிமன்ற வளாகத்தை திறந்து வைத்து விட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.



அப்போது அவர், வன்னிப்பகுதியில் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்கள் இலங்கை நாட்டின் சட்டப்படி நீதியை பெற முடியாது. போரால் இடம் பெயர்ந்த தமிழர்களின் நலனில் இந்த நாட்டு சட்டம் எந்த அக்கறையும் செலுத்தாது. இதனை நான் பகிரங்கமாகவே கூறுகிறேன். இவ்வாறு நான் சொல்வதற்காக என்னை அதிகாரிகள் தண்டிக்கக் கூடும்.


நான் வன்னிப்பகுதி தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள "நிவாரண கிராமங்களுக்கு' சென்று பார்த்தேன். அவர்கள் படும் துன்ப துயரங்களையும், வேதனைகளையும் என்னால் வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. ஒரே ஒரு இனம் தான் நாட்டில் உள்ளது: பெரும்பான்மை என்றோ, சிறுபான்மை என்றோ எதுவும் கிடையாது என்றெல்லாம் நாம் கூறுவது பச்சை பொய்யாகும்.


போரால் இடம் பெயர்ந்த தமிழ் குடும்பங்கள் வசிக்கும் செட்டிக்குளம் முகாம்களுக்கு சென்று நான் பார்த்தேன். அவர்கள் சந்தித்து வரும் மிகப்பரிதாபமான நிலையை என்னால் வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு நான் எந்த ஆறுதலையும் கூற முடியவில்லை. மிகக்கடுமையான துன்பங்களுக்கும், வேதனைகளுக்கும் இடையே அவர்கள் உயிர் வாழ்த்து வருகிறார்கள்.


மிக பிரம்மாண்டமான கட்டிடங்களை ஒருபுறம் நாம் கட்டி வருகிறோம். ஆனால் போரால் இடம் பெயர்ந்த இந்த தமிழர்கள் மிகச்சிறிய கூடாரங்களில் வசித்து வருகிறார்கள். ஒரே கூடாரத்தில் 10 பேர் வாழ்கிறார்கள். அந்த கூடாரத்தில் அவர்கள் நேராக நிற்கத்தான் முடியும். கூடாரத்திற்கு வெளியே செல்ல முயன்றால் அவர்கள் கழுத்தே உடைந்து விடும் என்று நிவாரண முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.


இயற்கை உபாதைகளுக்கு செல்வதற்கு கூட 50 பேர், 60 பேர் என்று நீண்ட வரிசையில் நின்று அவர்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது. செட்டிக்குளம் முகாமில் தங்கி உள்ள வன்னித் தமிழர்களின் வாழ்க்கை நிலைதான் இது.


அவர்களுக்கு போதுமான அளவிற்கு நாம் நிவாரணம் வழங்க வேண்டும் அப்படி செய்யத் தவறினால் அதற்கான பழியை நாம் தான் ஏற்க வேண்டும். இந்த நாட்டின் சட்டத்தின் மூலம் அவர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. அவர்களுடைய துயர நிலைகள், நீதிமன்றத்திற்கு முன் கொண்டுவரப்படவில்லை. இதனை நான் பகிரங்கமாகவே கூறுகிறேன். இதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்றும் சரத் என்.சில்வா குறிப்பிட்டுள்ளார்.


இம்மாத இறுதியில் இவர் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். அந்த நாட்டின் தலைமை நீதிபதியே போரால் இடம் பெயர்ந்த வன்னித் தமிழர்களின் துயர நிலையை பகிரங்கமாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Anonymous said...

ஒரு மனிதனாக, மனிதத் தன்மையுடன் அவர் நெஞ்சம் கலங்குகிறார்.
இதற்கு அடிப்படைக் காரண்மான இந்தியா,அந்த அரசின் பசப்பு வார்த்தைகளில் ஏமாந்த தமிழர்கள், ஏமாறாமல் இருந்தாலும் ஒன்றும் செய்ய இயலாதக் கையாலாகதவர்கள் இவர்கள் எல்லாம் மறைக்கவும்,ஒதுக்கவும் பார்க்கிறார்கள்.
அவர்களின் மிகப் பெரிய எதிரி அவர்களது மன சாட்சித் தான்.
அது நன்கு காயட்டும். என்பிலதனை வெயில் போலக் காயட்டும்.
அதுவே அவர்களுக்குக் கிடைத்த தண்டனை.
ரோமாபுரிக்குச் சென்றாலும்,தங்கக் கோவிலுக்குச் சென்றாலும்,
அத்துனை கோவில்களுக்குச் சென்றாலும் அவர்கள் மன சாட்சி
காய்ந்து கொண்டே தான் இருக்கும்.

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter