Thursday, June 25, 2009

துருவக் கோடியில் தொலைத்த வாழ்வு !

துருவக் கோடியில் தொலைத்த வாழ்வு !

தாலிப் பொன்னைத்
தகடாக்கிப் போட்ட
மாலைப் பொழுது !

கீழ்த் திசையிலிருந்து...
மேற்திசையாக, விண்ணில்
விரையும் விமானம் !

காதைக், கழுத்தை, மூக்கைத் துளைத்த
நகைகளை விற்றும்...
வீட்டை, நிலத்தை, மாட்டை
விற்ற காசைக் கட்டியும்...
விமானச் சீற்றில் - ஓர்
மணிமுடி தரித்த மன்னரின் உணர்வுடன்
உட்கார்ந்தாயிற்று !

வானம் துளைத்தும்...
கருமேகம் கலைத்தும்.....
மேலும் மேலுமாய்,
வேகமெடுக்கும் விமானம் !

மனமோ அதைவிட வேகமாய்..
பொன்னில் குளித்தும்,
பூவில் நடந்தும்...
மின்னும் வைரம்
பதித்த புவியின்,
விசேட ராஜனாய் – உன்னை
உனக்குப்
பிரகடனப் படுத்தும் !

பணிப்பெண் ஊற்றிய
" வாட்கா" மதுவில்
நினைவிழந்தாடும்
மனதினில்
திரண்ட சொத்தும்,

பூத்துக்குலுங்கும் கற்பகதருவுமாய்..
தலை மேலும் மேலுமாய்க்.....
கிறங்கும்.

இன்னமும்...
பாட்டும் படமுமாய்,
விமானப் பறவை
சிணுங்கிச் சிணுங்கிப்
பனிக்குவியலுள்....
--உன்னை--
உடுப்புப் பையுடன் இறக்கியாயிற்று

இனி
மெல்லிய ஒளியினுள்
பனித்திரள் குவியும் !
காற்றுச் சனியன்,
பனிப்புயலடிக்கும் !

நிதம் நெஞ்சுக் கூட்டின்......
எலும்புகள் கடித்துப்,
பனிமுதலை பாடாய்ப் படுத்தும்.

மணிமுடிதரிக்கும் -
மன்னரின் கனவுகள்
குளிரினுள் வெதும்பி
ஓடாது தரித்த
"றைன்" நதி போல
உறையும்.

பனிக்குளிரினுள் பாத்திரம்
தேய்க்கவும்.....
பிக்ஸா ( pizza ) தட்டினை
வரிசைப் படுத்தவும்.....
காலை மாலையாய் நித்திரையற்ற
அடமானப் பத்திர யந்திரமாகவும்....
மணிமுடி தரிக்கும்
மன்னரின் பொழுதுகள் !!

குளிர் ஆறு மாதம்....
மழை ஆறுமாதமாய்...
துருவச் சுண்டெலி - உன்
சுகங்களைப் பிடுங்க - நீ
பட்ட கடன்களின்...
வட்டிமாலைகள்
கழுத்தை வளைத்துப்
பாரம்சேர்க்க.....

தென்னையும் பனையுமாய்...............
தேடிய வாழ்வைத்,
துருவக் கோடியில்
தொலைத்தாயிற்று !!

குளிர்காலப் பின்னிரவு
ரியர் - 1985

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter