Friday, June 26, 2009

சிலந்தி.......

சிலந்தி.......


முகட்டு வளையில் தொங்கிய
சிலந்தியைப்போலத்தான்
ஒரு வட்டத்திற்குள்
இருந்தது வாழ்வு.

வாழ்ந்து முடிக்க வேண்டிய
வாழ்விற்க்குள் மட்டுமே
வலைபின்னத்தெரிந்திருந்தது
அந்தச் சிலந்தி

அதன்
மெல்லிய வலைக்குள்
பாறாங்கற்களைச் சுமந்து வந்து
போட்டு விட்டுப் போனது
பாதுகாப்பு.

பாதுகாப்பென்று
ஏற்றப்பட்ட பாரத்தை
தாங்கமுடியாது துடித்தது சிலந்தி.

பாரத்தை ஏற்றியவர்கள்
பாறையையே எல்லை என்றார்கள்.
பாறையே கடவுள் என்றார்கள்.
சுற்றிவலை பின்னச்சொன்னார்கள்.

பாதுகாப்புப் பாறைக்கா?
அல்லது சிலந்திக்கா?

பாதுகாப்புப் பாறையைப்
"பாரம்" என்று சொன்ன சிலந்திகள்
பாதியிலேயே கொல்லப்பட்டன.

ஏற்கமுடியாதெனச் சொல்லிய
சிலந்திகள் அழிக்கப்பட்டன.

பணமிருந்த சிலந்திகள்
குடும்பங்களோடு வெளியூர் போயின.

பாவப்பட்ட சிலந்திகள்
வேறுவழியில்லாமல்
வலைபின்னின.

உணர்ச்சி வேகமிட
தீர்மானமில்லாத
எல்லைகளுக்குள்ளாய்ப்
பாய்ந்து....பாய்ந்து
பாறையைச்சுற்றிப்
பலமாக வலைபின்னின

பிந்திப் பிறந்த சிலந்திகள்.

சிலந்தியின் வலைக்குள்ளாய்
சூட்சுமமாய் உட்கார்ந்து
பஞ்சாயத்து நடத்தியது

பாதுகாப்புப்பாறை.

முடிவாக.........
எவனால், எதற்காக, ஏன்
இந்த பாதுகாப்புப்பாறை எனச்

சிலந்திகளுக்குப்
புரிந்து கொள்ளவே முடியவில்லை.
----------------------------



2 comments:

பாரதி said...

இது புலியைப்பற்றியதா? அல்லது அரசைப்பற்றியதா? இது ஒரு அம்சமான கவிதை போலக்கிடக்கு.நன்றி தொடருங்கள்.
பாரதி

டொல்பின் said...

சிலந்திகள் யாவும் அழிக்கப்பட்ட பின்
யாருக்கு இனிப் புரிதல் வேண்டிக் கிடக்கிறது.
ஜெயம்

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter