Sunday, June 28, 2009

மூத்த கவிஞர் முருகையன் காலமானார்.!

மூத்த கவிஞர் முருகையன் காலமானார்.

பிரபல கவிஞரும், கல்வியாளரும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை முன்னாள் விரிவுரையாளருமான கலாநிதி இரா. முருகையன் அவர்கள் நேற்றுக் கொழும்பில் காலமானார் என்றதுயர செய்தியை எம்மால் நம்ப முடியவில்லை.
சிறந்த கவிஞர், படைப்பாளி, விமர்சகர்,கல்வியியலாளர் எனப் பலதளங்களில் காலடி பதித்திருந்த தமிழ்ப் படைப்பாளி இவர். தாயகத்தின் மீதும், தமிழர் கலைகள் மீதும் தணியாத பற்றும்,தாகமும் கொண்டவர் இரா. முருகையன். இவருடைய கவிதைகள் தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதம்.இலக்கிய உலகில் தன்னரும் கவிகளால் மனித நேயத்தையும்,சமூக மேம்பாட்டையும் வளர்த்தெடுத்த ஆளுமைக்கவிஞர், அரும்பெரும் கவிஞர் முருகையன் அவர்களது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.அவரது கவிதைகள் போன்று மொழி, சமுகம், அரசியல் ஆகிய துறைகளில் அவரது கட்டுரைகளும் மிகுந்த தெளிவும் ஆழமும் சமூகப் பயனும் பெறுமதியும் வாய்ந்தவை. அன்னாரின் இழப்பை மனம் ஏற்க மறுக்கிறது.எனினும் அன்னாரின் தடம் பற்றி அவர் வழியில் மனுக்குல விடியலுக்காய் குரல் கொடுப்போம்.
"கவிஞர் சித்திவினாயகம்"

அவரின் கவிதையொன்று மரணத்துள் வாழ்வோம் தொகுப்பிலிருந்து...
முருகையன்
வாயடைத்துப் போனோம்
'என் நண்பா, மெளனம் எதற்கு?'
என்று கேட்டிருந்தாய்.
வாயடைத்துப் போனோம்; வராதாம் ஒரு சொல்லும்.
'திக்' கென்ற மோதல் -
திடுக்கிட்டுப் போனோமே!

பொய் வதந்திக் கொள்ளி பொசுக்கென்று போய்ப்பற்ற
ஏற்ற வகையில்
இதமான நச்செண்ணெய்
ஊற்றி
அதில் ஊற வைத்த உள்ளங்கள் இல்லாமல்
இத்தனை தீய எரிவு நடைபெறுமா?

எத்தனை தீய எரிவு -தலையுடைப்பு,
குத்துவெட்டு, பாயும் குருதிக் குளிப்பாட்டு?

சற்று முன்னர் மட்டும் சகஐமாய்ச் சாதுவாய்ப்
பேசி இருந்த பிராணி
சடக்கென்று
வாரை இடுப்பாற் கழற்றி,
மனங்கூசாமல்
ஓங்கி விளாச ஒருப்பட்ட சிந்தையதாய்
மாறிவிட்ட விந்தை மருமம் என்ன?
சுர்ரென்று
சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?
கொள்ளை, திருட்டு, கொலைகள், கடையுடைப்பு,
பிள்ளை அரிவு, பிடுங்கல், வதை
புரிந்து
சீறி எதிர்த்த செயலின் கருத்தென்ன?

ஒன்றும் எமக்குச் சரியாய் விளங்கவில்லை.
'திக்'கென்ற மோதல் - திக்கிட்டுப் போனோம் நாம்.
வாயடைத்துப் போனோம்;
வராதாம் ஒரு சொல்லும்.
(1978 / மல்லிகை)

கலாநிதி இராமுப்பிள்ளை முருகையன் (பதிப்பாசிரியர் , ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர், ஓய்வு பெற்ற சிரேஷ்ட உதவிப்பதிவாளர்)கல்வயல், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் நீர்வேலியை வசிப் பிடமாகவும் கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கவி ஞர் இ.முருகையன் நேற்று (27.06.2009) கொழும்பில் காலமானார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (28.06.2009) ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்று பூதவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.தகவல்:மு.நாவலன் (மகன்).
426/38, - 5/3 ஓ.சிறில். இ.பொரேராமாவத்தை, கொழும்பு 13. 0112 384878

3 comments:

ஜெயசீலன் said...

அற்புதமான கவிஞன். யான் அவரை யாழில் பலதடவைகள் சந்தித்ததுமுண்டு.
நண்பர்கள் என்று இருந்த பலரும் அவருக்கு கொடுத்த சிரமங்களைக்கூட நான் அறிவேன். எல்லாவற்றையும் பொறுமையாகத் தாங்கிக் கொள்கிற பூமி.மரணம் அந்த மாமனிதருக்கில்லை.
ஜெயசீலன்

டொல்பின் said...

பல காலம் கடந்தும் இன்று நடந்ததுபோல ஞாபகமூட்டும் நல்ல கவிதையிது. ஆத்மா சாந்திபெறுக.
துரை

டொல்பின் said...
This comment has been removed by a blog administrator.

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter