Wednesday, June 24, 2009

அகதி!

1986ல் ஜேர்மானிய நகரமொன்றில் வெளியாகிய "தீ " என்னும் கவிதை தொகுப்பிலிருந்து சில கவிதைகளை அகதிகளின் நாட்குறிப்பு வரும் நாட்களில் சுமந்து வரும். தசாப்தங்களைத் தாண்டியும் அகதிகளின் நிலை அப்படியே இன்றும் இருப்பதற்கு இக் கவிதை ஒரு சாட்சி.

அகதி !


கண்களில் ஏக்கம்!
கால்களில் தயக்கம் !!
நெஞ்சினில் தவிப்பு !!
கைகளில் வெறுமை !
என்ன திகைக்கின்றாய்?
இவன் பெயர் மனிதன் தான்.


ஏகாதிபத்தியக் கால்களினுள்ளே
சிறுத்துப் போனவை
இவனது கால்கள் !
முதலாளித்துவ முகங்களினுள்ளே
அழுது வீங்கிய
முகம் இவனது !
இறைச்சிக் கலோரிகள்
அவியும் தெருக்களில்
அரிசி அவியும்
பாத்திரம் இவனது !


மாதம் ஓர்முறை
வெல்வெயர் (welfare) எறியும்
எச்சில் சில்லறை...
அரைவயிற்றோடு - இவ்
அடிமையின் முறுவல்!
அழுக்குத் துணியோடு - ஓர்
அதிசய ஊர்வலம் !


இப்போது
சொல்லுங்கள்
இந்த மனிதனின் இரத்த அணுக்களை
எந்தக்கடையினில் விற்றுத் தருவீ ர் ?


வானமுயர்ந்த கட்டிடச் செறிவு !
வீதி நிறைந்த வாகன நெரிசல் !!
நாடே உருளும்
பணத்தின் சுவடுகள் !!
ஓ ! இந்த மனிதனின்
கண்களை வாங்கி - எந்த மனிதன்
காசு கொடுப்பீர் ?


வேலைக் கந்தோர்
இவனை விரட்டும் !
பாடசாலைக் கதவுகள் மூடும் !!
வீதியில் கூட்டும்
கூலியில்க் கூடத்
தோல்களில் பேதம் !!
நிறங்கள் புரியா - எந்த மனிதா
இவனின் தோலை உரித்துக் கொடுப்பாய் ??


குளிர்காலப் பின்னிரவு
(ஜெர்மனி-ரியர் 1985)

2 comments:

பாரதி said...

நல்ல கவிதை, அனுபவித்து எழுதியுள்ள கவிதை.
தொடருங்கள்
பாரதி

டொல்பின் said...

அகதிகளின் வாழ்வியலானது ஈழத்தமிழரின் வாழ்வியலாகிவிட்டது.வெளிச்சத்திற்கு கொண்டுவரும் அகதிகளின் நாட்குறிப்பிற்கு நன்றி.

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter