Thursday, July 16, 2009

குட்டக் குட்டக் குனியாதே !!

குட்டக் குட்டக் குனியாதே !!

ஊரும் உறவும் பேரும் - துறந்து
உலகமெங்கும் ஓடுகிறாய் - நீ
நாலும் தெரிந்த மனிதன் எனவே
நம்ப மறுத்து வாடுகிறாய்.

இருட்டுவழியினில் குருடன் காட்டிய திசையின்
பாதையில் ஓடுகிறாய் - அவன்
குருட்டுக்கண்ணால் இருட்டைத் துளைத்து
ஒளியைக்கொடுப்பான் என்கின்றாய்

ஏய்த்துப்பிழைக்கும் கூட்டத்தோடு
எட்டி நடந்தே போகின்றாய் - நீ
தட்டிக் கேட்கும் திராணி இழந்து
தலையைக் குனிந்தே நடக்கின்றாய் !

குட்டக் குட்டக் குனிகின்றாய் - நீ
கூனிக்குறுகி நடக்கின்றாய்.
தப்புச் செய்யும் தரகர் கூட்ட
கைப்பொம்மையாய் ஆடுகிறாய் !

நாளும் பொழுதும் உனை ஏய்த்து....
நட்ட மரமாய் உனை ஆக்கி....
கோவில் குளங்களைக் கட்டுகின்றார் - சிலர்
கொடிபிடியென்று அதட்டுகின்றார்.
செத்துக்கிடப்பவன் மாலைக்காய் -சிலர்
சிரித்துக் கொண்டே நடக்கின்றார்.

விருதுக்காக மானிடரைச் சிலர்
வேட்டையாடித் திரிகின்றார்.
ஆங்கிலத்தாய்க்குப் பிறந்தவர் போல்
அன்னிய மொழியில் பேசுகின்றார்
எம்மரும் தமிழின் கருவறையில் - எரி
தீயை மூட்டி மகிழ்கின்றார் !
சொகுசுக்கார்களில் ஓடுகின்றான் - உன்
சொந்த சுகங்களைச் சுரண்டிவிட்டு - அவன்
கைப்பை காவி வாழ்வதுதான் - உன்
கௌரவம் என்றா எண்ணுகின்றாய் ?

முட்டும் மலைகள் தகர்த்து - எங்கும்
முன்னேறி நடந்த மானிடனே - இங்கு
கத்தும் கயவர் வலையினிலே
காரணமின்றி வீழ்ந்தது ஏன்??
*********************

1 comment:

susan said...

that"s great poem.
thanks
susan

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter