Friday, January 29, 2010

சிறுகதை:மெத்தை...சிறுகதை:
மெத்தை...
மா.சித்திவினாயகம்

இன்று நத்தார்.உலகைமீட்கும் இரட்சகர் புவிப்பிறந்த நாள். இந்த மகத்தான நாளை மார்கழி மாதம் முழுவதுமே நினைவுகூருமாப்போல முன்கூட்டியே வண்ண விளக்கு அலங்காரங்களும்,பைன் மரங்களில் தோரண மாலைகளும் குடும்பங்கள் யாவும் ஒன்று கூடி கலகலப்பும், கும்மாளமுமாய் ஊரே அமர்க்களப்பட்டது. இந்த நாட்களில்த் தான் வடதுருவக் கோடியில் இருந்து கலைமான் பூட்டிய சறுக்குவண்டியில் வெண்பனித்தாடியுடன் "சாந்தா கிள்வ்ஸ்" எனப்படும் நத்தார்ப்பாப்பா எங்களுக்கு வேண்டும் பரிசு கொணர்ந்து வீட்டின் புகைபோக்கியினூடாகப் போடுகிற நாள் என்று பேசிக்கொள்வார்கள். ஆனால் இது வரையில் நானோ, ஆடம்பரமான மோல்களில் பிள்ளைகளை மடிமீது இருத்தி போட்டோ எடுத்த பின் அதனை விற்பனை செய்கிற வியாபார நத்தார்ப் பாப்பாக்களைத்தான் கண்டிருக்கின்றேன்.

வெளியே இவ்வளவு அல்லோலகல்லோலங்கள் நடைபெறுகிற நத்தார்த் திருநாளில் நான் இப்போது தானெழுந்து உட்காருகின்றேன். வழமை போலவே இந்தக் கட்டில்,நான்கு சுவர்கள், டிக்..டிக்..கென்று நேரத்தை நிமிடமாய், மணியாய்,நாளாய்த் தொலைத்துக் கொண்டிருக்கிற பாழாய்ப்போன பழைய கடிகாரம்,பியர்ப்போத்தல்கள்,சாப்பிட்டுவிட்டுக் கழுவாதிருக்கிற கோப்பைகள், இவற்றைத்தான் இன்றைக்கும் பார்க்கின்றேன். இவற்றை எத்தனை நாழி பார்த்து தொலைப்பது? எழுந்து ஜன்னல்க் கரையோரம் செல்கின்றேன். வெளியே பைன் மரங்களிலும், நிலத்திலுமாய் விழுந்து படியும் பனித்திரள்கள். அங்குமிங்குமாய் ஓடுகிற கார்கள், விசுக்..விசுக்..கென்று நடைபோடும் மனிதர்கள் எல்லாமே உற்சாகமாய்த்தானிருக்கிறது. ஆனால் நான்????
யன்னல் கதவினால் நான் வெளியே பார்ப்பதை எவரும் சட்டை செய்யவில்லை. அதைப்போலவே நான் இன்றைக்கில்லாவிட்டாலும் என்றைக்காவது இந்த அறைக்குள் செத்து விழுந்து கிடந்தாலும் எவனும் சட்டை செய்யப் போவதில்லை. என்பதை நான் நன்கு அறிவேன். கதிரையில் உட்கார்ந்த போது அகப்பட்டிறந்த ஓர் "கொக்குறோச்" பூச்சிபோல அல்லது மழை பெய்யப் புறப்பட்டுக் காலடியினுள் நசிபட்டுச் செத்த மண்புழுப்போல யாருமே கணக்கிலெடுக்காத ஓர் மனிதப்படைப்பு. சீ.. என்ன.. வாழ்க்கை!!!

மாதத் தொடக்கத்தில் சமூக நலப்பிரிவிடம் இருந்து தபாலில் வந்து விழும் 400 டொலர்களையும் வீட்டடியில் உள்ள வங்கியில் மாற்றி பக்கத்து 'எடிக்கா"மோலில் (Edika mall) சாமான் சக்கட்டுகளை வாங்கி, கைவலிக்க வீட்டுக்குக் கொணர்ந்து சேர்த்துவிட்டால் இனி அடுத்த கிழமையோ, அல்லது அடுத்த மாதமோ தான் கீழிறங்க வேண்டிவரும். இதில் பியர்க்கேஸ் முடிந்தால் அதற்கு விதிவிலக்கு. எப்போ அது முடிகிறதோ அப்போது மதுக்கடை நோக்கி என் பயணம். வேலைதாருங்கள்...வேலைதாருங்கள்... என்று எத்தனை இடங்களில் நடையாய் நடந்து பார்த்தேன். காலில் கொஞ்சாத குறையாய் கெஞ்சினேன். எவரும் செவிசாய்க்கவிலை. எனது நிறவித்தியாசமா?? அல்லது மொழி வித்தியாசமா?? எதுவும் எனக்குப் புரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிநாட்டவர்கள் அடிக்கப்படுவதும், நீச்சல் குளங்களில் செத்துக்கிடப்பதும், அயலில் உள்ள வெள்ளையர்களின் விபரீதமான பார்வைகளும், பத்திரிகைச் செய்திகளும் எங்களுக்குச் சாதகமில்லை என்பதை நான் ஓரளவு புரிந்து கொண்டாலும் எங்களின் சிற்றியில் எதுவும் நடவாது என்று திடமாக நான் நம்பிக்கைகொண்டிருந்தேன்.


சமர்காலங்களில் குளத்துக் கரையின் புற்களை வெட்டி,குப்பைகள் பொறுக்கிச் சுத்தமாக்க சமூக நலத்திணைக்களம் ஆணை பிறப்பிக்கும். மணித்தியாலம் 2 டொலர்கள். கொட்டிக் கிடக்கும் குப்பைகள் தேடித் துப்பரவாக்கும் தடிதண்டுகளுடன் போர்த்து இழுத்துக் கட்டி கொண்டு நான் போகிற போது, குளத்துக்கரைகளில் திறந்த மேனியாய் நீட்டி நிமிர்ந்து எந்தக் கவலையும் அற்றுக்கிடக்கும் வெள்ளைச்சடலங்கள்.
பார்க்கப் பிடிக்காதவனைபோல் பாசாங்கு செய்து செய்து கொண்டே ஒற்றைக்கண்ணால் பார்த்து உளம் குளிப்பேன். இந்தக்கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்க ஓராயிரம் கண்களும் போதாது என்று மனம் துள்ளலடிக்கும். இலவசமாய் இக்காட்சியை காணவைத்த சமூக நலத் திணைக்களத்திற்கு நன்றியப்பனே.
சமர் வேலைமுடிந்து விட்டது. இனி வின்ரர்..... வின்ரருக்குப் பூ விற்கலாமாம். இப்படி எண்ணித்தான் பூவிற்கப்போன என் நண்பன் சண்முகலிங்கம் எனப்படும் சண்ணைப் பார்த்துக் குடிவெறியில் இருந்த ஒருவெள்ளையன் கூப்பிட்டிருக்கின்றான்.கூப்பிட்ட வெள்ளையனுடன் இரு யூகோசிலாவிய அழகிகள் கொஞ்சிகொண்டிருந்தனர். பூ வாங்குவான் என்ற நம்பிக்கையோடு அவனை நோக்கிப் போன சண்ணைப் பார்த்துக் கறுத்த றோசாப்பூ வேண்டுமென்றிருக்கின்றான் நக்கலாக. சண்ணிற்குப் பற்றிக் கொண்டு வந்தது. சும்மா சொல்லக் கூடாது.
சண் என்னைப்போல வாயில்லாப் பிராணியில்லை. நன்றாகக் கதைக்கக் கூடிய மனிசன்.வெள்ளை ரோசா இரண்டை நீ வைச்சிருக்கிறாய். இவைக்கு கறுப்பு றோசா ஒத்து வராது. வேண்டுமென்றால் குண்டூசி தாறன் குத்தி அவையளைச் சிவப்பு றோசாவாக்கு என்றிருக்குது மனிசன்.. இவ்வளவுதான் வெள்ளையனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை.கோபமாக வெளிநாட்டுப் பாக்கிக்கு இந்தளவு தடிப்போ...உன்ர பூக்களைக்கொண்டுபோய் உன்ர ஆசிற்குள் வையடா..என்று பூவைப் பறித்தெறிந்திருக்கின்றான்.அதோட அந்தாள் சீவியத்தில இந்தப் பரிசுகெட்ட தொழிலுக்குப் போகமாட்டன் எண்டு அந்த வேலையையும் விட்டுப் போட்டுது.. ஆனானப்பட்ட வாயாடியான சண்ணிற்கே இந்தக் கதியென்றால் எனக்கு......
மணித்தியாலத்திற்கு ஒரு பஸ் தான் இந்தப் பாதையில பயணிக்கும். காருள்ளவன் காரில் போவான்.ஆனால் நான் காத்திருப்புத்தான்.எதற்கும் எல்லாவற்றிற்கும் காத்திருப்புத்தான். வீட்டைதாண்டி பென்ஸ் காரில் வீறிட்டபடி போவது அப்பாஸ் போலிருக்கிறது.யன்னலால் உற்று நோக்குகின்றேன் அவன் தான். இவன் அப்பாஸ் லெபனானில இருந்து அகதியாய் வந்து தன்ர மகளை நேர்சுக்குப்படிக்க வைக்க, அவள் யாரோ ஒரு டொக்டரைக்
காதலிச்சு திருமணமும் முடிஞ்சு போச்சு.அப்பாஸும்,நானும் முந்தி ஒரு காலம் ஒரே வீட்டில் குடியிருந்தனாங்கள்.அதேபோல அவனும் நானும் குளத்தங்கரையில ஒன்றாய்ப் புல்வெட்டி, அதைக் கூட்டியள்ளிக், குப்பை பொறுக்கி ஒருகாலம் அன்னியோன்யமாக வாழ்ந்தோம். அப்பாஸ் தன் குலக் கருமாந்திரங்களை ஒரு காலத்திலயும் கைவிடமாட்டேன் எண்டு, என்னோடு சோசல் வேலை செய்கிற போது சொல்லிக்கொண்டேயிருப்பான்.அவனது குடும்பம் மொட்டாக்கோடு திரிந்த குடும்பம். முழுக்க நனைந்தவனுக்கு மொட்டாக்கு எதற்கு? என்று இப்போ அவர்கள் எவரும் மொட்டாக்கு அணிவதில்லை.காலம் அவன் கொள்கைகளையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டது. இப்போ என்னையும் , மற்றும் எல்லாவற்றையும் மறந்தது போலப் போகின்றான்அவன்.. இப்படித்தான் இங்கு கனபேர்...கையில் கொஞ்சம் பிடிபட்டவுடன் வந்த பாதையைமறந்து தலைகீழாய் மாறி..என்ன மாதிரிக் குதியாட்டம் போடுகினம். இந்தச் சந்தர்ப்பத்தில் "பெஞ்சமின் விட்கோட்" அவர்களின் பழமொழி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. "ஏறிச் சென்ற ஏணியை எட்டி உதைத்து விடாதே. என்றாவது ஒரு நாள் நீ கீழே இறங்க நேரிடும்" இதை இவர்களில் எத்தனை பேர் உணர்ந்து நடக்கிறார்கள்.அப்பாஸ்..இப்போ புது அப்பாஸ்.இந்த நாட்டுக்குடிமகன். நான்.. நான் பழைய குறுடிதான். என்பியர்ப் போத்தல், ஆஸ்ரேக்குப் பதிலாக
பியர்ப் போத்தல் மூடியில் தட்டிய சாம்பல், இந்தக்கட்டில்,நான்கு சுவர்கள்,கடிகாரம்,யன்னல், சிலோன் சூட்கேஸ் இவைகளைத்தவிர என்னுடையதென்று சொல்வதற்கும் என் இருப்பை முக்கியப்படுத்துவதற்கும் வேறு என்ன இருக்கு.
பக்கத்துச் சிற்றியில் உள்ளூரில் கூட்டுறவுச்சங்க மனேஜராய் இருந்த கணேசன் இப்படித்தான் என்னைபோன்று அகதியாய் வந்திருந்தவன். அவனைக் காட்டு வேலைக்கென்று சமுக நலத்திணைக்களம் அனுப்பிப் போட்டாங்கள். காட்டு வேலையென்றால் நாங்கள் நினைக்கிற மாதிரிச் சாமான்யமான வேலையில்லை.விறைச்சு நிற்கிற மரத்தைப் பெரிய மெசின் பொருத்திய வாளால் அறுத்து வீழ்த்திப் பட்டை களற்றி விட வேண்டும்.பிறகு அவங்கள் அதைவிறகுக்கோ அல்லது என்ன இழவுக்கோ அதைப்பாவிக்கிறாங்கள். யாருக்குத்தெரியும். ஒரு கிழமை செய்து போட்டுக் கையெல்லாம் காய்ச்சுப்போய் வீங்கிச் சோறு கூட அள்ளிச் சாப்பிட முடியாமல் திண்டாடி... வேண்டாமினிமேல் இந்த விபரம் கெட்ட வெளிநாடு என்று எழுதிக் கொடுத்துப் போட்டு திரும்பி ஊருக்குப்போய்விட்டானாம். ஆள் அங்கு செத்துதோ? பிழைச்சுதோ? ஆனால் என்ன? எங்கட மண்ணில எது நடந்தாலும் மனதிற்கு நிம்மதி.
எனக்கும் ஊருக்குப்போக ஆசைதான். ஆனால் மானம் என்று நாம் நினைக்கிற செட்டை கிடந்து போகாதே..போகாதே... என்று அடிக்கிறதே. 20 வருடங்களாக வெளிநாட்டில் இருந்தவன் பரதேசி மாதிரி ஊரில போயிறங்கினால்....அங்குள்ள நாய் பூனைகூட மதியாது. இதுதவிர வெளிநாட்டுக்கு வந்த புதிதில் நான் ரோட்டில நிற்கிற புதிசு புதிசான பென்ஸ்,B.M.W,அவுடி என்று நல்ல நல்ல காராய்ப் பார்த்துப் பக்கத்தில போய் நின்று போட்டோ எடுத்து அனுப்பினன். பொடியன் நாளொரு காரில திரியிறான் என்று வீட்டுக்காரர் ஒருபக்கம்,போட்டோவைப்பார்க்கிற ஊர்க்காரன்கள் ஒரு பக்கம் எத்தனை கதைகளைச் சுமந்து புலம்பியிருப்பர்.அந்த நல்லெண்ணங்களை முறியடிச்சு நான் வெறுவிலியாக வீடு திரும்பினால்...இப்போ வீட்டுக்கொருபிள்ளை வெளிநாடென்று வந்திற்றுதுகள்.இப்போ எல்லாருக்கும் எல்லாம் தெரியும். ஆனால் இப்பவும் உள்ளதை உள்ளபடி சொல்ல எல்லோருக்கும் தயக்கம்தான்.
மூலையில் சிறிய அசைவு. திரும்பிப் பார்க்கின்றேன். அடா அதுதானே பார்த்தேன்.இந்தப்பொல்லாத "கொக்குறோச்' பூச்சிகள் இது நான் வந்த காலம் தொட்டு அறைக்குள்ளே தடுமாறித் திரியும். ஈழத் தமிழரின் உளவாளிகளாக இந்த அரசால் விடப்பட்ட ஒற்றர்கள் போல நான் இல்லாத பொழுதுகளில் வந்து திரியும் இப்பூச்சிகள் இப்போ.... நான் இருக்கிற போதே வரத்தொடங்கிவிட்டன. அத்துணை இளக்காரமாக நான் ஆகிப்போனேன்.
எப்போதாவது இவன் சக்கரவர்த்திதான் என் அறைக்கு வருவான்.அவனுக்கும், பெயருக்கும் ஒருவித சம்பந்தமுமில்லை. மொட்டை அடித்திருப்பான்.ஆனால் குறுந்தாடி கீழே தொங்கும். ஹரே ராமா...ஹரே கிருஸ்ணா.. என்று வாய் ஓயாமல் சொல்லுவான். நன்றாகப் பாடுவான். வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் ஐந்து நாட்களுக்குமாக ஒரே நாளில் இறைச்சியை அவித்து வைத்திருப்பான். ஹரே ராமா..ஹரே கிருஸ்ணா....இயக்கம் என்கின்றாய்.
நீ மச்சம்,மாமிசம் சாப்பிடலாமா? விரதமல்லவா இருக்கவேண்டும் என்று கேட்டால் அது அவரவர் விருப்பம்,எம்மில் மரக்கறி சாப்பிடுவோரும் உண்டு.மாடு சாப்பிடுவோரும் உண்டு. சிற்றின்பம் மூலமும் பேரின்ப வீடு அடையலாம்.சன்னியாசி மூலமும் பேரின்ப வீட்டையடையலாமே அது போலவே இங்கு எதுவும் சரியென்பான்.அவனுடன் கதைக்கிற பொழுதுகளில் நானே என் தலைமுடியை பிய்த்துக் கொள்ளலாம் போலிருக்கும்.
காலம் எவ்வளவு வேகமாய், வெகு சூட்சுமமாய், வெளிநாடுகளில் போகிறது.சுள்ளித்தடியாய் வரும் போது வந்த நான் இந்த மடிப்பு விழுந்த தொந்தி,மயிர்கொட்டி மொட்டையாகி சுற்றிவர நரைத்த தலை, பார்வை மங்கும் கண்கள், என் நேரமும் கசிந்து கொண்டிருக்கும் மூக்கு என்று எல்லாம் வெளிநாட்டுப் பரிசுகள் தான். நேற்றுத் தை இன்று மார்கழி என்ற மாதிரிப் போகிறது வருடங்கள். ஞாபகசக்தியோ வரவரக் குறைந்து கொண்டே போகிறது. எல்லாவற்றையும் எழுதித்தான் வைக வேண்டும் என்பது போல மனம் ஏவும். ஆனால் எழுதிவைக்கப் பேப்பர் இருக்கிற நேரம் பேனா இருக்காது..பேனா இருக்கிறவேளை பேப்பர் கிடையாது. எல்லாவிவகாரங்களும் தட்டுப் பட்டுக்கொண்டே போகிறது. நான் படுக்கிற மெத்தையைத்
திரும்பிப் பார்க்கின்றேன். பாறங்கல்லினுள் அகப்பட்டு நசுங்கிப் போய்க் கிடந்த பற்றைக் குவியலைப்போல அலுங்கி,நசுங்கிக்கிடந்தது அது..வருடமொருமுறை சமூக நலத்திணைக்களம் புதிய கட்டில்களை மாற்றும் என்று சொல்லப்பட்டாலும் மெத்தையே கதியென்று உட்கார்ந்த எனது கட்டில் நடுவே பதிந்து நாளும் என்னைப் படாத பாடுபடுத்தி வைக்கின்றது.இதை விரைவில் மாற்றச் சொல்லவேண்டும்.ஆனாலும் சமூகநலத் திணக்களம் வருடம் ஒரு தடைவைதானென்று பல்லவி பாடி என் வாயை அடைத்து விடுவார்கள். அவர்கள் சொலவதிலும் நியாயம் இல்லாமலில்லை. வேலையில் அரைவாசிநாள் ,கடைகளில் அரைவாசி நாள், குளத்தங்கரைகளிலும், கடற்கரை ஓரங்களிலும் மீதிநாளென்று வாழ்கிற, உழைக்கத்தெரிந்த இந்தமனிதர்கள் படுக்கிற நேரம் மிகக் குறைவு. ஆனால் நான்.... ஒரு நாளில் இருக்கின்ற 24 மணி நேரமும் மெத்தைக்குப் பாரமாய் உட்கார்ந்திருப்பதை எப்படி சமூக நலத்திணைக்களத்திடம் விளங்கப்படுத்துவது. குளி விழுந்த மெத்தையினுள் குப்புறப்படுத்துக் குலுங்க்கிக் குலுங்கி அழவேண்டும் போலிருக்கும். ஆனாலும் நான் ஆண்மகன். அழக்கூடாது....
மனம் வைராக்கியமாய் ஒத்து ஊதும்.
கிறிங்.. கிறிங்... மூலையில் உயிரற்றுச் சவமாய்க் கிடந்த தொலைபேசி காக்கா வலி கண்டதுபோல் விட்டுவிட்டுக் கீறீச்சிட்டது. ஓடிச்சென்று காதில் பொருத்துகின்றேன் பேச்சுவருவதற்குள் மறுமுனையில் இருமல். ஓ..நடேசண்ணை.....யானை வரும் பின்னே..மணியோசை வரும் முன்னே என்பது போல இருமல் என்றால் நடேசண்ணைதான் என்று இங்குள்ள எல்லோர்க்கும் தெரியும்.இந்த மனிதன் வாரத்தில் ஒரு தடைவை எண்டாலும் போன் எடுக்கும்.காசு கொடுத்துவிட்டால் ஆசியன் கடைமீன்,நண்டு,கணவாய் என்று வாங்கிக் கொண்டு வரும். சமையற் கலையின் சுளுவான நுட்பங்களையெல்லாம் அந்தாளுக்கு அத்துபடி. வாய்க்கு ருசியாய்,காப்புக் கையினாலே சாப்பிடுவது போல நடேசண்ணை சமைக்கிற நாட்களில தான் என்று அவரோடு இருக்கிற பொடியள் பெருமையோடு சொல்லும் போது மகிழ்ச்சி தாங்காது நடேசண்ணை மேலும் மேலுமாய் இருமுவார்.
வெளியே காற்று ஊ...ஊ.. என்று பலமாக வீசித் திறந்திருந்த யன்னல் வழியாகப் பேயின் இரைச்சலை உள்ளே தள்ளியது. பொறுங்க நடேசண்ணை யன்னலைச்சாத்தி விட்டு வாறன் என்று போன எனக்கு ஏதோ எரிந்து மணப்பது போல மூக்கு நுகர்ந்தது.அண்ணை ஏதோ எரிந்து மணக்குதண்ண...கொஞ்சம் நில்லுங்கோ..தொலைபேசியைவத்துவிட்டுக் கதவைத் திறக்கின்றேன்.வெளியே ஒரே புகைமண்டலம்.
கீழ்ப்படிகளில் தாவி இறங்குகின்றேன்.கீழ்ப்பக்கம் பெரும் நெருப்புச் சுவாலைகள் மிளாசி எரிந்து கொண்டிருந்தது. நான் பயத்துடன் ஐயோ எனக்கத்தியபடிமேலேஓடுகின்றேன்.அண்ண வீடு எரியுதண்ண... உடன வாங்கோ..துண்டிக்காதிருந்த தொலைபேசியில் சொல்லிவிட்டு வெளியே ஓடி வந்தேன். மூச்சு முட்டியது.நின்று நிதானிக்க நேரமில்லை. எந்த நிமிடமும் இந்த அறையினுள்ளும் தீயின் நாக்குகள் தாவிப் பஸ்பமாக்கிவிடப்போகின்றது. .. அனல் கங்கின் கொடு பயத்தினால் கண்கள் உறைந்து போயிற்று. இந்த அனல் கங்கின் கொடுமையினுள் வெந்து அன்னிய பூமியில் அகதியாய்ச் சாகவா நான் பிறந்தேன்... இல்லை.. இல்லவே இல்லை.. உணர்வு நெற்றியில் இடிக்க பக்கவாட்டுச் சரிவுக் கரையோரமாக குசினிப்பக்கம் ஓடுகின்றேன். கதிரையை இழுத்துவிட்டு புகைபோக்கிக்கு அண்மையில் உள்ள பலகையை உடைத்து மேலேறுகின்றேன்.
தட்டுத்தடுமாறி கூரைக்கு வந்தாயிற்று. கூரை ஓடுகள் கால்வைக்க கால்வைக்க சரசரத்துக் கீழேவிழுகின்றன.மேலிருந்து கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது.எல்லாம் பொடிப்பொடியாகிப் பஸ்பமாகிப் போய்விடும். நத்தாரும் அதுவுமாய் எல்லாம் வல்ல கர்த்தர் என்னைக் கைவிட்டு விட்டாரா????
கண்கள் குளமாகின.."சாந்தா கிளாஸ்" எனப்படும் நத்தார்ப்பாப்பா வரும் புகைபோக்கிப் பக்கமாய் கண்ணைத் திருப்புகின்றேன். ஏதும் அதிசயம் நிகழ்ந்து என்னை யாராவது காப்பாற்ற இயலுமா??
நம்பிக்கைகள் யாவும் செத்துப் போயின.கண்ணைமூடித்திறக்கின்றேன். என்ன அதிசயம்!!!.புகை போக்கியை அண்மித்து நிலம் வரைக்கும்போகக்கூடிய பெரிய குழாய் ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. நல்ல வேளை தவழ்ந்து தவழ்ந்து புகை போக்கியை அடைந்து
குழாயைக் கட்டிபிடித்தபடியே ஒரு வழுக்குக்கம்பத்தில் வந்தது போல நிலத்தையடைகின்றேன்.கையிற் சிறிய சிராய்ப்புகள்.கர்த்தர் என்னைக்கப்பாற்றிவிட்டார். நான் கீழே போகவும்,அம்புலன்ஸ் , தீயணக்கும் வாகனங்கள்,நடேசண்ணை, நகர்காவலர்கள் என்று யாவரும் வரவும் சரியாயிருந்தது. இதற்குள் வீட்டின் கூரை சரிந்து வீழ்ந்து தரைமட்டமாயிற்று. வீட்டுக்காரன் காப்புறுதியில் பணத்தை அறவிடுவான்...நாங்கள்??..அவுஸ்லான்டர் றவுஸ் எண்டு நினைக்கிற நாஜிகள் செய்த வேலை இது... நடேசண்ணை தளுதளுத்த குரலில் குமுறினார்.சமூக நலத்திணக்களம் எனக்கு இதோடு புதிய கட்டில், மெத்தை தந்துவிடும் என்பாடும் கொண்டாட்டமே.. என்னைக்காப்பற்றிய கர்த்தருக்கும்,எனை எரிக்கத் துடிக்கும் நாஜிகளுக்கும் தோத்திரம்.... நான் சிரிக்கின்றேன்....

நிறைவு

1 comment:

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter