மௌன அஞ்சலி.....
மா.சித்திவினாயகம்
கடல்களைக்கடந்தும்
தரைகளைக்கடந்தும்
வான்மீதேறி
மேற்குப்புலத்தில்
நான்
யாசிக்கத்தொடங்கி.......
26,வருடங்கள்
6,மாதங்கள்
20, நாட்கள்
3,மணி,28,நிமிடம்
18, நொடித்துளி
இன்றைய பொழுது
இன்னமும் இருட்டவில்லை.
என்றாலும்
இந்தநாளையும்
நேற்றைய நாளைப்போல்
இந்த அன்னிய தேசம்
தின்று முடித்துவிடும்.
புதுப்புதுநகர்களில்
இரவிரவாய்....நடைநடையாய்.....
கட்ட்டிடம்விட்டுக் கட்டிடம் மாறிக்
காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது
என் உயிர்.
மாறிமாறிப் பயணித்து
எனது பதிவுக் கோப்புகள்
உப்பிப்பெருக்க
நானோ மெலிந்து சுருங்கினேன்.
மனவிரக்தியில்
மதுப்பருகி-பிறகு
அதுவே விருப்பாகி
மேற்குப்பனிக்குள்
மணம்முடித்து
மழலைபெற்று
பெயர்தெரியா மொழியினில்
சந்ததி பெருக்கி
நிர்மூலமாகு என்று
சபிக்கப்பட்டுப் போனது
என் வாழ்வு
அந்தகனாய் இருந்த என் முப்பாட்டன்
பாடிப் பரிசு பெற்ற யாழ்ப்பாணம் போல
இப்போ
வெளிநாட்டில் கூவிக் குடியுரிமைப்
பரிசில் பெற்ற வாரிசு நான்.
பாதுகாப்பென்று
நான் ஓடிநடக்கும் இந்தமண்ணில்
அடாவடியாகப்
புதைக்கப்பட்ட
இந்தமண்ணின்-மூத்த
சந்ததியாம்
செவ்விந்தியரின்
எலும்புகள் மீது
இன்றைய நாளில்
எந்தன் இருத்தல்,
அழுவதா? சிரிப்பதா?
இப்படித்தானே
என்னூர்
மண்ணிலும்
என் சகோதர உறவுகள்
விழுந்து,விழுந்து
புதைந்து மறைந்தன.
இப்படித்தானே
என்னினம் முழுக்க
அன்னியச்சக்திகள்
அகதியாக்கியும், அழித்தொழித்தும்
துடைத்தெறிந்தது.
இப்படித்தானே
பாதுகாப்பென்று உலகம்
கூறிய பச்சைப்பொய்யில்
என் இனம் முழுக்க
ஊருலகெங்கும் கைகளை ஏந்தி
அகதியாகி அடைபட்டுப்போனது.
மீண்டும்
எல்லாம் எழும்
என்ற பழங் கணக்குத்தப்பி
இப்போ
எல்லாம் விழுந்த பின்னும்
நான் தொலைத்த வாழ்வை
மறுபடியும்
திருப்புவேன் என்கிறது மனம்.
ஆனாலும்
மதுகிண்ணத்தோடு தூங்கி
மறுநாள் விழிக்கையிலே
வேலை விரட்டும்.
வீட்டுக்கடன் எமை நசிக்கும்.
மீதமான நாளில்
செவ்விந்தியரின்
பூர்வீகமழித்துப் புதைக்கப்பட்ட
அவர்களின் மண்ணில்
எம்மை அகதியாக்கிய
கொடுங்கால் நக்கி நான்
என்ஊரில் இறந்தவர்க்காக
மௌன அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றேன்.
நன்றி: ஈழநேசன் இணையத்தளம்
No comments:
Post a Comment