நீண்டதுயில் கொண்டார்
நெடுந்தீவின் கவிக்கோமான் அமுது !
கவிஞர் மா.சித்திவினாயகம்
"இளவாலை அமுதமெனும் இனிய கவி மறைந்ததுவோ?
எத்திக்கும் கவி இசைத்த எங்கள் குயில் உறங்கியதோ?"
இந்துமா சமுத்திரத்தின் முத்தெனக்கிடக்கும் இனிய என் நெடுந்தீவில் உலகம் வியக்கும் ஒப்பற்ற மகான்கள் பிறந்து பூவுலகிற்கு புகழ் சேர்த்துப் போயிருக்கிறார்கள்.பூவுடல் அழிந்தாலும் புகழுடல் அழியாத இந்த மகான்களின் வரிசையில் எம் நெடுந்தீவு அன்னை ஈன்ற அருந்தவப்புதல்வர் வித்துவான், செவாலியர் அடைக்கலமுத்து அவர்களின் பிரிவுச் செய்தியைக் கேட்டபோது துக்கம் தொண்டையை அடைத்தது.
அமுதூறும் தேன்கவியை ஆங்கிலேய மண்ணில் பறிகொடுத்துவிட்டோமே என்ற அங்கலாய்ப்பு.
நெடுந்தீவு மண்தந்த ஈழத்தின் தலைசிறந்த மரபுக்கவிஞர் அவர். தமிழிலக்கிய உலகில் தனக்கெனத் தனியிடம் பிடித்துள்ள மூத்த கவிஞரான அமுதுப்புலவரவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் "வித்துவான்" பட்டத்தை பெற்றவர். அவரின் இலக்கிய சேவையைப் போற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ "டாக்டர்" பட்டம் கொடுத்துக் கௌரவித்தது. அதுமட்டுமன்றி,பாப்பரசரினால் இலக்கிய சேவைக்காக, "செவாலியர்" விருதளித்துக் கௌரவிக்கப்பட்ட பெருந்தகை இவர். அன்னார் 1984லிருந்து இங்கிலாந்தில் வசித்தபோது, இலங்கை விவசாயப்பகுதி நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு க. வரதராசா அவர்களின் அழைப்பை ஏற்றுக் கனடா வந்திருந்தார். அச்சமயம் அவருக்கு நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் மகத்தான வரவேற்பை "தமிழமுதமாலை" என்கின்ற பெயரில் கனேடிய நகராட்சி மண்டபத்தில் நடாத்தியது. அவ்விழாவில் அவரும், மற்றும் கனேடியத் தமிழ்ப் பெரும் கவிஞர்களும் பங்கு கொண்ட கவியரங்கில் கவிஞர்களை அறிமுகமாக்கி வைக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.அது தான் நான் முதற்தடைவையாக அவரைச் சந்திக்க நேர்ந்தது. ஆயினும் பல நாள் பழகிய உற்சாகம் மனதினில் இழையோடியது . நானும் அவரும் ஒரே ஊர் என்பது மட்டுமல்ல அயலவர்கள் என்பதும் அம்மகிழ்விற்கு காரணமாயிருக்கலாம். அன்பான ,நகைச்சுவை கலந்த அவரது பேச்சு எல்லோரையும் சிந்திக்க வைக்க வல்ல மாமருந்து. இளவாலையைப் புகுந்த இடமாகக்கொண்ட கவிஞர் அடைக்கலமுத்து அவர்கள் பிற்காலத்தில் அவரது வாழ்விடமாகத் திகழ்ந்த இளவாலையையே தன்னுடைய புனைவுப்பெயராக்கி ‘இளவாலை அமுது’என்று இலக்கிய உலகிற்கு வெகு பிரசித்தமானார்.
ஏறத்தாள எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கியத் துறையில் முனைப்புடன் செயற்பட்டு வரும் அமுதுப் புலவரின் கன்னியாக்கம் 1938ம் ஆண்டு இலங்கையில் முதலாவது தமிழ்ப் பத்திரிகையெனக் கருதப்படும் ‘சத்தியவேத பாதுகாவலன்' எனும் பத்திரிகையில் ‘மாதா அஞ்சலி' எனும் தலைப்பில் பிரசுரமானதென்கின்றார் கவிஞர்..நெஞ்சே நினை, மாதா அஞ்சலி, இவ்வழி சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள், அன்பின் கங்கை அன்னை திரேசா, மடுமாதா காவியம், புனித அன்னம்மாள் ஆலய வரலாறு, அமுதுவின் கவிதைகள், இந்த வேலிக்கு கதியால் போட்டவர்கள், ஆகிய நூல்களையெல்லாம் எழுதியவர் அமுதுப் புலவர் அவர்கள் .சென்னை மணிமேகலைப் பிரசுரத்திற்கு நான் சென்றிருந்த வேளை ’இளவாலை தமிழ்க் கங்கை அமுது ஐயாவின் அற்புதப் படைப்புக்கள்" என்னும் தலைப்பில் கவிஞர் அமுது அவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தையும் தொகுக்கப்பட்ட அழகான புத்தகம் அச்சாகிறது என்ற மணிமேகலை அதிபர் ரவி தமிழ்வாணனின் கூற்றைக் கேட்டுப் புளகாங்கிதமடைந்தேன். 1600 க்கும் அதிகமான பக்கங்ளைக் கொண்ட இந்த நூலின் வெளியீட்டு விழாவோடு அமுதுப் புலவருக்கு மூதறிஞர் பட்டமளித்துப் பாராட்டும் விழாவும் மாசிமாதம் ஏழாம் திகதிதான் (07.02.2010) வெகு சிறப்பாக லண்டனில் அவரது 92வது வயதில் நடந்தேறியது என்கிறார் அவரை நன்கறிந்து வைத்திருந்த நூலகர் மற்றும் எழுத்தாளர் செல்வராசன் அவர்கள். இவைமட்டுமன்றி மானிடகுலத்தின் மகத்தான வெற்றியாளர்களை கண்டு விருதளிக்கின்ற கனேடியத் தமிழர் தகவல் நிறுவகம் கூட அவருக்குச் சாதனையாளார் விருதினை வழங்கிக் கௌரவித்திருந்தது. வீட்டிலும், நாட்டிலும் இரத்தத்துளிகள். தமிழன் என்ற வேருக்கே கோடாரி வைக்கப்பட்டது. இடம்பெயர்ந்து இங்கிலாந்துக்கு வரவேண்டியதாயிற்று. ஒரு ஒற்றைத் தாளைத் தானும் உடன் கொண்டு வந்தால், இடையே உள்ள இருபது தடைமுகாம்களிலும், ஆபத்தை விலைக்கு வேண்டுவதாய் முடியும். இந்த நிலையில் நான் நீண்ட காலமாகத் தேடித் திரட்டிய நூல்களையும், எனது கவிதைக் கோவைகளையும், என் இல்லத்தில் விட்டுப் பிறநாடு வந்து சேர்ந்தேன் என்கின்ற அவரின் வாக்குமூலம் ஒட்டுமொத்த தமிழ்சமூகத்தினுடைய கையறுநிலைக்கும் ஓர் கண்ணாடி.
தன்கைப்படக் கையெழுத்திட்ட அன்னைதிரேசாவின் காவியத்தை நான் அவரிடம் இருந்து பெற்று மகிழ்ந்த கணங்கள் மகத்தானவை. அன்னை திரேசா என்ற பெயர் பலருக்குத் தெரிந்திருந்தாலும் அந்த மதிப்புமிக்க பேரன்னையின் தியாகத்தை அந்தப் பெயருக்குள் இருக்கும் அன்னையின், துறவின் மகத்துவத்தை, அவரின் தாளாத பணிகளைத் தெரிந்தவர்கள் வெகு சிலரே. அவரின் வாழ்க்கையை அற்புதமாக இனிய தமிழில் நூலுருவாக்கிய பெருமை எம் நெடுந்தீவகத்துக் கவிக்கோமான் அமுது அவர்களையே சாரும். கத்தோலிக்கத் துறவியாக அழைப்புப்பெற்று ஆசிரியராக இந்து, முஸ்லீம் மற்றும் பல்மத மக்களிடையே தொண்டாற்றியவேளை வாழ்வின் விளிம்பு நிலையில் நின்று தவிக்கும் அடிநிலை மட்ட மனிதர்களை அரவணைத்தெடுத்த அன்னை திரேசாவின் வரலாறு எமது இக்காலச்சந்ததிக்கோர் அறவழிகாட்டி.
ஈழதேசியத்திற்காகவும்,தமிழர்தம் விடிவிற்காகவும் அயராது உழைக்கின்ற, பழக இனிய பண்பாளர் ரொறன்ரோ பல்கலைக்கழக மறையியல் விவுரையாளர் அடிகளார் சந்திரகாந்தன் அவர்களின் தந்தையார் இவர்.எவரோடும் அன்போடும், பண்போடும் பழகிக்கொள்ளும் புலவர்மணி இளவாலை அமுது ஐயா அவர்களின் மறைவு தமிழ் இலக்கியத் துறைக்கே பேரிழப்பாகும். வரலாற்றின் பக்கங்களினின்றும் அவரின் செயற்க்கரிய வாழ்வுஎன்றைக்கும் மறையாது.
அன்னாரின் ஆத்மா சாந்திக்காகப் பிராத்திப்போம்..
"கவிஞரே கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுங்கள்; தேவனுக்குள் உங்கள் ஆத்மா களிகூர்ந்திருக்கிறது"
No comments:
Post a Comment