தமிழர்களே தமிழைப் புறக்கணிப்பார்களேயானால் தமிழ்மொழி உரிமையை நிலைநாட்டுவது எவ்வாறு? [ தினக்குரல் ] - [ Jun 19, 2010 ]
றோயல் கல்லூரி அதிபரும்,கொழும்புத் தமிழ்ச்சங்கக் கல்விப் பணிக்குழுச் செயலாளருமாகிய மா.கணபதிப்பிள்ளை அவர்களின் தலைமையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற "கடந்த 62 ஆண்டுகளில் எங்கள் வாழ்வு ஒரு மீள்பார்வை" எனும் நிகழ்வில் தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாம் தரக் குடிமக்களாக விளங்குகின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது தமிழ் மொழிக்கு உரிய நிர்வாக உரிமை இல்லாதிருப்பதேயாகும். தமிழ் மொழியை தமிழனொருவன் தனது அன்றாடக் கடமைகளை ஆற்றிக்கொள்ளவும் அரசாங்க தொடர்புகளை தடையோ தாமதமோ இன்றி மேற்கொள்ளவும் வழியிருந்தால் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி சம உரிமை வழங்கப்பட்டிருந்தால் அது நடைமுறையில் செயற்படுமாகவிருந்தால் இந்த நாட்டில் இனசமத்துவம், ஒற்றுமை பேணப்பட வழியேற்படும். இன உறவும் வலுப்பெறும். என்று அங்கு உரையாற்றிய அகில இலங்கை இந்து மாமன்றத்துணைத் தலைவர் தர்மலிங்கம் மனோகரன் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;
தமிழ் மக்கள் தமக்குரிய மொழியுரிமையைப் பயன்படுத்த வசதியிருந்தும் பயன்படுத்தாது புறக்கணிப்பது காணப்படுகிறது. எடுத்துக்காட்டாகக் கொழும்பு மாநகரின் நிலையைக் கூற முடிகின்றது. கொழும்பு மாநகரில் வாழ்பவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள். தமிழ் மொழிக்கு நிர்வாக மொழியுரிமை சட்டப்படி வழங்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டன. ஆனால், தமிழ் மக்கள் இந்த மொழி உரிமையைப் பயன்படுத்துவதில்லை. உதாசீனப்படுத்துகின்றனர். இது உண்மைநிலை.
கொழும்பு மாநகரில் வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள வங்கிகளில் இடம்பெறும் செயற்பாடுகள் இதற்குப் பொருத்தமான எடுத்துக்காட்டாகும்.
வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் தமிழ் தெரிந்த தமிழர்கள். பெரும்பாலும் வங்கிகளின் முகாமையாளர்களும் தமிழர்களாகவே உள்ளனர். போதிய அளவு தமிழர்களும் வங்கிகளில் அலுவலர்களாகப் பணியாற்றுகின்றனர். வங்கியிலுள்ள சகல படிவங்களிலும் தமிழும் இடம்பெற்றுள்ளது.
ஆனால், தமிழ் மக்கள் தமிழைப் பயன்படுத்துவதில்லை. தமிழைப் புறக்கணிக்கின்றனர். இதுவே உண்மை நிலை. ஆங்கிலத்தில் எழுதினால் தான் தமது பணம் வைப்பிலிடப்படும். அவ்வாறே ஆங்கிலத்தில் எழுதினால்தான் பணத்தை மீளப்பெறலாம் என்ற பொருத்தமற்ற சிந்தனையில் சிக்கியுள்ளனர் நமது தமிழ் மக்கள்.
உரிமை இருந்தும் வசதியிருந்தும் தமிழர்களே தமிழைப் புறக்கணிக்கும் போது எவ்வாறு தமிழ் மொழியின் உரிமையை நிலை நாட்டுவது?
முடிந்தவரை தமிழ் மக்கள் சகல நிலைகளிலும் தமிழ் மொழியைத் தமது அன்றாடக் கடமைகளில் தேவைகளில் பயன்படுத்தினால் மட்டுமே தமிழுக்கு வாழ்வுகிட்டும். வளம் கிட்டும். நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்ப்போமானால் தமிழ் மொழியின் உரிமை ஒருபுறம் மறுக்கப்பட்டது என்பதையும் தமிழர்களாகிய நாமே தமிழைப் புறக்கணித்துத் தமிழ் மொழியை ஒதுக்கிவந்த,வரும் நிலையைக் காணமுடிகின்றது.
மொழி ஓரினத்தின் உயிர் நாடி. இருப்புக்கு, வாழ்விற்கு, கௌரவத்திற்கு ஆதரமானது. அதனால், தமிழை வாழவைத்து, வளப்படுத்தி, செயற்படுத்த வேண்டிய பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். தமிழர்களே தமிழைப் புறக்கணிக்கும் அவல நிலையை அகற்ற தமிழர்களே முன்வர வேண்டும். அப்போதுதான் தமிழ் இந்த நாட்டின் ஆட்சி மொழியாக இடம்பெறும். தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழவும் வழியேற்படுமென்று தெரிவித்தார்.
இந்நிகழ்விற்குத் தலைமைதாங்கிய கொழும்புத் தமிழ்ச்சங்கக் கல்விப் பணிக்குழுச் செயலாளர் மா.கணபதிப்பிள்ளை தனதுரையில்;
நம்மை நாமே புரிந்துகொண்டு நாம் விடும் தவறுகளைத் திருத்தி சரியான பாதையில் செல்ல வேண்டும். சமுதாய வழிகாட்டிகளாகச் செயற்படுபவர்கள் சமூகம் பெற்றுக்கொள்ள வேண்டிய உரிமைகள் தொடர்பில் தெளிவான கருத்துள்ளவர்களாகச் செயற்பட வேண்டும்.
சொந்த வாழ்க்கையிலும் செயற்பாட்டிலும் கூட நிதானமாக, ஒழுக்கமாக , துணிவுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும். வழிகாட்டிகள் வழிதவறினால் சமுதாயமே தனது வாழ்வுரிமையை, மரியாதையை இழந்துவிடும். கடந்து வந்த காலத்தில் நமது வழிகாட்டிகளில் பலரின் பொறுப்பற்ற, கண்ணியமற்ற செயற்பாடுகள் இனத்தின் பின்னடைவுக்குக் காரணமாயமைந்துவிட்டது என்ற உண்மை உணரப்பட்டுத் தெளிவான சிந்தனையுடன் செயற்படும் வழிகாட்டல் அமைய வேண்டும். அது காலத்தின் கட்டாயத் தேவை என்றார்.
நன்றி: தினக்குரல்
No comments:
Post a Comment