Thursday, January 10, 2008

வாழப்பிறந்தவன்.


ஊரைக் கொழுத்திய
உவகையில் மகிழும்
"நீரோ"மன்னர்கள்
பிடில் வாசிக்கின்றார்கள் !
இன்னமும்....நீ
கைகட்டி....வாய் பொத்தி...விழிகள் பிதுக்கி.....

"ரொறன்ரோ"த் தெருவின்
முச்சந்தி மூலையில்
முப்பதாம் மாடித்தொடரடுக்கொன்றில்
மூச்சுக்காற்றும்
வெளிவரா வண்ணம்
முகத்தைச் சுழிக்கும்மனிதனே கேள்!

விழிகள் இருந்தும்...
விழிக்காதின்னும்
இறுகமூடிய
என்னரும் தோழனே!
புத்தியிழந்த மண்டையில்
இன்னும் மயிர்கள் சுமந்து
மகிழ்ந்து திரிவதேன்?
சோர்ந்து கிடக்கும்
முகத்தை நிமிர்த்தி
முஸ்டி உயர்த்து - நீ
வாழப் பிறந்தவன்!

விறைக்கும்
கொடியபனிக்குளிர் தட்டி
மெல்லிய அலகில்
உணவு பொறுக்கிடும்
புறாக்களை விடவும்...
உறைந்த பனியினுள்மீனுக்கலையும்
துருவச்சேற்றுக்கரடியை விடவும்
உயர்ந்து போனமனிதப்படைப்பு!

நிமிர்ந்து நில்!
இது உன் காலம்!!
மெல்லிய தென்றலின்
வருடலே வாழ்க்கை!

ஓடும் இரயினில்குதித்துயிர் போக்கவும்
உச்சித் தொடரில்இருந்து குதிக்கவும்
எருமையைப் போலதண்ணீர் தேடி
மதுப்புட்டிக்குள்
உயிரைத் தொலைக்கவும்...
நண்பனே!உனக்கெவன் - இங்கு
எழுதினான் இவ்விதி?

குரல்வளை நசிக்கும்
கொடும் கரம் விலக்கி
முஸ்டி உயர்த்து!
முரண்பாட்டுக்குள்ளும்வாழ்ந்து
முடிப்பதேமனித தத்துவம்!
எழுக தோழனே!!
தலைகளைப் பறிகொடுத்தோர்!!

உண்மையிலேயே
அந்தப்பலசரக்குக் கடை
விளம்பரங்களைப்
படித்துப்பார்த்ததில்
மிக...மிக...சர்ச்சைக்குரியதாகவும்....
சஞ்சலப்படுத்துவதாகவும்...
பயப்பட வைப்பதாகவும்...
இருந்தது!

தலையுள்ள இறால்களை விட
தலையில்லா இறால்களுக்கும்
தலையுள்ள நெத்தலிகளை விட
தலையில்லா நெத்தலிகளுக்கும்
அதிகவிலையும்
அதிக மவுசும்
எனஅந்த விளம்பரங்கள் -
என்னைக்குழப்பி விடுகின்றன!

தலைகள் இருப்பதே
கேவலமாகவும்
கௌரவக் கோளாறாகவும்
உணருகிற நாட்கள் இது !

மண்ணுள்
புதைந்தபாறாங்கல்லெனச்
சிந்திப்பதையே
மறுதலித்தெறிந்து
பழைய பித்தலாட்டக்காரர்கள்...
காலம் காலமாக
விரித்துப் போட்டிருக்கிற
கட்டுக்கட்டான
பொய்ப் பந்தல்களின் மேல்
தலையே இல்லாமல் - நீதத்தி நடக்கலாம்!
படுத்து உறங்கலாம்! குந்தியிருந்து
பஞ்சாயத்துநடத்தலாம்!
தங்கு தடையற்று - வெறும்வாய்ப்பந்தல் போடலாம்!
உரலில் போட்டதானியம் போல
உன் இனத்தை - நீயேகுத்தி எரிக்கலாம்!
அழுது புரண்டெழும்வாழ்விற்கு
அர்த்தமிருப்பதாய் புரட்டுக்கூறித்
தீபாவளி ,பொங்கல், புதுவருசம் எனச்சலிப்புகளை உற்சாகங்களாக்கி
வியாபாரமாய் விற்றுத்தள்ளலாம்!

பிரபஞ்சத்திற்கான
புதிய சங்கீதங்களைச்
சுடுகாடாக்கி விட்டு அடுத்தவன்
பிரக்ஞையைஉன் பிரக்ஞை
என்றுவாதிடும்உனக்கு - வட்டமாய் திரண்ட ஓர்தலையிருந்தென்ன?
இல்லாமலிருந்தென்ன??

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter