Sunday, February 17, 2008
கனடாவில் எழுத்தாளார் இணையம் நடாத்திய
கவிப்பெருநிகழ்வில் கலந்து கொண்ட
கவிஞர் மா.சித்திவினாயகத்தின் கவிதை இது.
மாசி 16 ந்திகதியன்று இடம் பெற்ற
அந்நிகழ்வில் கவிஞர்கள் உதயன் லோகேந்திரலிங்கம்,
செழியன்,சித்திவினாயகம்
காலம் செல்வம்,கோதையமுதன்,அனலை ராஜேந்திரம்,
புகாரி ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.

நிழல் தேடி வந்தோர் வாழ்வில் !!!

மாசி மாதத்து
மகிழ்வான கவிநிகழ்வில்
துள்ளுகிற நெஞ்சத்
துடிப்போடு கூடியுள்ள
வல்ல கவியுலக வேந்தர்களே !!
கனடா எழுத்தாளர் இணையத்துத்
துடிப்பான நண்பர்களே !!
தேன்தமிழைக் குழைத்துத் திரட்டிப்
புதுமைக் கவிவார்க்கும் தலமைக்கவியே !!
மற்றும்
கலையார்வம் கொண்ட நண்பர்களே,நண்பிகளே
உங்கள் எல்லோர்க்கும்
எந்தன் இனிய வணக்கங்கள் !!!
அள்ள அள்ளக் குறையாத
பனிச்சறுக்கல் நாடிதனில்
அலைகின்றேன்......அலைகின்றேன்...........
நிழல் எதுவும் தெரியவில்லை.
கண்காணும் இடமெல்லாம்,
கைகுத்தும் வெண்பனிதான்
கால் விறைப்பு வேறு
கைக்குத்து ஒரு பக்கம்
மண்டை வலி வேறு
மயக்கம் தரும் கூதல்
என்ன குளிரப்பா
ஏங்குகிற நெஞ்சங்கள்
எந்த நிழலும் - எந்தன்
கண்ணில் தெரியவில்லை
உயிர் வாயு இழந்ததோர்
உற்பத்திச்சாலையுள்
ஓடி...ஓடி.. என்
வாழ் நாள் தொலைந்தது.
திரும்பும் திசையெங்கும்
குட்டப்படவும்
குட்டக்...குட்டக்....
குனிந்து கொடுக்கவும்
பக்குவமிக்கதோர்- அகதியாய்ப்
பனியின் திசையில்
குறுகி நடக்கின்றேன்!
பைத்தியம் என்னும்
பட்டமிடப்படா
"டெப்பிறஸன்" காரன் நான்.
நடக்குமெல்லாவற்றிலும்
நம்பிக்கையிழந்த
வெற்று நடைப்பிணம். -இங்கு
எனைத் தாங்கிப் பிடிக்க வல்ல எந்த
நிழலும் எனக்குத் தெரியவில்லை.
லட்சங்கள் செலவு செய்தும்
மிச்சங்கள் எதுவும் இல்லை.
திரைகடல் ஓடிச்சென்று
திரவியம் தேடு என்றார்.
நரைமுடி தவிர நாங்கள்
தேடியதென்ன இங்கே? அடா
நரைமுடி கூட மிஞ்சாதோர்
அனேகம் பேர்கள்.
நாடிழந்து வீடிழந்து நட்ட மரமிழந்து
வாழ்விழந்த தமிழருக்கு
வாழ்வளித்த நாடுகளை நான்
கொச்சைப் படுத்தவில்லை, ஆனாலும்
நெஞ்சைத் தொடுங்கள் !!
நியாயமாய் சிந்தியுங்கள் !!
இந்த நிழல்களிலே
நிம்மதியாய் மூச்சுவிடும்- எந்த
மனிதரையும் இங்கே நான் காணவில்லை.
எப்பக்கம் திரும்பிடினும்
ஏமாற்றுப் பொய்புரட்டு,ஏட்டிக்குப் போட்டி
சாதிப்பிளவு,சங்கங்கள் குத்துவெட்டு
ஆளுக்கொரு பேச்சு, நாளுக்கொரு கோவில்
வேளைக்கொரு கொள்கை என
தன்னினத்தைத் தானே தட்டிப்பிரட்டித்
தடுமாற்றி வைத்து விட்டு
நிம்மதிதான் இந்த நிழல்
என்பதெல்லாம் வீண் ஜம்பம்.
கசாப்பு(இறைச்சி)க் கடைக்காரன்
கொல்லாமை பேசுகின்றான்.
தட்டிப் பறிப்பவன்
தரும உரை நடாத்துகின்றான்.
நாலெழுத்து அறியாதோன்
நூலெழுதிக் குவிக்கின்றான்.
கண்ணற்ற கபோதி கதிரவனை வர்ணிக்க
சட்டமே படிக்காதோன்
சட்டத்தில் வல்லுனனாம்.
வைத்தியமே தெரியாதோன் இங்கு
அறுவை வைத்தியமே நடாத்துகின்றான்.
இப்படியே
தோலிருக்கச் சுளை விழுங்கும்
அமீத்குமார்(கிட்னி மோசடிக்காரன்) போன்றோர்க்கே
அரிய நிழலாய் ஆகியது இம்மண்.
மெய்களுக்கு மரண தண்டனைகொடுத்து
பொய்களுக்குப் பூமாலை
சூட்டிப்போகிறது இப்பாளும் பூமி.
இந்த இரவற் திண்ணைகளில்
இன்னும் எத்தனை நாள் நாங்கள்
குந்தியிருந்து குதூகலித்து
மகிழ்ந்திருப்போம்.
நிழலென நம்பி வந்த
நெடுமரத் தெருக்களெல்லாம்
நிழல்களை விழுங்கித் தின்ற
நெடுங்கதை நாமறிவோம்.
எங்களை வாரித்தின்ற
பெருங்கடற் கோளைப்போல
தமிழனின் வாழ்வைத்தின்ற
நிழல்களே அதிகம் என்பேன்.
நிழல்களை நம்பி நீங்கள்
நிஜத்தினை இழக்க வேண்டாம்.
நிழல்களை நம்பி நீங்கள்
சுயத்தினை இழக்க வேண்டாம்.
நிழல்பெரும் சுகம் என்று எண்ணும்
வார்த்தைகள் யாவும் நாளை
தமிழனின் சுயத்தைக் கொல்லும்
சூளையின் நெருப்பு ஆகும்.
ஈழக் கழுத்தில் இறுகப்பற்றிய
மலைப் பாம்பெனவே - இன்னமும்
இறுக்கும் தீரா இனவெறி.
யாழ்நகர்த்தெருவில்.......
வன்னி நிலத்துப் பெருவயற்பரப்பில்.....
மட்டுநகரின் மரங்களின் நிழலில்...............
திருமலைநகரக் கடற்கரை வெளியென...
குழிகளில் அழுகிய பிணங்கள் தோண்டியும்,
கருகி வெந்த பிணங்கள் புரட்டியும்,
கதறக் கதற உறவுகள் தேடி
ஓடிடும் நாளிது.
வெறி கொண்டலைந்து
வேட்டை நாயென
வீதிக்கு வீதியாய்
தமிழ் மானிடத்தலைகளைக்
குதறித் திரிகிற பேய்களின் நாட்கள்.
உண்ண உணவற்று உடுக்க உடையற்று
தவித்த விடாய்க்குத் தண்ணீரும் கூட அற்று
மூச்சு விடப்பயந்து பங்கருக்குள்
பேச்சற்றுப் போன பிழைப்பு.
வாய்ச் சவடால் போட்ட
வெளி நாட்டுக்காரர் எல்லாம்
பேச்சடக்கி,மௌனித்துப்
போய்ஒளிந்த பொல்லாத வேளையிது.
ஏ9 பாதையினால் பூசிமினுக்கிப்
பூப்போட்டவரெல்லாம்
ஆளுக்கொரு திசையில்
அகன்று விட்ட தருணம் இது
சாட்சிக்கும் மீட்சிக்கும்
எவரும் இல்லாமல்- இனி
எல்லாம் சரி..................இன்னும்
நெஞ்சத்துணிவோடு
நான் நினைப்பதனைப் பாடுதற்கு
இந்தப்புவி மீது எங்கும்
இடமில்லை.
பிறகென்ன.....................................
வேப்பமரங்கள் விறகாகிப்போக - மீதி
வரிசை...வரிசையாய்......
முள்முடி சூடிய அகதிராஜாக்கள்
மேபிள் மரத்துச் சிலுவைகளில் - குத்தும்
பனி ஆணிகொண்டு
தம்மைத் தாமே அறைந்து கொள்ளட்டும்.
தோப்பிழந்த குயிலாய் துருவப் பனிக்குளிரில்
ஆப்பிழுத்த குரங்கைப்போல்
அகப்பட்டஅகதிகளை
பாம்புக்குத் தலைகாட்டி மீனுக்கு வால்காட்டும்
பாசாங்குக்காரர்கள் பிய்த்துப் பிடுங்கட்டும்.
பாலைநிலஒட்டகமாய்- நாம்
பனிகுளிரில் கிடந்துழலும்
வேதனையைக் கண்டபின்பும்..........
நிழல் தேடிவந்தோர் வாழ்வு
நிச்சயம் விடியுமென்று சும்மா வீம்புக்கு
ஒரு கவிதைபாடி என்ன காரியம் நிகழும் இங்கு.
ஒற்றுமையில்லா வாழ்வு
ஒன்றுமேயில்லா வாழ்வு !
ஒற்றுமைக்கரங்கள் கோர்ப்போம் -இனிமேலாவது
உயருவோம் தமிழனாக !!!
............நன்றி...............

1 comment:

Anonymous said...

அன்பிற்கினிய ஈழக்கவிஞர் சித்திவினாயகம்

லட்சங்கள் செலவு செய்தும்
மிச்சங்கள் எதுவும் இல்லை.
திரைகடல் ஓடிச்சென்று
திரவியம் தேடு என்றார்.
நரைமுடி தவிர நாங்கள்
தேடியதென்ன இங்கே? அடா
நரைமுடி கூட மிஞ்சாதோர்
அனேகம் பேர்கள்.

அருமை இவ்வரிகள்
கவியரங்கத்திற்கு ஏற்ற நகைநடை (பகடிநடை?) சிறப்பு!


நாடிழந்து வீடிழந்து நட்ட மரமிழந்து
வாழ்விழந்த தமிழருக்கு
வாழ்வளித்த நாடுகளை நான்
கொச்சைப் படுத்தவில்லை, ஆனாலும்
நெஞ்சைத் தொடுங்கள் !!
நியாயமாய் சிந்தியுங்கள் !!
இந்த நிழல்களிலே
நிம்மதியாய் மூச்சுவிடும்- எந்த
மனிதரையும் இங்கே நான் காணவில்லை.

அழுத்தமாக அவலம் பேசும் இந்த வரிகளும் அழகு


எப்பக்கம் திரும்பிடினும்
ஏமாற்றுப் பொய்புரட்டு,ஏட்டிக்குப் போட்டி
சாதிப்பிளவு,சங்கங்கள் குத்துவெட்டு
ஆளுக்கொரு பேச்சு, நாளுக்கொரு கோவில்
வேளைக்கொரு கொள்கை என
தன்னினத்தைத் தானே தட்டிப்பிரட்டித்
தடுமாற்றி வைத்து விட்டு
நிம்மதிதான் இந்த நிழல்
என்பதெல்லாம் வீண் ஜம்பம்.

இது நம்மோடு கூட வந்த தமிழின உறவுகளின் கூத்துகளல்லவா?
பாவம் கனடா என்ன செய்யும்?


கசாப்பு(இறைச்சி)க் கடைக்காரன்
கொல்லாமை பேசுகின்றான்.
தட்டிப் பறிப்பவன்
தரும உரை நடாத்துகின்றான்.
நாலெழுத்து அறியாதோன்
நூலெழுதிக் குவிக்கின்றான்.
கண்ணற்ற கபோதி கதிரவனை வர்ணிக்க
சட்டமே படிக்காதோன்
சட்டத்தில் வல்லுனனாம்.
வைத்தியமே தெரியாதோன் இங்கு
அறுவை வைத்தியமே நடாத்துகின்றான்.
இப்படியே
தோலிருக்கச் சுளை விழுங்கும்
அமீத்குமார்(கிட்னி மோசடிக்காரன்) போன்றோர்க்கே
அரிய நிழலாய் ஆகியது இம்மண்.

இந்த வரிகளை நீங்கள் உங்கள் குரலில் உரத்து வாசித்தபோது வெகு அற்புதமாய் இருந்தது. பாராட்டுக்கள் கவிஞரே, அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்

இந்த இரவற் திண்ணைகளில்
இன்னும் எத்தனை நாள் நாங்கள்
குந்தியிருந்து குதூகலித்து
மகிழ்ந்திருப்போம்.

அருமையான கேள்வி சித்திவினாயகம்

நிழலென நம்பி வந்த
நெடுமரத் தெருக்களெல்லாம்
நிழல்களை விழுங்கித் தின்ற
நெடுங்கதை நாமறிவோம்.
எங்களை வாரித்தின்ற
பெருங்கடற் கோளைப்போல
தமிழனின் வாழ்வைத்தின்ற
நிழல்களே அதிகம் என்பேன்.
நிழல்களை நம்பி நீங்கள்
நிஜத்தினை இழக்க வேண்டாம்.
நிழல்களை நம்பி நீங்கள்
சுயத்தினை இழக்க வேண்டாம்.
நிழல்பெரும் சுகம் என்று எண்ணும்
வார்த்தைகள் யாவும் நாளை
தமிழனின் சுயத்தைக் கொல்லும்
சூளையின் நெருப்பு ஆகும்.

இவையெல்லாம் அருமை அருமை


ஈழக் கழுத்தில் இறுகப்பற்றிய
மலைப் பாம்பெனவே - இன்னமும்
இறுக்கும் தீரா இனவெறி.

அற்புதமான வரிகள் என்று நான் இவைகளைக் கூறுவேன்.
இதுதான் மெய்யறிதல். இனவெறி என்பது எவரிடமும் இருத்தல் ஆகாதுயாழ்நகர்த்தெருவில்.......
வன்னி நிலத்துப் பெருவயற்பரப்பில்.....
மட்டுநகரின் மரங்களின் நிழலில்...............
திருமலைநகரக் கடற்கரை வெளியென...
குழிகளில் அழுகிய பிணங்கள் தோண்டியும்,
கருகி வெந்த பிணங்கள் புரட்டியும்,
கதறக் கதற உறவுகள் தேடி
ஓடிடும் நாளிது.

வெறி கொண்டலைந்து
வேட்டை நாயென
வீதிக்கு வீதியாய்
தமிழ் மானிடத்தலைகளைக்
குதறித் திரிகிற பேய்களின் நாட்கள்.

உண்ண உணவற்று உடுக்க உடையற்று
தவித்த விடாய்க்குத் தண்ணீரும் கூட அற்று
மூச்சு விடப்பயந்து பங்கருக்குள்
பேச்சற்றுப் போன பிழைப்பு.

வாய்ச் சவடால் போட்ட
வெளி நாட்டுக்காரர் எல்லாம்
பேச்சடக்கி,மௌனித்துப்
போய்ஒளிந்த பொல்லாத வேளையிது.

ஏ9 பாதையினால் பூசிமினுக்கிப்
பூப்போட்டவரெல்லாம்
ஆளுக்கொரு திசையில்
அகன்று விட்ட தருணம் இது

சாட்சிக்கும் மீட்சிக்கும்
எவரும் இல்லாமல்- இனி
எல்லாம் சரி..................இன்னும்
நெஞ்சத்துணிவோடு
நான் நினைப்பதனைப் பாடுதற்கு
இந்தப்புவி மீது எங்கும்
இடமில்லை.

உணர்ச்சிகள் இங்கே உற்சவமே காண்கின்றன. ஈழத்துயர் அழுத்தமாய் பதிந்திருக்கிறது

முள்முடி சூடிய அகதிராஜாக்கள்
மேபிள் மரத்துச் சிலுவைகளில் - குத்தும்
பனி ஆணிகொண்டு
தம்மைத் தாமே அறைந்து கொள்ளட்டும்.
தோப்பிழந்த குயிலாய் துருவப் பனிக்குளிரில்
ஆப்பிழுத்த குரங்கைப்போல்
அகப்பட்டஅகதிகளை
பாம்புக்குத் தலைகாட்டி மீனுக்கு வால்காட்டும்
பாசாங்குக்காரர்கள் பிய்த்துப் பிடுங்கட்டும்.

கொதித்துக் கிடக்கும் உள்ளப்பதிவுகள் எரிமலைக்கு நிகர் கவிஞரே

ஒற்றுமையில்லா வாழ்வு
ஒன்றுமேயில்லா வாழ்வு !
ஒற்றுமைக்கரங்கள் கோர்ப்போம் -இனிமேலாவது
உயருவோம் தமிழனாக !!!

இந்த வரிகளால் நீங்கள் இதுவரை நின்ற உயரத்திலிருந்து எழுந்து அதிஉயரமாய் நிற்கிறீர்கள். ஓடிவந்த இடத்திலும் நமக்கு ஒற்றுமை இல்லை என்பதை உணர்வதே நிஜம். அதுதரும் எல்லா நிழல்களையும்.

தமிழனாக உயர நமக்கு ஒற்றுமை வேண்டும், அது ஊரிலும் இல்லை, ஓடிவந்த இங்கும் இல்லை என்றால் தவறு எங்கே இருக்கிறது?

உங்களின் தரமான கவியரங்க சுடுநீர் அருவிக் கவிதைக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

அன்புடன் புகாரி

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter