Thursday, March 20, 2008



மாயப் புதைகுழி!!!
மா.சித்திவினாயகம்

அவர்கள் சிரிக்கிறார்கள்,
அழுகிறார்கள் - பிணைகிறார்கள்......
ஒரு வில்லங்கமும் இல்லாதவர்கள் போல்...
குடும்பம் குடும்பமாகவும்....
கூட்டம் கூட்டமாகவும்.....
கொண்டாட்டமாகவும் -
குதூகலமாகவும்
கொண்டாடுகிறார்கள்.
அவர்கள் தேசத்திருந்து
ஏற்றுமதியாகி வருகின்ற
உயர்தரத் தேயிலைகளால்,
பரஸ்பர உறவுகளைப் பரிமாறிக்
கொள்கிறார்கள்.
கைகுலுக்கிக் கொள்கிறார்கள்...
கையடித்துச் சத்தியமிடுகிறார்கள்.
கட்டியணைக்கிறார்கள். - சிலர்
கலியாணமே கட்டிக் கொள்கிறார்கள்.
மதத்திற்காக காலிழந்தவன் -
எம்மதமும் சம்மதமென்கிறான்.
மொழிக்காக கையை அறுத்தவன்
எம் மொழியும் சமமென்கிறான்.
மேபிள் மரநிழல்களில்
வாட்டியெடுத்த பன்றிவிலாக்களுக்காக
ஒற்றுமையாக நீளுகின்றன
அவர்கள் கரங்கள்.
"மொழி மதம் கலாச்சாரம்
பண்பாடு என்பதெல்லாம்
ஒவ்வொரு தேவையினிமித்தமே"
என்கிறது அவர்களின் "பிக்ஸா"த்தட்டு.
ஜம்பெரும் வாவியின்
நீண்டு விரிந்த கரைகளெங்கணும்
நிர்வாணமாகிய மனிதரின் நெரிதல். இன்
நெருக்குவாரத்திற்கு நடுவிலும்
துண்டு விரித்து குந்தியிருந்து அவ்
அழகை வியக்கும் இவ்
விசாலப் பறவைகள்.
இப்படி
எல்லாம் சாத்தியமெனில்
மதத்திற்காக தடியெடுத்தவன்
மொழிக்காக முட்டி மோதியவன்
கலாச்சரத்திற்காக கண்ணையிழந்தவன்
பண்பாடு என்று பரம்பரை பரம்பரையாக
கோவணம் இறுகக் கட்டியவன்
எல்லாமே வீண் வீம்பு தானா?
சொந்த நாட்டுச் சுகங்களையெல்லாம்
துடைத்து வழித்துத் துவம்சமாக்கிவிட்டு
அண்டை நாடுகளில் தான் இவர்கள்
அகல விழி திறந்து கொண்டார்களாம்.
இவர்கள்
புதிதாய் சரித்திரம் படைப்பார்களாம்.
புலம் பெயர் இலக்கியம் வகுப்பார்களாம்.
சாதியற்ற சமூகம் எழுப்புவார்களாம்.
சொல்கிறார்கள்.
அண்டைநாடெங்கும்
இப்படித்தான் ஒவ்வொருமுறையும்
இவர்கள் பேசித்தொலைத்துவிட்டு
விமானமேறிய - பின்
ஒருவரை ஒருவர்
தெரியாதவர்களாகவும்,
புரியாதவர்களாகவும்
இனவாதப் புதைகுழியில்
புதையுண்டுபோகிறார்கள்
இவர்கள்..........எல்லைகளில்.............
----------------------------------------------------------------

No comments:

About Me

My photo
புலம்பெயர் இலக்கியத்தில் ஓர் அகதியின் புலம்பல்.

நட்புடன் பாலாவிற்கு !!!

இந்த வலை பிரசவிக்கக் காரணமாய் இருந்த
"பாலா" எனப் பரவலாக அறியப்பட்ட கம்யூனிசத் தோழர் பாலசுப்பிரமணியத்திற்கு நன்றி

FEEDJIT Live Traffic Feed

NeoCounter