கதைகளின் மாந்தர் !!!!!
மா.சித்திவினாயகம்
பூவுலகெங்கணும்
புலம்பி அலைந்தபின்.....
இறுதியாய் - நான்
"ரொறன்ரோ" நகரப்
பெருந்தெரு ஒன்றில் !!!
சபினா....மொனிக்கா....
சல்வடோர்....சலமோன்.......
நெருக்கியடிக்கும்
இவர்களினுள்ளே
"அகதி ராஜனாய்"
என்னையும் பதிந்தேன்!!!
அகதிக் கடைக்குப்
புதிய புதிய கதைகளின் மூலம்......
நடைபாதை போடும்
வியாபாரிகளிடம்
சூத்திரம் பயின்றேன்!!!
சமையல் பாகக்
குறிப்புகள் போல.....
ஆக்கி வைக்கப்பட்ட
அகதிக்கான அங்கீகரிப்புப்
பயிற்சிகளுக்காய்......
சட்ட வல்லுனரினதும் - அவர்
எடுபிடிகளதும்
வாசலுக்கலைந்தேன்!!!
மனப்பாடம் பண்ணிக்
கணித பாடச் சூத்திரம்
சொல்லும் பரீட்சையைப் போல
மனித நேயமெனும் போர்வையில்
அகதிப் பரீட்சை!!!
அகதிக்கான சூத்திரக்கதையை
அப்படியே ஒப்பித்து
விசாரணையெனும்
விசமப் பரீட்சையில்....நான்
அகதியாய் தேர்ந்தேன்!!!
முடிசூடாத இளவரசர்கள் போலவும்......
முறுவல் பூத்த இளவரசிகள் போலவும்.....
பூரித்துப் போனதோர்
"அகதி அந்தஸ்த்து"
பிறகென்ன........
என் வரண்ட நாவுக்குத் தண்ணீரும்......
காய்ந்த தலைக்கு வென்னீரும்......
வயிற்றுப் பசிக்குச் சோறிட்ட இடமெல்லாம்......
விழுந்து...விழுந்து...அடிமையாகினேன்!!!
மௌனம் திரையிட
மூச்சையடக்கி......
முடுக்கி விடப்பட்ட பம்பரமாகினேன்.
பேசுவதற்கான வார்த்தைகளோ.....
வாழ்வுச் சகடத்தின் அடுத்த நேர
உணர்வுகளோ....அல்லது அது குறித்த
விசும்பல்களோ கூட
என்னிடத்தில் இல்லை!!!
பூமிப் பரப்பில் - நான்
நகர்ந்த ஒவ்வொரு
அங்குலத்திலும்.....
ஆதாயமாகக் கற்றுக் கொண்டது
அடிமையாயிருப்பது எப்படி ?
என்பதைத்தான்...........
நிஜங்களை என்னால்
நிச்சயம் பண்ண முடியாதபடி
மனசாட்சியை மென்று
மௌனமாகிய - நான்
வெறும் கதைகளின் மனிதன்!!!
www.eelanation.com
நன்றி ஈழநேசன் இணையவலை
படம்:சங்கர்
1 comment:
nice one.keep it up
thulasi
Post a Comment